டிஜிட்டல் திண்ணை: மாசெக்களையும், பிகேவையும் ஒன்றிணைப்பாரா ஸ்டாலின்?

politics

மொபைல் டேட்டா ஆன் செய்யப்பட்டதும், வாட்ஸ் அப் ஆன் லைனில் வந்தது.

“கொரோனா காலத்தில் ஒன்றிணைவோம் வா என்ற தலைப்பில் புதிய திட்டத்தை ஏப்ரல் 20 ஆம் தேதி அறிமுகப்படுத்தியிருக்கிறார் திமுக தலைவர் ஸ்டாலின். திமுகவின் எம்பிக்கள், எம்.எல்.ஏ.க்கள், மாவட்டச் செயலாளர்கள் என்று சுமார் 200 நிர்வாகிகளிடம் பேசிய அவர் இத்திட்டத்துக்கென உருவாக்கப்பட்ட பொறிமுறைகளைப் பற்றி விளக்கியிருக்கிறார். இந்தத் திட்டம் திமுகவின் தேர்தல் உத்தி வகுப்பாளரான பிரசாந்த் கிஷோரின் ஐபேக் டீமின் யோசனை. ஏற்கனவே பிரசாந்த் கிஷோரோடு, சிற்சில விஷயங்களில் முரண்பாடுகளைத் தொடரும் மாவட்டச் செயலாளர்களுக்கு இந்தத் திட்டம் மேலும் ஒரு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

தேர்தல் உத்தி வகுப்பாளரான பிரசாந்த் கிஷோர் திமுகவுடன் ஒப்பந்தமிட்டுள்ளதாக கடந்த பிப்ரவரி 2 ஆம் தேதி திமுக தலைவர் ஸ்டாலின் அதிகாரபூர்வமாக அறிவித்தார். அதற்கு முன்பே 2019 டிசம்பர் மாதத்திலேயே மின்னம்பலத்தில் கழக அரசியலும் கார்ப்பரேட் அரசியலும் என்ற தலைப்பில் திமுகவுடன் பிரசாந்த் கிஷோர் ஒப்பந்தமிடுவதால் கட்சி அளவில் ஏற்பட்டு வரும் எதிரொலிகளை முழுமையாகப் பதிவு செய்தோம். பிகே வந்தால் மாசெக்களுக்கு மவுசு இருக்காது என்ற விவாதம் தொடர்ந்து திமுகவின் மாவட்டச் செயலாளர்கள் மத்தியில் நிலவியது.

இதைப் புரிந்துகொண்ட ஸ்டாலின் கடந்த பிப்ரவரி 17 ஆம் தேதி அறிவாலயத்தில் நடந்த மாசெக்கள் கூட்டத்தில், ‘எப்போதுமே தேர்தலின் போது பல கட்சிகள் தங்களுக்காக ஒரு சர்வே எடுப்பது வழக்கம்தான். நாம் கூட ஒரு சர்வே எடுத்து அதன் பேரில்தான் நமக்கு நாமே பயணம் எல்லாம் நடத்தினோம் . அந்த சர்வேயை சொல்லாமல் எடுத்தோம், இப்போது சொல்லிவிட்டு அறிவித்துவிட்டு எடுக்கிறோம் அவ்வளவுதான். மாவட்டங்கள் முழுதும் 200 பேருக்கும் மேல் சர்வே எடுத்திருக்காங்க. மார்ச் 10 ஆம் தேதிக்குள்ள எனக்கு ரிப்போர்ட் கொடுக்கப் போறாங்க. பிரசாந்த் கிஷோரை நாம் ஒப்பந்தம் செய்திருப்பது நமக்கு ஆலோசனை வழங்குவதற்குதானே தவிர, யாரையும் கட்டுப்படுத்துவதற்கோ தலையிடுவதற்கோ இல்லை என்பதை நீங்கள் புரிஞ்சுக்கணும். மாவட்டச் செயலாளர்களான உங்களையும் நிர்வாகிகளையும் நம்பிதான் கட்சி நடத்தப் போறோம்’ என்றவர் அன்பில் தர்மலிங்கம், ‘திருச்சி திமுகவின் கலெக்டர்’ என்று தன்னை கலெக்டரிடம் அறிமுகப்படுத்திக் கொண்டதைக் குறிப்பிட்டுப் பேசினார். அதாவது திமுகவில் மாவட்டச் செயலாளர்களின் அதிகாரம் அவர்களை விட்டு எங்கும் போகாது என்பதை உறுதிப்படுத்தியிருக்கிறார் ஸ்டாலின்.

இந்த நிலையில்தான் கொரோனா ஊரடங்கு நேரத்தில் திமுக சார்பில் மக்களுக்கு பொதுவான ஒரு பெயரில் உதவலாம் என்று ஐபேக் டீம் முடிவெடுத்து அதன்படி ஒரு செயல் திட்டத்தை ஏப்ரல் முதல் வாரத்திலேயே வகுத்தது. இதன்படி (Stalin Connect) *ஸ்டாலினுடன் இணைவோம்*, (People’s helpline) *பொதுமக்களின் உதவி எண்*, *நல்லோர் கூடம்*, (Feed the Poor) *ஏழை எளியோருக்கு உணவு*, மற்றும் (Virtual Neighbourhood Groups) இதற்காக வர்சுவல் வட்டார குழுக்கள் அதாவது வட்டார வாட்ஸப் குழுக்கள். இவை மூலம், கட்சி தினந்தோறும் 2.5 இலட்சம் மக்கள் குறைகளை தீர்க்கும், 20 இலட்சம் உணவுப் பொட்டலங்கள் வழங்கும், 10 இலட்சம் குடும்பங்களுக்கு பக்க பலமாயிருந்து நம்பிக்கையூட்டும், அதைவிட அதிகமான தன்னார்வலர்களுக்கு எளிதில் உதவ முயல்விக்கும் முயற்சியை மேற்கொள்ளும் என்பதுதான் ஐபேக்கின் திட்டம். இதில் ஸ்டாலினுடன் இணைவோம் என்பதற்காக தொடர்பு எண்ணை உருவாக்கிவிட்ட ஐபேக் குழுவினர், வட்டார வாட்ஸ் அப் குழுக்களை அமைப்பதற்காக மாவட்டச் செயலாளர்களை நாடியிருக்கிறார்கள்.

ஒவ்வொரு மாசெவுக்கும் போன் செய்து, உங்கள் மாவட்டத்துல இருக்கும் ஒன்றியம், நகரம், கிளைச் செயலாளர்களின் ஆக்டிவ்வான வாட்ஸ் அப் இணைப்பு கொண்ட மொபைல் நம்பர்கள் வேண்டும். ஒவ்வொரு கிராமத்திலும் சில தெருக்களை உள்ளடக்கி ஒரு வாட்ஸ் அப் குரூப் அமைக்க வேண்டும், அதில் கேட்கப்படும் உதவிகளை நாம் நேரடியாக சென்று செய்ய வேண்டும் என்று விளக்கியிருக்கிறார்கள். அப்போது பல மாவட்டச் செயலாளர்கள், ‘தம்பீ… நீ எங்கேர்ந்து பேசுற… மார்ச் கடைசி வாரத்துல சட்டமன்றம் ஒத்திவைக்கப்பட்டதுலேர்ந்து திமுக மாவட்டச் செயலாளர்ல ஆரம்பிச்சி எம்பி, எம்.எல்.ஏ.னு அத்தனை நிர்வாகிகளும் மக்களோடதான் இருக்கோம். போன சட்டமன்றத் தேர்தல்ல நின்னு தோற்றுவிட்ட திமுக காரர்கள் கூட தங்கள் தொகுதியில அங்குலம் அங்குலமா உதவிக்கிட்டு வர்றாங்க. தினம் தினம் போயி நாங்க உதவிப் பண்ணிக்கிட்டிருக்கோம். இப்ப திடீர்னு, ‘மக்களுக்கு உதவணும், நம்பர் கொடுங்க’னு கேட்டா நாங்க உதவி பண்ற வேலைய பார்ப்பமா? உங்களுக்கு நம்பர் தேடிக்கிட்டு இருப்போமா? அதான் ஏற்கனவே பல லிஸ்ட் கொடுத்திருக்கோமே. வேற ஏதாவது வேணும்னா ஐடி விங்குகிட்ட பேசிக்கங்க’ என்று கோபமாக பேசிவிட்டு வைத்துவிட்டார்கள். ஏற்கனவே நாம் உதவி செய்துகொண்டிருக்கையில் இது என்ன புதுக் குழப்பம் என்பதுதான் மாவட்டச் செயலாளர்களின் ஆதங்கம். இதை சிலர் தலைவர் ஸ்டாலின் வரை சொல்லிவிட்டார்கள்.

ஆனால் திமுக தலைமையோ, ‘நாம எல்லாரும் உதவி பண்றோம், அதை யார் இல்லைனு சொன்னது. நாம் செய்யும் உதவிகளை ஒருங்கிணைச்சு ஒரு குடையில கொண்டு வந்து அதை கட்சிக்கு முழு பலன் தரும் விதமா மாத்துறத்துக்குதான் இந்த ஒன்றிணைவோம் வா திட்டம். நாம் எவ்வளவுதான் கடுமையாக உழைச்சாலும் போன சட்டமன்றத் தேர்தல்ல ஏன் தோற்றோம்? அப்போ எதை மிஸ் செய்தோமோ அதை இப்போது மிஸ் செய்துவிடக் கூடாதுன்னுதான் இந்த திட்டம். அதனால ஐபேக் டீமுக்கு ஒத்துழைக்கணும்’ என்று மாசெக்களுக்கு கறாராக சொல்லிவிட்டது.

ஒன்றிணைவோம் வா என்று ஸ்டாலின் அழைத்திருப்பது மாசெக்களையும் ஐபேக் டீமையும் ஒன்றிணைக்கத்தானோ என்பதுதான் திமுகவில் இப்போதைய பேச்சு” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.