இரவு இரட்டைக் கொலை: அதிகாலை இரு என்கவுன்ட்டர்

politics

தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு பற்றி எதிர்க்கட்சிகள் புகார் செய்துகொண்டிருக்கும் நிலையில், நேற்று (ஜனவரி 6 ) இரவு நடைபெற்ற இரட்டைக் கொலையில் தொடர்புடையவர்கள் இன்று (ஜனவரி 7) காலை போலீஸுடனான என்கவுன்ட்டர் மோதலில் கொல்லப்பட்டனர்.

சட்டமன்றம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் நடந்த என்கவுன்ட்டர் அரசியல் ரீதியாகவும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

சென்னையை அடுத்த செங்கல்பட்டில் கே. கே.தெரு பகுதி எப்போதுமே பரபரப்பானது. பழைய பஸ் நிலையம், காய்கறி மார்க்கெட் என்று எப்போதுமே மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதி. இங்கே நேற்று மாலை 6.30 மணிக்கு செங்கல்பட்டு காவல்நிலையத்தில் கையெழுத்து போட்டுவிட்டு இருவர் வெளியே வந்தனர். அதில் ஒருவரான அதிமுகவை சேர்ந்த காய்கறி வியாபாரியின் மகன் கார்த்திக் என்ற அப்பு டீ குடிப்பதற்காக டீ கடைக்கு சென்றுள்ளார். அப்போது கார்த்திக்கை பின் தொடர்ந்து டூவீலரில் வந்த மூன்று பேர் கார்த்திக் மீது நாட்டு வெடிகுண்டை வீச, அது வெடித்தது. அதோடு புகை மூட்டத்தில் கத்தியால் கார்த்திக்கை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். அந்த இடத்திலேயே கார்த்திக் துடிதுடித்து இறந்தார். அதே கும்பல், செங்கல்பட்டு டவுன் போலீஸ் நிலையம் அருகே உள்ள மேட்டுத் தெருவில் இருக்கும் ஒரு வீட்டுக்குள் நுழைந்தது. அங்கே டிவி பார்த்துக்கொண்டிருந்த 22 வயது இளைஞனை சரமாரியாக வெட்டிக் கொன்றது. சீனிவாசன் என்ற காய்கறி வியாபாரியின் மகனான மகேஷ்தான் கொல்லப்பட்டவர்.

சட்டமன்றம் நடந்துகொண்டிருக்கும்போது செங்கல்பட்டில் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டு நடந்த இந்த இரட்டைக் கொலை போலீஸ் அதிகாரிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. போலீஸ் மேலிடத்தின் உத்தரவையடுத்து செங்கல்பட்டில் இரவே நூற்றுக்கணக்கான போலீஸார் குவிக்கப்பட்டு குற்றவாளிகளைத் தேடினார்கள்.

குற்றவாளிகள் தினேஷ், மொய்தீன், குணா, மற்றும் ஒரு பெண் ஆகியோர் மாமண்டூர் காட்டுப் பகுதியில் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்து அங்கே சென்றனர் போலீஸார். தினேஷ், மொய்தீன் ஆகியோர் போலீஸார் மீதே நாட்டு வெடிகுண்டு வீசி தாக்கிவிட்டுத் தப்ப முயன்றதாக தெரிகிறது. அப்போது திருக்கழுக்குன்றம் இன்ஸ்பெக்டர் துப்பாக்கியால் சுட்டதில் இவர்கள் கொல்லப்பட்டதாக போலீஸார் சொல்கிறார்கள்.

கொல்லப்பட்ட தினேஷ், மொய்தீன் ஆகிய இருவர் மீதும் பல வழக்குகள் பதிவாகியுள்ளன. உத்திரமேரூர் ரவுடிகளின் கூடாரமாக மாறி வருகிறது. நேற்று நடந்த இரட்டைக் கொலையும் ரவுடிகளுக்கு இடையிலான மோதலால்தான் நடைபெற்றது என்றும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.

**-வேந்தன்**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *