வாட்ஸப் கால், செல்போன், லேப்டாப்: சபரீசன் ரெய்டு சஸ்பென்ஸ்

politics

திமுக தலைவர் ஸ்டாலினுடைய மகள் செந்தாமரை-மாப்பிள்ளை சபரீசன் ஆகியோரது நீலாங்கரை வீட்டில் இன்று (ஏப்ரல் 2) காலை முதல் மத்திய அரசின் வருமான வரித்துறையினர் ரெய்டு நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து ஸ்டாலின் இன்று காலை அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் பேசும்போது, “இன்னும் எவ்வளவு ரெய்டு நடத்தினாலும் நடத்திக் கொள்ளுங்கள். திமுகவின் வெற்றியைத் தடுக்க முடியாது. எங்களை முடக்க முடியாது”என்று பேசினார்.

ஒருபடிமேலே போன திமுகவின் இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் இன்றைய தேர்தல் பிரச்சாரத்தில், “மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவோட பையன் ஜெய் ஷா இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தோட செயலாளர். அவர் நடத்துற கம்பெனி ஒன்றுக்கு கூட ஒழுங்கா வரி கட்டல. குஜராத்ல அமித் ஷா மந்திரியா இருந்தபோது போலி என் கவுன் ட்டர் பண்ணி கம்பி எண்ணியவர்தான் அமித் ஷா. குஜராத் மாநிலத்துக்குள்ள ஆறு மாசம் வரக் கூடாது என நீதிமன்றம் சொன்னதால ஊரைவிட்டு ஓடியவர்தான் அமித் ஷா. அமித் ஷா அவர்களே… உங்களுக்கு சவால் விடுறேன். என் சொத்தையெல்லாம் உங்க பையன் பேர்ல எழுதி வைக்கிறேன். உங்க பையன் சொத்தை என் பேர்ல எழுதி வைக்கிறீங்களா?

நான் கலைஞர் பேரன். உங்கள் உருட்டல் மிரட்டலுகெல்லாம் பயப்பட மாட்டேன். என் தங்கச்சி செந்தாமரை வீட்ல இன்னிக்கு காலையில் இருந்து ஐடி ரெய்டு. என் அட்ரஸ் சொல்றேன் குறிச்சுக்கங்க. 259 சித்தரஞ்சன் சாலை சென்னை… உனக்கு தைரியம் இருந்தா என் வீட்டுக்கு ரெய்டு வா. என்ன இருக்குனு நான் காட்றேன்” என்று சவால் விட்டுப் பேசியிருக்கிறார் உதயநிதி ஸடாலின்.

இப்படி சவால்கள் ஒருபக்கம் என்றால் திமுக சார்பில் அகில இந்திய தலைமைத் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது. அதில் மத்திய அரசு தனது வருமான வரித்துறையை அரசியல் காரணத்துக்காக திமுக மீது ஏவுவதாக குற்றம் சாட்டியுள்ளது.

இப்படி வெளியே ரெய்டுக்கான ரியாக்‌ஷன்கள் நடந்துகொண்டிருக்கும் நிலையில் நீலாங்கரையில் இருக்கும் சபரீசன் வீட்டில் ரெய்டு நடந்துகொண்டிருக்கிறது.

இந்த ரெய்டு குறித்து மத்திய அரசு வட்டாரங்களில் விசாரித்தோம்.

“சபரீசன் திமுகவின் தேர்தல் கூட்டணியை மட்டுமல்ல, தேர்தல் செலவு தொடர்பான விவகாரங்களையும் கவனித்து வந்தார். மேலும் திமுகவுக்கு தேர்தல் நிதி திரட்டுவது தொடர்பான இந்திய அளவில் பல்வேறு தொழிலதிபர்களுடன் பேசி வந்தது சபரீசன் தான். சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு வருமான வரித்துறையின் புலனாய்வுப் பிரிவு சில மாதங்களாகவே தமிழகத்தை குறிப்பாக திமுகவை கூர்ந்து கவனித்து வந்தது.

சபரீசன் தனது நடமாட்டம் மத்திய அரசால் கண்காணிக்கப்படுவதை அறிந்தே இருந்தார். ஆனபோதும் தனது அத்தனை அலைபேசி உரையாடல்களையும் வாட்ஸப்பிலேயே மேற்கொண்டு வந்தார். தனது குடும்பத்தினரிடம் நலம் விசாரிக்கும் அழைப்புகளை மட்டுமே வாட்ஸப் அல்லாத அழைப்பு மூலமாக பேசினார். தொழிலதிபர்களுடனான அத்தனை உரையாடல்களும் வாட்ஸ் அப் மூலமாகத்தான் சபரீசன் மேற்கொண்டு வந்தார். வாட்ஸ் அப் உரையாடல்களை பதிவு செய்ய முடியாது என்பதுதான் இதற்குக் காரணம்.

ஆனால் மத்திய அரசு வாட்ஸ் அப் நிறுவனத்துடன் பேசி தங்களுக்குத் தேவையான வாட்ஸ் அப் கால் விவரங்களை பெற்றிருக்கிறது.ஏற்கனவே ஃபேஸ்புக்கில் ஜியோ பெருமளவு முதலீடு செய்திருக்கிறது. ஃபேஸ்புக் நிறுவனத்தின் ஒரு அங்கமாகத்தான் இப்போது வாட்ஸ் அப்பும் இருக்கிறது. அந்த வகையில் வாட்ஸ் அப் நிறுவனத்தின் மூலமாக இந்திய அளவில் எதிர்க்கட்சியினரின் வாட்ஸ் அப் உரையாடல்களையும் ஆக்சஸ் செய்யும் வாய்ப்பு ஆளுந்தரப்புக்கு இருக்கிறது. இப்படிப்பட்ட வகையில்தான் சபரீசனின் வாட்ஸ் அப் உரையாடல்களும் கவனிக்கப்பட்டன, கண்காணிக்கப்பட்டன.

இந்தக் கண்காணிப்புகளுக்குப் பிறகுதான் இன்று காலை சபரீசன் வீட்டுக்கு ரெய்டு டீம் அனுப்பப்பட்டது. வருமான வரித்துறையினரின் முதல் இலக்கு சபரீசனின் லேப்டாப்பும், செல்போனும்தான். ஏனென்றால் என்னதான் அலைபேசி ஒட்டுக் கேட்கப்பட்டாலும் அதில் முழு விவரங்கள் கிடைக்கவில்லை. எனவே சபரீசனின் செல்போனிலும், லேப்டாப்பிலும் அவரது தொழிலதிபர்களின் தொடர்புகள், பணப் பரிமாற்றங்கள் ஆகியவை பற்றிய விவரங்கள் இருக்கலாம் என்று எதிர்பார்த்துச் சென்றிருக்கிறது வருமான வரித்துறை” என்கிறார்கள்.

**-வேந்தன்**�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *