கொரோனா தடுப்பு: தமிழக அரசுக்கு மத்திய அரசு மீண்டும் பாராட்டு!

politics

கொரோனா தடுப்பு மருந்து விநியோகத்திற்கு நாடு தயாராகி வரும் நிலையில், சென்னையில் அதற்கான ஒத்திகையையும், ஏற்பாடுகள் பற்றியும் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் ஜனவரி 8 ஆம்தேதி நேரில் வந்து ஆய்வு செய்தார்.

சென்னையிலுள்ள அரசு பொது மருத்துவமனை மற்றும் அரசு ஓமந்தூரார் மருத்துவமனையில் உள்ள தடுப்பு மருந்து ஒத்திகை மையங்களை அவர் பார்வையிட்டார். தமிழக சுகாதார அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர்,, சுகாதாரத் துறை செயலாளர் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன் மற்றும் உயர் அதிகாரிகள் உடனிருந்தனர்.

சென்னை அப்போலோ மருத்துவமனையில் உள்ள தடுப்பு மருந்து மையத்தையும் டாக்டர் ஹர்ஷ் வர்தன் பார்வையிட்டார். இதற்கும் முன்னர், நம் நாட்டிலுள்ள நான்கு தேசிய தடுப்பு மருந்து சேமிப்பகங்களில் ஒன்றான பெரியமேட்டில் உள்ள பொது மருந்து சேமிப்பகத்தை மத்திய சுகாதார அமைச்சர் பார்வையிட்டார். மும்பை, கொல்கத்தா மற்றும் கர்னலிலும் இத்தகைய மையங்கள் உள்ளன.

இதற்கிடையே தலைமை செயலகத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்த டாக்டர் ஹர்ஷ் வர்தன், தடுப்பு மருந்து விநியோகத் திட்டம் குறித்து ஆலோசித்தார். பின்னர், செங்கல்பட்டில் உள்ள தடுப்பு மருந்து மையத்தை அவர் பார்வையிட்டார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய ஹர்ஷவர்தன், “கொரோனாவை எதிர்கொள்வதில் மருத்துவ பணியாளர்கள் அபார துணிச்சலை வெளிப்படுத்தியிருக்கின்றனர். முன்னர் நம்மிடம் குறைந்த அளவில் பரிசோதனைக் கூடங்கள் இருந்தன. ஆனால், 2,300 ஆய்வகங்கள் தற்போது கொரோனா பரிசோதனைகளை மேற்கொள்கின்றன. சுவாசக் கருவிகள், தனிநபர் பாதுகாப்பு உபகரணங்கள், என்-95 முகக்கவசங்கள் ஆகியவற்றை நாம் தற்போது ஏற்றுமதி செய்கிறோம்.

கொரோனாவை எதிர்கொள்ள பிரதமர் திரு. நரேந்திர மோடி எடுத்த திறன்மிகு நடவடிக்கைகளால், பெருந்தொற்று பரவல் தற்போது கட்டுக்குள் உள்ளது. குணமடைதல்கள் நாட்டில் அதிகமாக உள்ளது”என்றும் ஹர்ஷ்வர்தன் குறிப்பிட்டார்.

மேலும் அவர், “ முன்களப் பணியாளர்கள், சுகாதாரப் பணியாளர்கள், மருத்துவப் பணியாளர்கள் மற்றும் ராணுவத்தினருக்கு தடுப்பு மருந்து வழங்கலில் முன்னுரிமை வழங்கப்படும். குறுகிய காலத்தில் நம்மால் தடுப்பு மருந்தை தயாரிக்க முடிந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. அவசரகால பயன்படுத்தல் உரிமையை தற்போது வழங்கியிருக்கிறோம்”என்றார்.

தமிழக அரசின் நடவடிக்கைகள் குறித்துப் பேசிய ஹர்ஷ்வர்தன், “கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசு எடுத்த நடவடிக்கைகளைப் பாராட்டுகிறோம். 100 சதவீத ஆர்டி-பிசிஆர் பரிசோதனைகளை செய்து சவாலான நிலைமையை தமிழகம் சமாளித்தது. வைரஸ் பரவலை தமிழ்நாடு கட்டுக்குள் கொண்டு வந்திருக்கிறது” என்று பாராட்டினார்.

சென்னைக்கு அருகில் உள்ள செங்கல்பட்டில் இருக்கும் ஹிந்துஸ்தான் பயோ-டெக் லிமிடெட் நிறுவனத்தை பார்வையிட்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டாக்டர் ஹர்ஷ் வர்தன்,

“நாட்டில் கொவிட் தடுப்பு மருந்து விநியோகத்தை தொடங்கும் கட்டத்தில் நாம் இருக்கிறோம். இரண்டு தடுப்பு மருந்துகளை வெற்றிகரமாக நாம் தயாரித்திருக்கிறோம். அவசர காலப் பயன்பாட்டுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. தடுப்பு மருந்து வழங்கல் விரைவில் தொடங்கும்.இதற்காக . பணியாளர்களுக்குத் தேவையான பயிற்சி வழங்கப்பட்டுள்ளது, வழிகாட்டுதல்கள் பின்பற்றப்பட்டுள்ளன, குளிர்பதன வசதிகள் நிறுவப்பட்டுள்ளன, தடுப்பு மருந்து விநியோகத்தைத் தொடங்குவதற்கான அனைத்தும் தயாராக உள்ளன. தயாரிப்பு நிலையத்தில் இருந்து, மக்களுக்கு தடுப்பு மருந்து வழங்குவது வரை அனைத்துமே கடந்த ஐந்து மாதங்களில் செய்யப்பட்டுள்ளது. .

எதையும் நேரில் பார்ப்பதே சிறந்ததென்பதால், தமிழ்நாட்டிலுள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள், தடுப்பு மருந்தை மக்களுக்கு தடையின்றி வழங்கவிருக்கும் சேமிப்பு நிலையங்கள் உள்ளிட்ட வசதிகளை நான் நேரில் பார்வையிட்டேன். கொரோனா தடுப்பு மருந்து உள்ளிட்ட தடுப்பு மருந்துகளை தயாரிக்கும் வகையில் மேலும் மேம்படுத்த வேண்டிய மிக முக்கிய நிறுவனம் ஹிந்துஸ்தான் பயோ-டெக் லிமிடெட் ஆகும்,” என்று மத்திய அமைச்சர் கூறினார்.

தமிழக முதல்வருடனான ஆலோசனை பற்றிக் கேட்டதற்கு, “ தாய் சேய் நலத்திட்டம், பேறுகால இறப்பு விகிதம் உள்ளிட்ட சுகாதாரம் சார்ந்த பல்வேறு விஷயங்கள் குறித்து தமிழக முதல்வரிடம் ஆலோசித்தேன்”என்று பதிலளித்தார்.

தமிழ்நாட்டைப் பொருத்தவரை, ஜனவரி 2 அன்று ஐந்து மாவட்டங்களில் உள்ள 17 மையங்களில் ஒத்திகை நடத்தப்பட்ட நிலையில், 38 மாவட்டங்களில் முழு அளவிலான ஒத்திகை நேற்று காலை முதல் நடத்தப்பட்டது. ஆரம்ப சுகாதார மையங்கள், நகர்ப்புற சுகாதார மையங்கள், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் என அனைத்து மாவட்டங்களிலும் தலா ஐந்து இடங்களில் தமிழகத்தில் தடுப்பு மருந்து வழங்கல் ஒத்திகை நடத்தப்பட்டது.

**-வேந்தன்**�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *