கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக இரண்டாவது கட்டமாக விதிக்கப்பட்ட ஊரடங்கு இந்தியா முழுதும் மே 3 ஆம் தேதியோடு முடிகிறது. அதையொட்டி அடுத்த கட்டமாக ஊரடங்கு நீட்டிக்கப்படுமா, அல்லது தொற்று இல்லாத பகுதிகளில் தளர்த்தப்படுமா என்ற எதிர்பார்ப்பு இந்தியா முழுதும் நிலவுகிறது.
தமிழகத்தில் நாளை மே 2 ஆம் தேதி அமைச்சரவை கூட்டம் நடக்க இருக்கும் நிலையில் ஊரடங்கு நீடிக்கும் என்ற பேச்சு அதிகமாகியிருக்கிறது. அவ்வாறு நீட்டிக்கப்பட்டால் குடும்பத்துக்கு 2 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என்று அமமுக பொதுச் செயலாளர் தினகரன் கோரிக்கை வைத்துள்ளார்.
இதுகுறித்து இன்று (மே 1) அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “கொரோனா பெருந்தொற்று நோயைக் கட்டுப்படுத்துவதற்கான இரண்டு கட்ட ஊரடங்கிற்கு, பெரும்பாலான மக்கள் அளித்த ஒத்துழைப்பினால் தமிழகத்தின் பல மாவட்டங்களில் இந்நோய் ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் வந்திருக்கிறது. ஆனால், சென்னை போன்ற பெருநகரங்களில் அரசு வெளியிட்ட சில அவசரகோல உத்தரவுகளின் காரணமாக மக்களிடம் ஏற்பட்ட பீதி கலந்த பதற்றத்தினால் ஊரடங்கு என்பது அர்த்தமற்றதாக மாறியது.
ஊரடங்கு மே 3 ஆம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில் ‘அதனை முழுமையாக முடிவுக்கு கொண்டுவருவது நல்லதல்ல; படிப்படியாகவே தளர்த்த வேண்டும்’ என்று மருத்துவ வல்லுனர் குழு அரசுக்கு அறிக்கை அளித்திருக்கிறது. சென்னையில் நாள்தோறும் பாதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை மிக வேகமாக அதிகரிப்பதைப் பார்த்தால் அது சரி என்றே படுகிறது. அப்படி ஊரடங்கை நீட்டிக்கும் முடிவை அரசு எடுக்கும்போது, மக்களுக்கு குழப்பம் ஏற்படாதபடி முன்கூட்டியே தெளிவான நடைமுறைகளோடு அறிவித்திட வேண்டும்” என்று கோரியுள்ள தினகரன்,
“ஏழை எளிய அடித்தட்டு மக்களை தொடர் ஊரடங்கு மொத்தமாக புரட்டிப்போட்டிருக்கிறது. அவர்களுக்கு மூன்று வேளை உணவு கிடைப்பது பெரும் சவாலாகவே இருக்கிறது. எனவே ஊரடங்கு நீட்டிக்கப்படும் பட்சத்தில், ஏழை எளிய, நடுத்தர மக்கள் உள்ளிட்ட தமிழக மக்கள் அனைவருக்கும் மூன்று வேளை உணவு கிடைப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும். ரேஷன் கார்டுதாரர்கள் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு முதற்கட்டமாக அறிவிக்கப்பட்ட ரூ.1000/, அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு இரண்டாம்கட்டமாக அறிவிக்கப்பட்ட ரூ.1000/ ஆகியவை முழுமையாக சென்றடைவதை தமிழக அரசு துரிதப்படுத்தவேண்டும. தற்போது ஊரடங்கை நீட்டித்தால் கூடுதல் உதவியாக குறைந்த பட்சம் மேலும் ரூ.2000 ஒவ்வொரு குடும்பத்திற்கும் உடனடியாக வழங்கப்படவேண்டும். இதற்காக மத்திய அரசிடம் இருந்து தமிழக அரசு கூடுதல் நிதியைக் கேட்டுப் பெறவேண்டும. பிரதமருக்கு கடிதம் எழுதியதோடு கடமை முடிந்தது என முதலமைச்சர் பழனிசாமி விட்டுவிடக்கூடாது” என்று கேட்டிருக்கிறார்.
தற்போது, நோய் தொற்று கண்டறியப்படுபவர்களில் 90 சதவிகிதத்திற்கும் அதிகமானோருக்கு கொரோனா அறிகுறிகளே இல்லாமல் நோய்த் தொற்று ஏற்படுவதாக கூறப்படும் நிலையில், சோதனைகளை அதிகப்படுத்துவது மட்டுமே கொரோனாவைக் கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கும் என்பதை தமிழக அரசு உணரவேண்டும் என்றும் தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
**-வேந்தன்**�,