கூட்டுறவுத் துறையில் ரூ.780 கோடி ஊழல்: ஐ.பெரியசாமி

Published On:

| By Jegadeesh

கூட்டுறவுத் துறையில் கடந்த 10 ஆண்டுகளில் 750 கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாகக் கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தொகுதியில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள ஆத்தூர் கூட்டுறவு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் புதிய மாணவர்கள் சேர்க்கைக்கான விண்ணப்பப் படிவங்களை மாணவர்களுக்கு நேற்று (ஜூலை 1) அமைச்சர் பெரியசாமி வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், இதுவரை இல்லாத அளவுக்குக் கூட்டுறவுத் துறைக்குக் கல்லூரி ஒதுக்கப்பட்டுள்ளது. திமுகவின் இந்த ஓராண்டுக் கால ஆட்சியில் 33 அரசு கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன. திண்டுக்கல் மாவட்டத்திற்கு மட்டும் 6 கல்லூரிகள் கிடைத்துள்ளன. கூட்டுறவு கல்லூரியில் முதல் கட்டமாக ஐந்து பாடப்பிரிவுகள் தொடங்கப்பட்டுள்ளன. நடப்பு கல்வி ஆண்டு முதல் மாணவர் சேர்க்கை தொடங்கப்பட்டுள்ளது. கல்லூரியில் 1465 ரூபாய் கட்டணத்தில் உயர்கல்வி வழங்க நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்த கல்லூரி மூலம் 600 க்கும் மேற்பட்ட கிராமப்புறத்தைச் சேர்ந்த மாணவ மாணவிகள் உயர்கல்வி பேறும் வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

மேலும் அவர், கூட்டுறவுத் துறையில் 1990 ஆம் ஆண்டு முதல் பல்வேறு ஊழல் நடந்திருக்கின்றன. ஊழலைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க நான் சட்ட குழு ஒன்றை அமைத்திருக்கிறேன். கடந்த 10 ஆண்டுகளில் 780 கோடி ரூபாய் ஊழல் நடந்திருக்கிறது. அதற்கு முன்னதாக நடந்த ஊழல் தொடர்பான விவரங்களையும் எடுத்து இருக்கிறேன்.

தவறு செய்தவர்களின் சொத்துக்கள் எல்லாம் ஏலத்திற்குக் கொண்டுவரப்படும். அதுபோன்று வழக்கறிஞர்களை நியமித்து கூட்டுறவுச் சங்கங்களுக்குத் தொடர்புடைய நிலுவையில் உள்ள வழக்குகள் எல்லாம் முடிவுக்கு கொண்டு வரப்படும். கடந்த 10 ஆண்டுகளில் 50 வழக்குகளுக்குக் கூட முடிவு காணப்படவில்லை. கூட்டுறவுத் துறையில் காலிப் பணியிடங்கள் நிரப்பும் பணி எந்தவித தவறும் நடக்காதவாறு வெளிப்படைத் தன்மையுடன் நடைபெறும் தகுதியுள்ளவர்களுக்கு மட்டுமே பணி வழங்கப்படும்” என்று கூறினார்.

ஜெகதிஷ்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share