�டிஜிட்டல் திண்ணை: அவரை நீக்கினால் இவரை நீக்குகிறேன்: பன்னீர் -எடப்பாடி நேருக்கு நேர் மோதல்!

politics

வைஃபை ஆன் செய்ததும் இன்ஸ்டாகிராம், ‘அதிமுக தலைமை அலுவலகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி நடந்த ஆலோசனைக் கூட்டம் பற்றி மின்னம்பலத்தின் தகவலை பலரும் எதிர்பார்க்கிறார்கள்’ என்று ஒரு குறிப்பை அனுப்பியது.

அதற்கு ஒரு ஸ்மைலியை முதல் பதிலாக அனுப்பிய வாட்ஸ்அப், அந்தக் கூட்டம் பற்றிய விரிவான தகவலை டைப் செய்யத் தொடங்கியது.

“ஏப்ரல் 6-ஆம் தேதி மாலை 6.30 முதல் இரவு 9.45 மணி வரை நடந்த அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வத்துக்கும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கும் இடையில் நேருக்கு நேர் கடுமையான வாக்கு வாதங்கள் வெடித்தன.

இப்படி நடக்கும் என்று மின்னம்பலத்தில் டிஜிட்டல் திண்ணை பகுதியில் ஏற்கனவே நாம் பேசியிருந்தோம். [உட்கட்சி தேர்தல் ஒற்றை தலைமையை நோக்கி எடப்பாடி](https://minnambalam.com/politics/2022/03/30/34/admk-party-elections-edapadi-moves-to-single-leader) என்ற தலைப்பில் மார்ச் 30ஆம் தேதி மின்னம்பலத்தில் செய்தி வெளியாகியிருந்தது.

அதில், ‘அதிமுகவின் உட்கட்சித் தேர்தல் நடைபெறும் ஒவ்வொரு மாவட்டத்திலும் அந்த மாவட்ட செயலாளரை தொடர்பு கொண்ட எடப்பாடி பழனிச்சாமி தனது ஆதரவாளர்கள் பெரும்பாலானோரை கட்சி நிர்வாகிகள் ஆக்குவதற்கான அத்தனை ஏற்பாடுகளையும் செய்து முடித்துவிட்டார்.கட்சியைக் கைப்பற்றுவது என்பது ஏதோ ஓரிரவில் நடக்கக் கூடியதல்ல உட்கட்சித் தேர்தலில் கிட்டத்தட்ட அனைத்து மாவட்டங்களிலும் தனது ஆதரவாளர்களை இடம் பெறச் செய்து நிறைவாக தன்னைப் பொதுச்செயலாளர் அல்லது கட்சி விதிப்படி ஒருங்கிணைப்பாளராக தேர்வு செய்ய வைப்பதுதான் எடப்பாடியின் திட்டம்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

ஏப்ரல் 6-ஆம் தேதி நடந்த அதிமுக தலைமைக் கழக ஆலோசனைக் கூட்டத்தில் இது தான் பிரச்சனையாக வெடித்தது.

அடுத்தடுத்த உட்கட்சித் தேர்தல்களை எப்படி நடத்துவது என்று ஆலோசிப்பதற்காகவும் சட்டமன்றத்தில் என்ன வியூகம் வகுப்பது என்று ஆலோசிப்பதற்காகவும்தான் இந்தக் கூட்டம்.

கூட்டத்தில் பேசிய ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், வழக்கம் போல, தான் புறக்கணிக்கப்படுவதாக பல்லவியை பாட ஆரம்பித்தார்.

‘சில மாவட்டச் செயலாளர்களை மாற்ற வேண்டும் என்று நான் பட்டியல் கொடுத்துள்ளேன். ஆனால் அவற்றில் கையெழுத்திட இணை ஒருங்கிணைப்பாளர் மறுப்புத் தெரிவித்து வருகிறார்.
சென்னையில் ஆதிராஜாராம், வெங்கடேஷ் பாபு, பாலகங்கா ஆகிய மாவட்ட செயலாளர்கள் டம்மியாகத்தான் செயல்பட்டு வருகிறார்கள்.
இவர்கள் உட்பட சென்னையின் பல மாவட்ட செயலாளர்களை நீக்கிவிட்டு புதிய மாவட்ட செயலாளர்களை நியமிக்க வேண்டும்‌. இதை நான் சொன்னால் இணை ஒருங்கிணைப்பாளர் கேட்க மறுக்கிறார்’ என்று பன்னீர்செல்வம் எடுத்த எடுப்பிலேயே வெடித்தார்

தேனி மாவட்டத்தில் சசிகலாவுக்கு ஆதரவான கருத்துக்களை அதிமுகவின் தேனி மாவட்ட செயலாளர் சையது கான் கைலாச பட்டியில் உள்ள பன்னீர்செல்வத்தின் பண்ணை வீட்டிலேயே நிர்வாகிகள் கூட்டம் போட்டு சமீபத்தில் பேசினார்.

அப்போது முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சிறையில் இருந்தார். அதனால் அப்போது சேலத்திலிருந்து எடப்பாடி
சென்னை தலைமை கழகத்தை உள்ளடக்கிய மாவட்ட செயலாளரான ஆதிராஜாராமை தொடர்புகொண்டு செய்தியாளர்களை சந்திக்குமாறு கட்டளையிட்டார். அதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய ஆதிராஜாராம், ‘ சில ஆதாயம் தேடிகள், சில சந்தர்ப்ப வாதிகள் தங்கள் பழைய எஜமானர்களுக்கு கால் கழுவுவதற்காக சில காரணங்களைக் கூறுகிறார்கள். சசிகலாவை கட்சிக்குள் சேர்ப்பதில்லை என ஏற்கனவே 90% மாவட்டங்களில் தீர்மானம் நிறைவேற்ற ஆகிவிட்டது. இது ஓ பன்னீர்செல்வத்துக்கும் தெரியும். இவர்கள் இல்லாமலேயே அதிமுக விரைவில் பெரிய வெற்றியைப் பெறும்’ என்று பன்னீர்செல்வத்துக்கு எதிராக எடப்பாடியின் குரலாக அன்று சென்னையில் ஒலித்தார் ஆதிராஜாராம். அப்போதே அவர் மீது பன்னீர் செல்வத்திற்கு கடுமையான கோபம்.

இந்தப் பின்னணியில்தான் ஆதிராஜாராம் உள்ளிட்ட சென்னை மாவட்ட செயலாளர்களை மாற்றிவிட்டு புதிய மாவட்ட செயலாளர்கள் நியமிக்க வேண்டும் என்றும் அதற்கு எடப்பாடி பழனிசாமி கையெழுத்திட மறுக்கிறார் என்றும் பகிரங்கமாக தலைமை கழகத்தில் குற்றம் சாட்டினார் பன்னீர்செல்வம்.

அப்போது குறுக்கிட்ட எடப்பாடி பழனிச்சாமி, ‘தேனி மாவட்டத்தில் சசிகலாவுக்கு ஆதரவாக கூட்டம் போட்ட மாவட்ட செயலாளர் சையது கானை கட்சியிலிருந்து நீக்கும் அறிவிப்பு தயாராக இருக்கிறது. அதில் அண்ணன் கையெழுத்திட்டால் அண்ணன் சொல்லும் அறிவிப்புகளில் நானும் கையெழுத்து போடுகிறேன்’ என்று பன்னீருக்கு பதில் சொன்னார்.
இந்த நேரத்தில்தான் பன்னீர் ஆதரவாளர்களுக்கும் எடப்பாடி ஆதரவாளர்களுக்கும் இடையில் வாக்குவாதம் எழுந்தது.
ஆச்சரியமாக முன்னாள் அமைச்சர் உதயகுமார் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக சில விஷயங்களைப் பேசினார். ‘தங்கமணி வேலுமணி ஆகியோரின் ஆதிக்கம் தமிழ்நாட்டின் எல்லா மாவட்டங்களிலும் பதவி வகித்து வருகிறது. தென் மாவட்டங்களிலும் பரவி வருகிறது’ என்று உதயகுமார் கூற அதற்கு வேலுமணி, தங்கமணி ஆகியோர் எழுந்து நின்று பதில் கூற… வாக்குவாதங்கள் அதிகரித்தன.

‘இப்படி நாம் அடிச்சுகிட்டா கட்சி எப்படி நடத்துவது?’ என்று கேட்டுக்கொண்டே துணை ஒருங்கிணைப்பாளர் வைத்தியலிங்கம் வெளியே சென்றுவிட்டார்.
மீண்டும் அவரை அழைத்து வந்து சட்டமன்றத்தில் என்ன செய்யலாம் என்று விவாதித்து கூட்டத்தை ஒரு வழியாக முடித்திருக்கிறார்கள்.

அதிமுகவுக்குள் உட்கட்சித் தேர்தல் மூலம் எடப்பாடி பழனிச்சாமி தனது கட்டமைப்பை பலமாக விரிவுபடுத்தி வருவதை பன்னீர்செல்வம் உணர்ந்திருக்கிறார். அதனால் தான் ஒருங்கிணைப்பாளராக இருக்கும்போதே எடப்பாடிக்கு எதிராக பெரிய மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்று அவர் நினைக்கிறார். இதற்கு எடப்பாடி கடுமையான செக் வைத்துக் கொண்டிருக்கிறார். இதுதான் அதிமுக கூட்டத்தில் எதிரொலித்திருக்கிறது” என்ற மெசேஜுக்கு சென்ட் கொடுத்துவிட்டு வாட்ஸ் அப் ஆஃப்லைன் சென்றது.

[ஆதி வழியே பேசிய எடப்பாடி](https://minnambalam.com/politics/2022/03/03/26/edapadi-discuss-semmalai-ilangovan-admk-ops-saiyad-khan-adhi-rajaram)

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *