நீட்: ஆளுநருக்கு கண்டனம்- விரைவில் சட்டமன்றக் கூட்டம்!

politics

நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு பெறுவதற்காக சிறப்பு சட்டமன்றத் தொடரை கூட்டுவது என இன்று (பிப்ரவரி 5) முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

கடந்த செப்டம்பர் 13ஆம் தேதி தமிழ்நாடு சட்டமன்றத்தில் நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரும் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இடைப்பட்ட நாட்களில் ஆளுநர் இந்த சட்ட மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்ப வேண்டும் என தமிழக அரசு சார்பிலும் திமுக கூட்டணி சார்பிலும் வலியுறுத்தப்பட்டு வந்த நிலையில்… கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி அந்த சட்ட மசோதாவை தமிழக அரசுக்கு மீண்டும் திருப்பி அனுப்பினார் ஆளுநர் ஆர்.என். ரவி.

இதனால் தமிழக அரசுக்கும் ஆளுநருக்கும் இடையில் அரசியலமைப்பு சட்ட போர் நடப்பது உறுதியான நிலையில்… இதுபற்றி விவாதிப்பதற்காக இன்று அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டினார் முதல்வர் முக ஸ்டாலின்.

இந்தக் கூட்டத்தில் அதிமுக, பாஜக கட்சிகள் தவிர சட்டமன்றத்தில் பிரதிநிதித்துவம் வகிக்கும் திமுக, காங்கிரஸ், பாமக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள், மதிமுக உள்ளிட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

இக்கூட்டத்தில் தொடக்க உரையாற்றிய முதல்வர் மு.க. ஸ்டாலின், “2006 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றம் நிறைவேற்றிய நுழைவுத் தேர்வுக்கு எதிரான சட்ட மசோதாவை 84 நாட்களுக்குள் குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்தார். ஆனால் இப்போது 142 நாட்கள் கழித்து ஆளுநர் அதை திருப்பி அனுப்பியிருக்கிறார். இந்தச் சமூக நீதிக்கான போராட்டத்தில் அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து நிற்க வேண்டும்” என்று குறிப்பிட்டார்.

இதைத்தொடர்ந்து அனைத்து கட்சி கூட்டத்தில் வரைவு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதில், நீட் விலக்கு மசோதாவை திருப்பி அனுப்பிய
ஆளுநருக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் நீட் விலக்கு தொடர்பாக மீண்டும் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி அதை ஆளுநருக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது.

பிப்ரவரி 9ஆம் தேதி இந்த சிறப்பு சட்டமன்ற கூட்டத்தை கூட்ட வேண்டும் என வரைவுத் தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டாலும் சபாநாயகர் இது தொடர்பாக முடிவெடுப்பார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

**வேந்தன்**

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *