‘மகளை மீட்டுத் தாருங்கள்’: கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ.வுக்கு எதிராக மனு!

politics

கள்ளக்குறிச்சி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் பிரபு, தனது மகளைக் கடத்திச் சென்றுவிட்டதாகவும், அவரை மீட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிடக் கோரியும், பெண்ணின் தந்தை ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்துள்ளார்.

கள்ளக்குறிச்சி (தனி) தொகுதி அதிமுக எம்.எல்.ஏ பிரபுவும் (34), தியாகத்துருவம் பிராமணர் சமூகத்தைச் சேர்ந்த சுவாமிநாதன் மகள் சௌந்தர்யாவும் (20) கடந்த சில ஆண்டுகளாகக் காதலித்து வந்துள்ளனர். இந்த நிலையில் நேற்று பிரபுவின் இல்லத்தில் வைத்து அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மத்தியில் இருவருக்கும் திருமணம் நடந்தது.

திருச்செங்கோட்டில் தனியார் கல்லூரியில் பி.ஏ ஆங்கிலம் 2ஆம் ஆண்டு படித்து வருகிறார் சௌந்தர்யா. பெண்ணின் தந்தை பெயர் சுவாமிநாதன். இவர் தியாகதுருவத்தில் ஒரு கோயிலில் குருக்களாக இருக்கிறார்.

இந்த நிலையில் தன் பெண்ணை கடத்திச் சென்று பிரபு திருமணம் செய்து விட்டதாகச் சுவாமிநாதன் குற்றம் சாட்டியுள்ளார்.

அவர் கூறுகையில், நான் தியாகதுருவம் மலையம்மன் கோயிலில் குருக்களாக பணியாற்றுகிறேன். எனது மகள் திருச்செங்கோட்டில் இருக்கும் தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். என்னுடைய மகளிடம் ஆசை வார்த்தைகளைக் கூறி கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ பிரபு அவரை கடத்தி விட்டார். எனக்கு மிகவும் மன உளைச்சலாக இருக்கிறது.

இது குறித்து காவல்துறையிடமோ அல்லது மாவட்ட ஆட்சியரிடமோ புகார் கொடுக்க சென்றால், நான் ஒரு எம்.எல்.ஏ என்னிடம் பணபலமும் அதிகார பலமும் இருக்கிறது. அதனால் எதுவும் செய்ய முடியாது என்று என்று கூறி பிரபு கொலை மிரட்டல் விடுப்பதாக குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும், சட்டமன்ற உறுப்பினரின் தகப்பனார் ஒன்றியச் செயலாளராக உள்ளார். அமமுக மாவட்ட செயலாளராக உள்ள கோமுகி மணியன் வீட்டுக்கே வந்து மிரட்டுகிறார். திருநாவலூர் கூட்டுறவுச் சங்கத் தலைவர் குமாரவேல் என்னைக் கொலை செய்து விடுவேன் என்றும் மிரட்டுகிறார். எனக்கு பயமாக இருக்கிறது. எப்படியாவது எனது மகளை மீட்டுத் தரும்படி கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்திருந்தார்.

அதோடு எம்.எல்.ஏ பிரபு எனது குடும்பத்தில் ஒரு மகன் போல் பழகி வந்தார். ஆனால் 20 வயது வித்தியாசம் உள்ள எனது மகளைத் திருமணம் செய்து கொண்டுள்ளார். சாதி பார்க்கவில்லை ஆனால் வயது வித்தியாசம் பார்க்க வேண்டுமல்லவா எனவும் சுவாமிநாதன் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

மேலும் எம்.எல்.ஏ வீட்டின் முன்பு தன் உயிரை மாய்க்கப் போவதாக அவர் தெரிவித்ததை அடுத்து, அங்கு சென்ற போலீசார் அவரை மீட்டு அழைத்துச் சென்றுள்ளனர். இந்தச் சூழலில், பிரபு எம்.எல் ஏ தரப்பில் அந்தப் பெண்ணின் விருப்பத்துடன் தான் திருமணம் நடந்தது என்று கூறப்படுகிறது.

தற்போது, சுவாமிநாதன் எனது மகளை மீட்டுத் தரக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்துள்ளார். அதில், “தன்னுடைய மகளை கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் பிரபு ஆசைவார்த்தைகள் கூறி, கடத்திவிட்டதாக தெரிவித்துள்ளார். இது குறித்து காவல்துறையில் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும், தான் மிரட்டப்படுவதாகவும் எனவே தனது மகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிட வேண்டும்” என்றும் கேட்டுக் கொண்டுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

**-பிரியா**�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *