[நாகூர் நௌஷாத்தும் நல்லிணக்கமும்!

politics

கொரோனா வைரஸ் தொற்று பரவும் இந்த அசாதாரண காலத்திலும் சிலர் மத பேதத்தை மூட்டி, இந்து -முஸ்லிம் சமூகங்களுக்கிடையே தேவையற்ற, ‘சமூக விலகலை’ உண்டாக்கி வருகிறார்கள். டெல்லி தப்லீக் ஜமாத் மாநாட்டுக்கு சென்று வந்தவர்களை காரணம் காட்டி ஒட்டுமொத்த இஸ்லாமிய சமூகத்தினரையும் புறக்கணிக்கும் திட்டத்தை சிலர் அரசியல் அஜெண்டா ஆக்குகிறார்கள்.

இந்த நிலையில் காங்கிரஸின் சிறுபான்மை பிரிவு ஒருங்கிணைப்பாளரும், காங்கிரஸ் பிரதேச கமிட்டி உறுப்பினருமான நாகூர் நௌஷாத் செய்திருக்கும் ஒரு செயல் நாகை மாவட்டம் தாண்டி மாநில காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி வரை சென்று நவுஷத்துக்கு போன் போட்டு பாராட்ட வைத்திருக்கிறது.

அப்படி என்ன செய்துவிட்டார் நௌஷாத் ?

நாகூர் என்றதுமே நமக்கு தர்கா ஞாபகம்தான் வரும். ஆனால் இந்த ஊரடங்கு உத்தரவின் விளைவாக நாகூர் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருக்கும் திருமால், சிவன், மாரியம்மன் கோயில்கள் பற்றிய நினைவு நௌஷாத்துக்கு வந்துள்ளது. இந்தக் கோயில்களில் அர்ச்சகர்களாகவும், பூசாரிகளாகவும் இருக்கும் பலருக்கு அறநிலையத்துறை மிகச் சொற்பமான சம்பளத்தையே வழங்குகிறது. ஒவ்வொரு நாளும் கோயிலுக்கு வரும் பக்தர்கள் அர்ச்சனை செய்யும்போது கொடுக்கும் பணமே அர்ச்சகர்கள், பூசாரிகளின் வாழ்வாதாரம்,

இரண்டு வாரங்களாக கோயில்கள் பூட்டிக் கிடப்பதால் பக்தர்களின் வருகை இல்லாமல் தன் சொந்த ஊரான நாகூரில் உள்ள கோயில் அர்ச்சகர்கள், பூசாரிகள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டிருப்பதை அறிந்த நௌஷாத் , அவர்களை எல்லாம் ராதா ஹோட்டலுக்கு அழைத்திருக்கிறார். அங்கே நாகூர் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் முன்னிலையில் அனைத்து பூசாரிகளுக்கும், அர்ச்சகர்களுக்கும் அவர்கள் கோயிலுக்கு தடையின்றி சென்று வருவதற்கான பாஸ் ஏற்பாடு செய்து கொடுத்து, அதோடு ஒரு மாதத்துக்கு தேவையான மளிகைப் பொருட்களையும், ஒரு தொகையையும் அளித்திருக்கிறார் நௌஷாத் . அதையும் தன் கையால் அளித்தால் அது அரசியலாகிவிடுமோ என்பதற்காக இன்ஸ்பெக்டர் கையாலேயே கொடுக்க வைத்திருக்கிறார்.

இப்படி ஒரு நற்செயல் நடைபெற்றிருப்பதை அறிந்த நாகப்பட்டினம் சிவசேனா நிர்வாகி சுந்தர் தாண்டவமூர்த்தி, “பாராட்ட வேண்டிய விஷயங்களை பாராட்டியே ஆக வேண்டும். மதங்களைக் கடந்த மனிதம் காப்போம். இந்து கோவில் குருக்கள், அர்ச்சகர், பூசாரிகள் ஆகியோருக்கு மளிகைப் பொருட்கள் வழங்கிய அன்பு நண்பர் நாகூர் நௌஷாத் அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தன் ஃபேஸ்புக்கில் பாராட்டியுள்ளார்.

கொரோனா வைரஸை வைத்து மத விளையாட்டு விளையாடிக் கொண்டிருக்கும் பலரும் இந்த கோயில் அர்ச்சகர்கள், பூசாரிகளைப் பற்றி நினைத்துப் பார்க்கவில்லை. எல்லாம் முடிந்து கோயில்கள் திறந்ததும் அவர்கள் தங்கள் அரசியலை கோயில்களை மையமாக வைத்து மீண்டும் தொடங்குவார்கள். ஆனால், இந்த இக்கட்டான நேரத்தில் கோயில் அர்ச்சகர்களின் நிலையை எண்ணி அவர்களுக்கு உதவிய நௌஷாத் தனது கட்சி அடையாளத்தையோ, மத அடையாளத்தையோ வலிந்து திணித்து வெளிக்காட்ட விரும்பவில்லை.

தகவல் கேள்விப்பட்டு செய்திக்காக நாம் பேசியபோது கூட, ‘சார்… உதவி வாங்கிக்கிட்டவங்க கஷ்டப்படக் கூடாது சார். எல்லாருக்கும் இறைவன் ஒருவர்தானே, அந்த அடிப்படையில்தான் உதவிகள் செய்கிறோம். நாகூர் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன், பிராமணர் சங்கத்தின் உதவியோடுதான் இதை செய்ய முடிந்தது. இப்போது நாகூர் தாண்டி நாகப்பட்டினம் பகுதி கோயில் அர்ச்சகர்களுக்கும், பூசாரிகளுக்கும் உதவி அளிக்க தயாராகி வருகிறோம். இதெல்லாம் செய்தியாக்க வேண்டுமா?” என்றார் தண்மையாய் நௌஷாத்.

கொரோனா வைரஸை விடக் கொடிய துவேஷ அரசியல் பரப்பப்படுகிற இந்த நேரத்தில், இப்படிப்பட்ட நல்லிணக்க செய்தியையும் பரப்ப வேண்டும் சார் என்றோம் நௌஷாத்திடம்.

என்ன சரிதானே?

**-ஆரா**�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *