மொபைல் டேட்டா ஆன் செய்யப்பட்டதும், வாட்ஸ் அப் ஆன் லைனில் வந்தது.
“அரசியல் வட்டாரத்தில் மீண்டும் பேசுபொருளாகியிருக்கிறார் சசிகலா. விரைவில் பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து விடுதலையாகி வருவார் என்றும், அதன்பின் அதிமுகவில் மாற்றம் வரும் என்றும் பலரும் பேசிக்கொண்டிருந்த நிலையில் சசிகலாவுக்கு மேலும் ஒரு சிக்கல் உருவாகி விஸ்வரூபமெடுத்துள்ளது.
சசிகலா மற்றும் அவரது உறவினர்கள், நண்பர்கள் வீடு உள்ளிட்ட பல இடங்களில் 2017 டிசம்பர் மாதம் வருமான வரித் துறையினர் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர். இதுதொடர்பாக சசிகலாவின் உறவினர்கள் விசாரணைக்கும் அழைக்கப்பட்டிருந்தனர். சசிகலா தாக்கல் செய்த வருமான வரி விவரங்களை வருமான வரி அதிகாரிகள் மறுமதிப்பீடு செய்தனர்.
இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் சசிகலா தாக்கல் செய்த ரிட் மனுவுக்குப் பதிலளித்த வருமான வரித் துறை, பணமதிப்பழிப்பின்போது மதிப்பு நீக்கப்பட்ட 500, 1000 ரூபாய் நோட்டுகளைப் பயன்படுத்தி 2016 நவம்பர், டிசம்பர் மாதங்களில் 1674.50 கோடி ரூபாய் அளவுக்கு பல இடங்களில் அசையா சொத்துகள் வாங்கியதாகத் தெரிவித்திருந்தது. மேலும், சசிகலாவுக்கு சொத்துகள் விற்றவர்களின் வாக்குமூலங்களும் அதில் குறிப்பிட்பப்ட்டிருந்தது. இது சசிகலா தரப்புக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய அரசுக்கு எதிராக சமீப காலத்தில் தினகரன் பெரிய அளவில் கடுமையான கருத்துகளைச் சொல்வதில்லை. சிஏஏ விவகாரத்தில்கூட மத்திய அரசு தாயுள்ளத்தோடு செயல்பட வேண்டும் என்பதே அவரது கருத்து. இந்த நிலையில் சசிகலாவுக்கு எதிரான வருமான வரித்துறையின் செயல்பாடு, ஒரு நீண்ட செயல்முறையின் ஒரு பகுதிதான் என்கிறார்கள் பாஜக வட்டாரத்தில். ஆனால், இந்த வழக்கின் மூலம் சசிகலா மீண்டும் சிக்கல்களை எதிர்கொள்ளத் தொடங்கிவிட்டார் என்பது மட்டும் உண்மை.
’சசிகலாவுக்கு இருக்கும் மொத்த சொத்துகளின் மதிப்பு 50,000 கோடி ரூபாய் மதிப்புள்ளது என்று இப்போதல்ல; 2016ஆம் ஆண்டிலேயே மோப்பம் பிடித்தது மத்திய அரசு. ஜெயலலிதா மறைவுக்குப் பின் அதில் பாதி சொத்துகளைத் தங்களுக்குக் கொடுக்குமாறு டெல்லி தரப்பில் இருந்து சசிகலாவுக்கு அழுத்தம் கொடுத்தனர். ஆனால் அதற்கு அவர் ஒப்புக்கொள்ளவில்லை. இங்குதான் பிரச்சினை ஆரம்பித்தது. முழுமையான சொத்துகளின் விவரம் தினகரனுக்கோ, விவேக்குக்கோ, கிருஷ்ணபிரியாவுக்கோ கூட தெரியாது. அவர்களுக்குத் தெரிந்ததெல்லாம் ஒரு பகுதி விவரம்தான். ஆனால், இந்த சொத்துகளின் முழு விவரமும் சசிகலாவுக்கு மட்டுமே தெரியும். ஹாங்காங், தாய்லாந்து நாடுகளிலே 35,000 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகள் இருப்பதாகவும் கணக்கு போட்டுள்ளது மத்திய அரசு. இந்த நிலையில் இப்போது வருமான வரித் துறை நீதிமன்றத்தில் சமர்ப்பித்த நடவடிக்கை மூலம் பினாமி சட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் சசிகலா மீது மீண்டும் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்யவும் சாத்தியங்கள் உள்ளன. இதனால் சசிகலாவுக்குப் பெரும் சிக்கல் காத்திருக்கிறது. இதை மையமாக வைத்து சசிகலாவுக்கு பாஜக அரசியல் ரீதியாக நிபந்தனைகள் விதித்தாலும் ஆச்சரியமல்ல’ என்கிறார்கள் மத்திய அரசு வட்டாரத்தைச் சேர்ந்தவர்கள்.
