அதிமுக ஐடி விங் கலைப்பு: தொடரும் ஈபிஎஸ்-ஓபிஎஸ் அணிகள்!

Published On:

| By Balaji

அதிமுகவின் தகவல் தொழில் நுட்ப அணியான ஐடி விங் மாநில நிர்வாகம் முற்றாக கலைக்கப்பட்டு, தமிழகம் முழுதும் நான்கு மண்டலங்களாக பிரிக்கப்பட்டிருக்கிறது. இதற்கான அறிவிப்பை மே 19 ஆம் தேதி அதிமுக தலைமை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பு ஐடி விங்கை சீர் படுத்துவதற்கு பதிலாக மீண்டும் குழப்பத்தையே உண்டுபண்ணியிருக்கிறது.

என்ன குழப்பம் என்று பார்ப்பதற்கு முன் அதிமுகவின் ஐடி விங்குடைய ஓரு ஷார்ட் சம்மரியை பார்த்துவிடலாம்.

அதிமுக ஐடி விங் என்பது 2014 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாகவே உருவாக்கப்பட்டது. அஸ்பயர் சுவாமிநாதன் தான் அப்போது அதிமுகவின் ஐடிவிங் பிரம்மாவாக இருந்தார். ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின் அதிமுக ஐடி விங் நான்கு அணிகளாகப் பிரிந்தது. ஓ.பன்னீர் தர்மயுத்தம் தொடங்கியபோது ஒரு டீம் அவருடன் சென்றது. ஜெ.வின் அண்ணன் மகள் தீபாவோடு எதிர்பாராத விதமாக கணிசமான ஐடி விங் நிர்வாகிகள் சென்றனர். சசிகலாவுக்கு ஆதரவாக ஒரு பகுதியினர் இருந்தனர். இந்த நிலை கொஞ்சம் மாறி சசிகலா சிறைக்குச் சென்ற சில நாட்களில் எடப்பாடி தனி அணியாக மாற அவரோடு ஐடி விங்கில் ஒரு பகுதியினர் சென்றனர். இப்படி ஒருங்கிணைந்த அதிமுகவின் ஐடி விங் நான்கு அணிகளாகப் பிரிந்தது. இதனால் அதிமுகவின் சாதனைகளையோ ஜெயலலிதாவின் பெருமைகளையோ எடுத்துச் சொல்வதற்கு பதிலாக… அணிப் பூசல்களை தனி நபர் தாக்குதல்களையே அடிப்படையாகக் கொண்டு ஐடி விங் இயங்கியது.

ஓபிஎஸ்சை எடப்பாடி அணி தாக்குவதும், எடப்பாடியை ஓபிஎஸ் அணியும், தினகரன் அணியும் தாக்குவதும், இவர்களை எல்லாம் தீபா அணி தாக்குவதுமாக அதிமுகவின் ஐடி விங்கின் பணிகள் இணையவாசிகளுக்கு என்டர்டெய்ன்மென்ட் ஆக இருந்தன. 2016 இல் ஜெயலலிதா என்கிற ஒற்றை ஆளுமையை ஓங்கிப் பிடித்த அதிமுக ஐடி விங், அணிகள் இணைப்பு வரை ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி, தினகரன், தீபா என நான்காக சிதறியது. அன்றைய பிரதமர் மோடியின் பெருமுயற்சியின் காரணமாக ஓ.பன்னீர் அணியும் எடப்பாடி அணியும் 2017 ஆகஸ்டில் இணைந்தன. அணிகள் இணைந்தாலும் மனங்கள் இணையவில்லை என்று ஒரு கட்டத்தில் கேபி முனுசாமி கூறியது போல, அதிமுகவின் ஐடி விங்கில் எடப்பாடி பன்னீர் என இரு கோடுகள் இணைப்புக்குப் பின்னாலும் தொடர்ந்தன. தீபா டீம் மெல்ல மெல்ல பல திசைகளிலும் விலகிச் சென்று கரைந்தன. தினகரன் அணி அமமுகவின் ஐடி விங் ஆனது.

அணிகள் இணைந்த பிறகு அதிமுகவின் ஐடி விங்கின் மாநில செயலாளராக ஓ.பன்னீர் ஆதரவாளரான சிங்கை ராமச்சந்திரனும், இணைச் செயலாளராக மதுரை முன்னாள் மேயர் ராஜன் செல்லப்பாவின் மகன் ராஜ் சத்யனும் நியமனம் செய்யப்பட்டார்கள். ராஜ் சத்யன் முன்னதாக சசிகலா அணியில் இருந்தவர். பின் தினகரனோடு செல்லாமல் எடப்பாடி அணியிலேயே தொடர்ந்தார். அணிகள் இணைந்த அதிமுகவின் ஐடி விங் ஆக ஆன பிறகும் இவர்கள் இருவருக்குமிடையே ஒருங்கிணைப்பு என்பதே இல்லை. அதாவது அதிமுக அரசின் சாதனைகள் என்று சொல்லப்படுபவற்றை பிரபலப்படுத்த வேண்டிய ஐடி விங், எடப்பாடி பழனிசாமிக்கும் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் தனித்தனியாக ஆளுமை உயர்த்தும் பணிகளில் ஈடுபட்டனர். இன்னும் சொல்லப் போனால் எடப்பாடிக்கு எதிராக ஓ.பன்னீர் டீமும், ஓ.பன்னீருக்கு எதிராக எடப்பாடி டீமும் கூட வேலை பார்த்ததாக அதிமுக ஐடி விங் நிர்வாகிகள் சிலரே சொல்கிறார்கள். அப்போது திமுக சார்பாக சுனில்தான் கட்சியின் ஐடி விங் பொறுப்புகளை கையில் வைத்திருந்தார். அதிமுகவின் இந்த ஐடி விங் பிளவுகளை திமுக அப்போது பயன்படுத்திக் கொண்டது.

கடந்த மக்களவைத் தேர்தலை ஒட்டி அனைத்து மாவட்டங்களிலும் ஐடி விங் கூட்டம் நடந்தது. ஆனபோதும் தேர்தலில் மற்ற கட்சிகளுக்கு இணையாக அதிமுகவின் ஐடி விங் செயல்படவில்லை என்று எடப்பாடிக்கு வருத்தம் இருந்தது. ஐடி விங்கில் இன்னமும் எடப்பாடி அணி, ஓ.பன்னீர் அணி என இருப்பதை உணர்ந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி மக்களவைத் தேர்தலுக்குப் பின் நடந்த நான்கு தொகுதி இடைத்தேர்தலின் போது திருப்பரங்குன்றத்தில் 2019 மே 7 ஆம் தேதி அவசரமாக ஐடி விங் கூட்டத்தைக் கூட்டினார்.

இக்கூட்டத்தில் பேசிய முதல்வர் ஐடி விங் நிர்வாகிகளை வலை தள இளஞ்சிங்கங்களே என்று அழைத்துப் பேசினார். “ நாங்கள் பிரச்சாரம் மூலம் மக்களை நேரடியாக சந்திக்கிறோம். பேசுகிறோம். அதேநேரம் இன்று வலை தளங்களும் முக்கிய பங்கு வகிக்கின்றன. அரசின் சாதனைகளையும், கட்சியின் அதிகார பூர்வ நிலைப்பாட்டையும் எடுத்துச் சொல்லி அவற்றை வாக்குகளாக மாற்ற உங்களால்தான் முடியும்” என்றார்.

ஆனபோதும் 2019 தேர்தல் தோல்விக்குப் பின் ஐடி விங்கை மறு சீரமைப்பு செய்ய வேண்டும் என்று அதிமுகவில் சில குரல்கள் உள்ளுக்குள் எழுந்தன. தனி நபர்களை தூக்கி நிறுத்துவதும், தூற்றித் தாழ்த்துவதுமே அதிமுக ஐடி விங்கின் வேலையாக இருக்கிறது. இதை மாற்ற வேண்டும் என்று எடப்பாடியிடமும், ஓ. பன்னீரிடமும் தனித்தனியாக சிலர் கொண்டு சென்றனர்.

இந்த நிலையில்தான் நேற்று (மே 19) அதிமுக ஐடி விங்கில் அதிரடியாக மாற்றங்களை அறிவித்திருக்கிறார்கள் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீரும். அதாவது அதிமுகவின் ஒட்டுமொத்த ஐடி விங்கின் மாநில கட்டமைப்பு கலைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தை நான்கு மண்டலங்களாகப் பிரித்து அதற்கு தனித்தனி மண்டல நிர்வாகிகளை நியமித்திருக்கிறார்கள். அந்தந்த மண்டலங்களுக்கு உட்பட்ட மாவட்டங்களுக்கும் புதிய நிர்வாகிகள் விரைவில் நியமிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், இது சீர்திருத்தம் அல்ல… மீண்டும் குழப்பமே என்ற கருத்தே அதிமுகவின் ஐடி விங்கில் நிலவுகிறது. இது குறித்து சில ஐடி விங் நிர்வாகிகளிடம் பேசினோம்.

“சென்னை, வேலூர், கோவை, மதுரை என்று நான்கு மண்டலங்களாக ஐடி விங் பிரிக்கப்பட்டுள்ளது. இதில் சென்னை மண்டலத்துக்குள் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்கள் இருக்கின்றன. இந்த மண்டலத்துக்கு அஸ்பயர் சுவாமிநாதன் செயலாளராக நியமிக்கப்பட்டுள்லார். அடுத்து வேலூர் மண்டலத்தில் வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி ஆகிய மாவட்டங்கள் வருகின்றன. இதற்கு கோவை சத்யன் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அடுத்து கோவை மண்டலத்தில் ஈரோடு, கோவை, திருப்பூர், நீலகிரி, திருச்சி, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, தேனி, திண்டுக்கல் ஆகியவை வருகின்றன. கோவை மண்டலத்தின் செயலாளராக சிங்கை ராமச்சந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். அதாவது இவர் ஓ.பன்னீர் ஆதரவாளர் என்பதால் இவர் இருக்கும் கோவை மண்டலத்துக்குள் ஓ.பன்னீரின் தேனி, திண்டுக்கல் மாவட்டங்கள் கொண்டுவரப்பட்டிருக்கின்றன.

இதைவிட புதுமையாக மதுரை மண்டலத்தில் சேலம், நாமக்கல், கரூர், நாகப்பட்டினம், திருவாரூர், மதுரை, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்கள் வருகின்றன. இதன் மண்டலச் செயலாளராக மதுரை ராஜ் சத்யன் நியமிக்கப்பட்டிருக்கிறார். இவர் எடப்பாடியின் ஆதரவாளர் என்பதால் இவர் மதுரை மண்டல ஒருங்கிணைப்பாளராக இருந்தாலும் சேலம் இவரது எல்லைக்குள் வருகிறது.

இந்த மண்டலப் பிரிப்பே பெரும் குழப்பத்தையும் சிக்கலையும் உள்ளடக்கியதாக இருக்கிறது. மண்டலத்துக்குரிய தகுதி கொண்ட திருச்சி புறக்கணிக்கப்பட்டு கோவை மண்டலத்துக்குள் வைக்கப்பட்டிருக்கிறது. திருச்சி மண்டலமே கோவைக்குள் கரைக்கப்பட்டிருக்கிறது. மதுரை மண்டலத்துக்குள் நாகப்பட்டினம் வருகிறது. எந்த அடிப்படையில் இந்த மண்டலங்கள் பிரிக்கப்பட்டிருக்கிறது என்றால் இதிலும் எடப்பாடி, பன்னீர் என்ற படலங்கள் தெளிவாகத் தெரிகின்றன. எனவே அதிமுகவின் ஐடி விங்கை சீர்திருத்தவே கூடாது என்ற எண்ணமே இந்த ஐடி விங் பிரிப்பில் இருப்பதாகத் தோன்றுகிறது.எல்லாவற்றிலும் சேலத்துக்கு முக்கியம் தரும் முதல்வர் ஏன் ஐடி விங்கில் சேலத்தை தனி மண்டலமாக பிரிக்கவில்லை. சேலத்தை ஏன் மதுரையோடு இணைக்கிறார்கள்?” என்றெல்லாம் கேட்கிறார்கள்.

இந்நிலையில் ஜெ.வின் முன்னாள் உதவியாளரான பூங்குன்றன், “அந்தந்த மண்டலங்களில் பிறந்து வளர்ந்து அந்த மண்ணிலே வசிப்பவர்கள் அந்த மண்டலத்தினுடைய செயலாளர்களாக நியமித்தால் சிறப்பு. மற்ற மாநில துணை நிர்வாகிகளுக்கு பொறுப்புகள் வழங்காமல் அவசரமாகப் பட்டியல் வெளியிட்டிருப்பது வருத்தத்தைத் தருகிறது. மாநிலச் செயலாளராக பொறுப்பு வகித்தவர்களை இன்று நீங்கள் உயர்த்தவில்லை உயரத்திலிருந்து கீழே தள்ளிவிட்டு இருக்கிறீர்கள். அவர்களுக்கும் மனதில் வருத்தமே துளிர்க்கும்.

தகவல் தொழில்நுட்பத்துறை தொடங்கப்பட்டு இன்றுவரை சீர் செய்யப்படாமலேயே இருக்கிறது என்பதே உண்மை. தகவல் தொழில்நுட்பத் துறையை மண்டல வாரியாக பிரிக்காமல் திறமையானவர்களுக்கு மாநிலத்தில் பொறுப்பு கொடுத்து, மாவட்டத்தில் உள்ளவர்களின் திறமையை கண்டு அவர்களுக்கு மாவட்ட நிர்வாகத்தில் பொறுப்புகொடுத்து உற்சாகப்படுத்துவதே சிறப்புடையதாக இருக்கும். தகவல் தொழில்நுட்பத் துறையைச் சேர்ந்தவர்களுக்கு நீங்கள் என்ன உதவி செய்தீருக்கிறீர்கள்? எத்தனை கம்ப்யூட்டர்களை வழங்கியிருக்கிறார்கள்? எத்தனை மொபைல் போன்களை வழங்கி இருக்கிறீர்கள்? அவர்களுக்கு தேவையான உதவிகளை நீங்கள் செய்தாலே தகவல் தொழில்நுட்பத்துறை வீரியமாக விரியும்” என்று கூறியிருக்கிறார்.

அதிமுகவில் குழப்பங்கள் தீர்ந்தாலும் அதிமுகவின் ஐடி விங்கில் குழப்பங்கள் தீராது போல!

**-ஆரா**

[ஐபேக் மாமனா மச்சானா? திமுக ஐடிவிங் கூட்டத்தில் பிடிஆர்](https://minnambalam.com/politics/2020/05/19/51/ipac-itwing-dmk-ptr-panalivel-thiyagarajan-prasanth-kishor)�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share