<எந்த தடுப்பூசி பெஸ்ட்?

politics

சுகாதார ஊழியர்கள் மத்தியில் நடத்தப்பட்ட பரிசோதனையில் கோவாக்சின் தடுப்பூசியைக் காட்டிலும் கோவிஷீல்டு தடுப்பூசியில் அதிகளவில் நோய் எதிர்ப்பு தன்மை இருப்பதாக ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

இந்தியாவில் கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளன. தடுப்பூசி குறித்த போதிய விழிப்புணர்வு இல்லாததால் ஆரம்பத்தில் தடுப்பூசி போட்டுக் கொள்ள மக்கள் முன்வரவில்லை. பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளுக்கு பிறகு தடுப்பூசி குறித்த அச்சம் நீங்கியதையடுத்து, மக்கள் ஆர்வமுடன் தடுப்பூசி போட்டுக் கொள்கின்றனர்.

தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், எந்த தடுப்பூசி அதிக நோய் எதிர்ப்பு தன்மை கொண்டது என்ற கேள்வி ஆரம்பத்தில் இருந்தே மக்கள் மனதில் இருக்கிறது. இரண்டு தடுப்பூசிகளுமே நல்ல பலன் தருகின்றது என மருத்துவ நிபுணர்கள் கூறி வந்தாலும், ஒன்றை விட மற்றொன்று நல்ல பலன் தருவதாக மக்களிடையே கருத்து நிலவி வருகிறது.

கோவிஷீல்டை விட கோவாக்சின் போட்டுக் கோங்க, அதான் நல்ல பலன் தருகிறது என்றும், மற்றொரு பக்கம் கோவிஷீல்ட் நல்ல ரிசல்ட் கொடுக்குது, அதையே போட்டுக்கோங்க என்றும் மக்கள் அவரவர்களின் புரிதலுக்கேற்றவாறு கருத்துகளை கூறி வருகின்றனர்.

இந்நிலையில், கோவாக்சினை விட கோவிஷீல்டு தடுப்பூசியில் அதிக நோய் எதிர்ப்பு தன்மை இருப்பதாக டாக்டர் ஏ.கே.சிங் மற்றும் அவரது குழுவின் ஆரம்பகட்ட ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆய்வில் இந்தியாவின் 13 மாநிலங்கள் மற்றும் 22 நகரங்களில் உள்ள 515 சுகாதாரப் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். இவர்களில் 425 பேருக்கு கோவிஷீல்டு தடுப்பூசியும், 90 பேருக்கு கோவாக்சின் தடுப்பூசியும் போடப்பட்டது. இவர்களுக்கு இரண்டாவது டோஸ் செலுத்தப்பட்ட 21 முதல் 36 நாட்களுக்கு பிறகு 95 சதவிகிதத்தினருக்கு நோய் எதிர்ப்பு திறன் அதிகரித்திருக்கிறது.

அதில், கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களுக்கு 98 சதவிதம் நோய் எதிர்ப்பு திறனும், கோவாக்சின் தடுப்பூசி 80 சதவிகித நோய் எதிர்ப்பு திறனும் அதிகரித்துள்ளது. கோவாக்சினை செலுத்திக் கொண்டவரை விட கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்திக் கொண்டோரின் உடலில் 10 மடங்கு அதிக நோய் எதிர்ப்பு செல்கள் உருவாகியிருப்பது, ரத்த மாதிரிகள் பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் இரண்டுமே நல்ல நோய் எதிர்ப்பு சக்தியை கொடுத்தாலும், கோவாக்சினுடன் ஒப்பிடும்போது கோவிஷீல்டு தடுப்பூசியில் ஆன்டிபாடிகள், ஸ்பைக் ஆன்டிபாடி, ஆகியவை சற்று அதிகமாக இருப்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது.

ரத்தத்தில் எவ்வளவு ஆன்டிபாடிகள் உள்ளன என்பதைக் கண்டறியும் antibody titer சோதனையில் கோவிஷீல்டு போட்டுக் கொண்டவர்களுக்கு 115 AU/ml ஆகவும், கோவாக்சின் போட்டுக் கொண்டவர்களுக்கு 51 AU/ml ஆகவும் உள்ளது.

இருப்பினும் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களில் 27 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. அதில் 25 பேருக்கு அதிகமான கொரோனா பாதிப்பும், 2 பேருக்கு மிதமான பாதிப்பும் உள்ளது. ஆனால் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களில் ஒருவர் கூட உயிரிழக்கவில்லை.

கோவிஷீல்டு தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு 5.5 சதவிகிதமும், கோவாக்சின் போட்டுக் கொண்டவர்களுக்கு 2.2 சதவிகிதமும் கொரோனா பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆய்வின் முடிவுகள் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாததால் இதனை மருத்துவத்துறையினர் ஒரு வழிகாட்டலாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என்றும் நிபுணர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

கொல்கத்தாவில் உள்ள ஜிடி ஹாஸ்பிடல் மற்றும் டயாபிடிஸ் இன்ஸ்டிடியூட் தலைமை மருத்துவர் அவதேஷ் குமார் சிங், கூறுகையில், இந்த ஆய்வானது எந்த தடுப்பூசி சிறப்பானது என்பதை தீர்மானிப்பதற்காக அல்ல; தடுப்பூசி செயல்பாடுகளின் யதார்த்தத்தை உணர்த்துவதற்காகவே என்று தெரிவித்துள்ளார்.

**-வினிதா**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *