பாகிஸ்தான் மசூதியில் குண்டுவெடிப்பு: 56 பேர் பலி!

politics

பாகிஸ்தானில் வெள்ளிக்கிழமையன்று மசூதி ஒன்றில் தற்கொலை வெடிகுண்டு தாக்குதலில் 56 பேர் உயிரிழந்துள்ளனர்,194 பேர் காயமடைந்துள்ளனர்.

பாகிஸ்தானில் சுமார் 22 கோடி மக்கள் வசிக்கின்றனர். அவர்களில் 85 சதவீதம் பேர் சன்னி முஸ்லிம்கள். சுமார் 15 சதவீதம் பேர் ஷியா முஸ்லிம்கள் ஆவர்.

பாகிஸ்தானின் வடமேற்கு எல்லைப்புற பகுதியில் இருக்கும் பெஷாவர் நகரில் ஷியா பிரிவு இஸ்லாமியர்களின் மசூதி ஒன்று உள்ளது. இங்கு வெள்ளிக்கிழமையான நேற்று(மார்ச் 4) நூற்றுக்கணக்கானவர்கள் தொழுகை செய்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் இரண்டு பேர் மசூதிக்குள் நுழைய முயன்றனர். அவர்களை தடுத்த போலீசார்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதில் ஒரு போலீஸ்காரர் கொல்லப்பட்டார். மற்றொருவர் படுகாயம் அடைந்தார். இதையடுத்து, மசூதிக்குள் இரண்டு பேரும் நுழைந்துள்ளனர். அதில் ஒருவர் தனது உடலில் இருந்த வெடிகுண்டை வெடிக்க செய்தார். பயங்கர சத்தத்துடன் வெடிகுண்டு வெடித்ததில் 56 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் வெடிகுண்டு விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அங்குள்ள பொதுமக்களும் மீட்பு பணியில் ஈடுபட்டனர். காயமடைந்தவர்களில் பலரும் கவலைக்கிடமாக இருப்பதால், உயிர் பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்ற அச்சம் உள்ளது.


இந்த குண்டுவெடிப்புக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்,
“பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி மருத்துவ உதவிகள் வழங்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ஷேக் ரஷீத் அகமது, இந்த சம்பவம் குறித்து தலைமைச் செயலாளர் மற்றும் ஐ.ஜியிடம் அறிக்கை கேட்டுள்ளார்.

கைபர்- பக்துன்க்வா முதல்வர் மஹ்மூத் கான், குண்டுவெடிப்புக்கு கண்டனம் தெரிவித்ததோடு, இந்த கொடூரமான செயலில் ஈடுபட்டவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவதாக உறுதியளித்தார்.

இந்த குண்டுவெடிப்புக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. இஸ்லாமிக் ஸ்டேட் மற்றும் ஆப்கானிஸ்தானில் உள்ள தலிபான்களில் இருந்து பிரிந்த பாகிஸ்தான் தலிபான் அமைப்பு ஆகிய இரண்டும் இதேபோன்ற தாக்குதல்களை இந்த பகுதியில் ஏற்கனவே நடத்தியுள்ளன. இப்பகுதி அண்டை நாடான ஆப்கானிஸ்தானின் எல்லைக்கு அருகில் அமைந்துள்ளது. கடந்த 2018ஆம் ஆண்டு பெஷாவர் நகரில் மக்கள் அதிகம் கூட கூடிய சந்தையில் நடந்த தற்கொலை வெடிகுண்டு தாக்குதலில் 31 பேர் உயிரிழந்தனர். அதன்பின்பு பெஷாவரில் நடந்த பெரிய தாக்குதல் இதுதான் என கூறப்படுகிறது.
**-வினிதா**

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *