திடீர் மாரடைப்பு-ஓபிஎஸ் மனைவி மறைவு: முதல்வர், ஈபிஎஸ் நேரில் அஞ்சலி!

politics

முன்னாள் துணை முதல்வரும், அதிமுக ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான ஓ.பன்னீர் செல்வத்தின் மனைவி இன்று (செப்டம்பர் 1) காலமானார். அவருக்கு முதல்வர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

ஓபிஎஸ் மனைவி விஜயலட்சுமி. அவருக்கு வயது 66. ஓபிஎஸின் அரசியல் பயணத்தில் உறுதுணையாக இருந்த விஜயலட்சுமி உடல் நலக் குறைவு காரணமாகக் கடந்த ஆகஸ்ட் 22ஆம் தேதி சென்னை பெருங்குடியில் உள்ள ஜெம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

கடந்த 10 தினங்களாகச் சிகிச்சை பெற்று வந்த விஜயலட்சுமி பன்னீர் செல்வம் இன்று காலை திடீர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இதுகுறித்து ஜெம் மருத்துவமனை வெளியிட்ட அறிவிப்பில், “கடந்த 10 தினங்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த விஜயலட்சுமி இன்று டிஸ்சார்ஜ் செய்யப்படுவதாக இருந்தார்.

ஆனால் காலை 5 மணிக்கு திடீர் மாரடைப்புக்கு உள்ளானார். உடனடியாக இதயநோய் நிபுணர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பயனின்றி காலை 6.45 காலமானார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விஜயலட்சுமியை இழந்து வாடும் ஓ.பன்னீர்செல்வத்துக்கும், அவரது குடும்பத்தினருக்கும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

முதல்வர் ஸ்டாலின் பன்னீர் செல்வத்தின் மனைவி அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவமனைக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தி, களங்கி நின்ற ஓபிஎஸ் கையை பிடித்து ஆறுதல் கூறினார்.

திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி, அமைச்சர்கள் துரைமுருகன், மா.சுப்பிரமணியன், தங்கம் தென்னரசு, சேகர்பாபு, ஆகியோரும் ஓ.பன்னீர்செல்வம் மனைவி விஜயலட்சுமி உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

அதுபோன்று எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி நேரில் அஞ்சலி செலுத்தி, ஓபிஎஸுக்கு ஆறுதல் தெரிவித்தார்.

எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட இரங்கல் செய்தியில், “அண்ணன் ஓபிஎஸின் மனைவியை அவரது இல்லத்தில் சந்தித்த போதெல்லாம், மிகுந்த பாசத்துடனும், அன்புடனும், உயர்ந்த உள்ளத்துடனும் உபசரிப்பார். அந்த நல்ல இதயம் நம்மை விட்டு பிரிந்ததே என்று வேதனை அடைகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார். முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, செங்கோட்டையன், துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி உள்ளிட்டோர் ஓபிஎஸுடன் உள்ளனர்.

விஜயலட்சுமியின் மறைவுக்கு புதுச்சேரி (பொறுப்பு) மற்றும் தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, கனிமொழி எம்.பி, சு.வெங்கடேசன் எம்.பி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

விஜயலட்சுமியின் உடல் சொந்த ஊரான தேனி மாவட்டம் பெரியகுளத்துக்கு கொண்டு செல்லப்பட்டு நாளை அடக்கம் செய்யப்படவுள்ளதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

**-பிரியா**

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0