தமிழக அரசின் புதிய கல்விக் கொள்கையை வடிவமைக்க வல்லுநர்கள் அடங்கிய மாநிலக் குழுவை அமைத்து உத்தரவிடப்பட்டுள்ளது.
2020 ஜூலை 29ஆம் தேதி மத்திய அரசு கொண்டு வந்த இந்தியாவின் புதிய கல்விக் கொள்கைக்குத் தமிழகம் எதிர்ப்புத் தெரிவித்தது. தற்போது ஆட்சியில் உள்ள திமுக அரசு எதிர்ப்புத் தெரிவித்து வரும் நிலையில், 2021-22 இடைக்கால பட்ஜெட்டில், தமிழகத்துக்கென மாநிலக் கல்விக் கொள்கை ஒன்றை உருவாக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.
அதன்படி முதல்வர் இன்று (ஏப்ரல் 5) வெளியிட்ட அறிவிப்பில், “ அறிவை விரிவு செய்; அறிவியல் புதுமை செய்!’’ என்றார் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன். அந்த வகையில், வருங்காலத் தலைமுறைகளின் அறிவை விரிவு செய்து வளர்த்திடவும்; அறிவியல் புதுமைகளைப் பூத்திடச் செய்திடவும்; இளந்தளிர்களின் உள்ளங்களில் புதிய புதிய சிந்தனைகளை விதைத்து வளர்த்திட வேண்டியதும் நமது இன்றியமையாத கடமை என்பதை உணர்ந்து, இதுவரை, நாட்டில் பல்வேறு கல்விக் கொள்கைகள் உருவாக்கப்பட்டு, நடைமுறைப்படுத்தப் பட்டிருக்கின்றன.
எனினும், இன்றைய அறிவியல் யுகம் நொடிதோறும் வளர்ந்து கொண்டிருக்கிறது. ஒருசில ஆண்டுகளுக்கு முன் கனவில் கூட எண்ணமுடியாத சில புதுமைகள், இன்றைக்கு மலர்ந்து அறிவு மணம் பரப்புகின்றன. இன்றைய அறிவியல் நாளை பழைமை அடைவது திண்ணம்.
எனவே, மாணவர்கள் வருங்காலத்தின் அறிவியல் விடியலைக் காண்பதற்கேற்ப, கல்வி வளர்ச்சிக்கேற்ப புதிய பரிமாணங்களில் திட்டங்கள் உருவாக்கப்பட வேண்டியது காலத்தின் கட்டாயமாகிறது.
அந்தவகையில், கடந்த 2021-22 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் “தமிழ்நாட்டின் வரலாற்று மரபு, தற்போதைய நிலைமை, எதிர்காலக் குறிக்கோள்களுக்கு ஏற்ப, மாநிலத்திற்கெனத் தனித்துவமான மாநிலக் கல்விக் கொள்கை ஒன்றை வகுப்பதற்கு, கல்வியாளர்கள் மற்றும் வல்லுநர்களைக் கொண்ட உயர்மட்டக் குழு ஒன்றை இந்த அரசு அமைக்கும்’’ என அறிவிக்கப்பட்டிருந்தது.
அந்த அறிவிப்பைச் செயல்படுத்தும் விதமாக, தமிழகத்தில் புதிய கல்விக் கொள்கையை வடிவமைப்பது குறித்து ஆய்வு செய்திட, பின்வரும் சான்றோர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது.
இக்குழுவின் தலைவராக டெல்லி உயர்நீதிமன்ற மேனாள் தலைமை நீதியரசர் த.முருகேசன்;
உறுப்பினர்களாக பேராசிரியர் எல். ஜவஹர்நேசன், முன்னாள் துணைவேந்தர், சவீதா பல்கலைக்கழகம்,
இராமானுஜம், ஓய்வு பெற்ற கணினி அறிவியல் பேராசிரியர், தேசிய கணித அறிவியல் நிறுவனம்
பேராசிரியர். சுல்தான் இஸ்மாயில், மாநிலத் திட்டக்குழு உறுப்பினர்
பேராசிரியர் இராம சீனுவாசன், மாநிலத் திட்டக்குழு உறுப்பினர்
முனைவர் அருணா ரத்னம், மேனாள் சிறப்புக் கல்வி அலுவலர், யூனிசெப் நிறுவனம்
எஸ்.இராமகிருஷ்ணன், எழுத்தாளர்
விஸ்வநாதன் ஆனந்த், உலக சதுரங்க சேம்பியன்.
டி.எம்.கிருஷ்ணா, இசைக் கலைஞர்
க. துளசிதாசன், கல்வியாளர்
முனைவர் ச.மாடசாமி, கல்வியியல் எழுத்தாளர்
இரா.பாலு, தலைமை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, கிச்சான்குப்பம், நாகப்பட்டினம் மாவட்டம்.
ஜெயஸ்ரீ தாமோதரன், அகரம் அறக்கட்டளை ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இக்குழுவானது புதிய கல்விக்கொள்கையை வடிவமைத்து, ஓராண்டுக் காலத்திற்குள் தனது பரிந்துரையை அரசுக்கு அளிக்கும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
**-பிரியா**