இதுதொடர்பாக பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருக்கும் சசிகலாவின் ரியாக்ஷன், அமமுக பொதுச்செயலாளர் தினகரன் மனநிலை எப்படி இருக்கிறது என்பது குறித்து விசாரித்தோம்.
சிறையிலிருக்கும் சசிகலாவோ இதைப்பற்றி கொஞ்சம்கூட கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. கடந்த 20ஆம் தேதி காலை உணவாக பிரெட் சாப்பிட்டார். அதன் பிறகு வழக்கமாக செல்லும் கன்னட வகுப்புக்குச் சென்றுள்ளார். சிறையில் அதிக நேரம் புத்தகங்களைப் படிக்கிறார். குறிப்பாக அரசியல் வரலாற்றுப் புத்தகங்கள் படித்துவருகிறார். அதனால் சசிகலாவைச் சந்திக்கச் செல்பவர்கள் பெரும்பாலும் புத்தகங்களையே வாங்கிச் செல்கிறார்கள்.
தற்போது வருமான வரித் துறையினர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ததுபற்றி கேள்விப்பட்ட சசிகலா, ‘எது நடந்தாலும் நல்லதுக்குத்தான்’ என்று சொல்லி கேஷுவலாக அடுத்த வேலையைப் பார்க்க ஆரம்பித்துவிட்டார் என்கிறார்கள் சிறை வட்டாரங்களில். அதற்கான காரணம் குறித்து விசாரித்தபோது, கிருஷ்ணபிரியாவின் மொபைலில் சேமிக்கப்பட்ட அந்த துண்டுச் சீட்டைத் தவிர, 2016ஆம் ஆண்டு சொத்துகள் வாங்கியதற்கான ஆதாரங்கள் வேறு எதுவும் வருமான வரித் துறையிடம் இல்லை. அதனால் நீதிமன்றத்தில் தீர்ப்பு நமக்கு சாதகமாகவே இருக்கும் என்று சசிகலா சொல்லியிருக்கிறார்.
சொத்து விவரங்களைத் தாக்கல் செய்யப்பட்டது தினகரனிடம் அவரது ஆதரவாளர்கள் கவலையோடு விசாரித்திருக்கிறார்கள். ஆனால், தினகரனோ தனது அக்மார்க் புன்னகையோடு, ‘அதெல்லாம் ஒரு பிரச்சினையும் இல்லை. எல்லாம் நமக்கு சாதகமாகத்தான் இருக்கும். நீதிமன்றத்தில் இப்படித் தாக்கல் செய்வது வழக்கமான ஒரு நடைமுறைதான். எனக்குத் தெரிந்த வட்டாரங்களில் விசாரித்த வரையிலும் அதில் பெரிதாக ஒன்றும் இல்லை என்றுதான் கூறுகிறார்கள்’ என்று சொல்லியிருக்கிறார். மேலும், ‘பணமதிப்பிழப்புக்குப் பிறகு சொத்துகள் வாங்கப்பட்டது குறித்து எடப்பாடிக்கு, பன்னீருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லையா என்ன? அப்படி சொத்து வாங்கியிருந்தால் எடப்பாடி பழனிசாமி மற்றும் அவருக்கு நெருக்கமாக இருக்கும் சேலம் பிரமுகர் மூலமாகத்தான் பணப் பரிவர்த்தனை நடந்திருக்கும் என்பதும் பாஜக தலைமைக்குத் தெரியாதா?’ என்று சொல்லிச் சிரித்த தினகரன், மத்திய அரசு நமக்கு எதிராக இருந்திருந்தால் அமமுகவைத் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்திருக்க முடியாதே என்றும் அவர்களிடம் கூறியிருக்கிறார்’ என்கிறார்கள்” என்ற மெசேஜுக்கு சென்ட் கொடுத்து ஆஃப்லைன் போனது வாட்ஸ் அப்.
”ஜெயலலிதா அப்போலோவில் அட்மிட் ஆகியிருந்த 2016 நவம்பர் கால கட்டத்தில்தான் இவ்வளவு சொத்துகள் வாங்கப்பட்டிருக்கிறதா?” என்று கமென்ட் போட்டு ஷேர் செய்துகொண்டது ஃபேஸ்புக்.
[சசிகலா சொத்துகள் வாங்கியது எப்படி? வருமான வரித் துறை தகவல்!](https://minnambalam.com/k/2019/12/22/40)�,