Zயாருக்கு கதை சொல்லப் போனீர் கி.ரா?

politics

தலைசிறந்த கதை சொல்லியாகவும், கரிசல் இலக்கியத்தின் தந்தையாகவும் போற்றப்படும் எழுத்தாளர் கி.ரா இன்று (மே 18) நள்ளிரவில் காலமானார். 99 வயதான கி.ராஜநாராயணன் வரும் செப்டம்பர் மாதம் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கி.ரா விடைபெற்ற செய்தி அதற்குள் வந்துவிட்டது.

ஒருங்கிணைந்த திருநெல்வேலி மாவட்டம் (தற்போது தூத்துக்குடி மாவட்டம்) கோவில்பட்டியை அடுத்த இடைச்செவல் என்னும் கிராமத்தில் பிறந்தவர் ராஜநாராயணன்.

புதுச்சேரி லாஸ்பேட்டை அரசு குடியிருப்பில் தங்கியிருந்த கி.ரா காலமானார். அவரது இல்லத்திலேயே அஞ்சலிக்கு வைக்கப்படும் அவரது உடல், செவ்வாய்க்கிழமை (18ஆம் தேதி) மாலை கருவடிக்குப்பம் சுடுகாட்டுக்கு ஊர்வலமாகக்கொண்டு செல்லப்பட்டு நல்லடக்கம் செய்யப்படுகிறது.

7ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்த கி.ரா. விவசாயம் பார்த்து வந்தார். 35 வயதுக்குப் பின்னரே எழுத்தாளர் ஆனார். ‘மாயமான்’ என்ற முதல் சிறுகதை 1958-ல் ‘சரஸ்வதி’ இதழில் வெளியானதே அவரது முதல் வெளியிடப்பட்ட படைப்பாகும். சிறுகதை, நாவல், குறுநாவல், கிராமிய கதைகள் என்று இலக்கியத்தின் அனைத்து தளங்களிலும் இயங்கியவர். அவரது கிராமிய கதைகளுக்கு மயங்காதவர்களே இல்லை என்பதால்தான் கதை சொல்லி என்ற அழகான பட்டத்துக்கு பொருத்தமானவராக திகழ்ந்தார் கி.ரா.

சாகித்ய அகாடமி விருது, தமிழக அரசின் விருது, கனடா நாட்டின் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை கி.ரா பெற்றுள்ளார். ஆனபோதும் அவருக்கு ஞானபீடம் வழங்கவில்லையே என்ற குறை அவரது வாசகர்களுக்கு நிரம்ப இருந்தது.

வட்டார வாய்மொழி நடையிலும் சரி, செம்மொழியான எழுத்து நடையிலும் சரி தனக்கென ஒரு சாம்ராஜ்ஜியத்தை நிறுவியவர் கி.ரா.

**-வேந்தன்**�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *