�அதிர்ச்சியளிக்கும் வேளாண் பல்கலையின் தேர்வு முடிவு : சீமான் வலியுறுத்தல்!

politics

வேளாண் பல்கலைக்கழகத் தேர்வு முடிவுகளில் ஏற்பட்டுள்ள குழப்பங்களுக்கு தமிழ்நாடு அரசு உடனடியாக தீர்வு கண்டு மாணவர்களின் நலன் காக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.

சமீபத்தில் வெளியான தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் தேர்வு முடிவுகள் சர்ச்சையை ஏற்படுத்தியது. தேர்வு எழுதியவர்களில் 90% பேர் தோல்வி அடைந்துள்ளனர் என்பதை ஏற்க மறுத்து போராட்டம் நடத்திய மாணவர்கள், அனைத்து மாணவர்களுக்கும் எழுதிய தேர்வின் அடிப்படையில் மதிப்பெண் வழங்கி தேர்ச்சி அடையும் வகையில் வழிவகை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் இன்று(டிசம்பர் 9) நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில், 2018, 2019, 2020 ஆகிய கல்வி ஆண்டுகளில் பயின்ற மாணவர்களுக்கு கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற இணையவழி மறுதேர்வில், முறைகேட்டில் ஈடுபட்டதாகக் கூறி பெரும்பாலான மாணவர்களைத் தோல்வி அடைந்ததாக அறிவித்துள்ள பல்கலைக்கழகத்தின் செயல் கொடுமையானது.

ஏற்கனவே மூன்று ஆண்டுகள் தாமதமாகத் தேர்வுகள் நடைபெற்றுள்ள நிலையில், தற்போது தேர்வுத்தாள்களைத் திருத்தாமலே மீண்டும் மாணவர்கள் தோல்வி என அறிவித்திருப்பது மாணவர்களின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கியுள்ளது.

எவ்வித முறையான வழிகாட்டு நெறிமுறைகளும் இல்லாமல் இணைய வழியில் பாடங்களை நடத்திவிட்டு, தேர்வுகளை நடத்துவதற்கு மட்டும் ஏராளமான கட்டுப்பாடுகளை விதிப்பதும் அவற்றில் ஏதேனும் சிறு பிழை நேர்ந்தாலே கடும் தண்டனைக்கு உள்ளாக்குவதும் எவ்வகையிலும் ஏற்புடையதல்ல.

மேலும் பல்கலைக்கழகத்தால் இணையவழி தேர்வுக்காக உருவாக்கப்பட்ட தேர்வுச்செயலியில் பல்வேறு தொழில்நுட்ப சிக்கல்கள் ஏற்படுவதாக மாணவர்கள் பலமுறை புகாரளித்தும் அதுகுறித்து எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல், தேர்வுகளின்போது ஏற்பட்ட தொழில்நுட்ப சிக்கல்களுக்கு மாணவர்களைப் பலிகடாவாக்குவதும் பல்கலைக்கழகத்தின் அலட்சியப்போக்கையே வெளிக்காட்டுகிறது.

உண்மையிலேயே தேர்வில் பெருமளவு முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாகப் பல்கலைக்கழகம் கருதினால் நடைபெற்ற தேர்வினை முழுமையாக ரத்து செய்துவிட்டு மீண்டும் புதிதாக தேர்வு நடத்தியிருக்கலாம். அதைவிடுத்துத் தேர்வு எழுதிய 90 விழுக்காடு மாணவர்களைச் செய்முறைத் தேர்வுகள் உட்பட அனைத்து தேர்வுகளிலும் தேர்ச்சி பெறாதவர்கள் என அறிவிப்பது மாணவர்களின் எதிர்காலத்தைச் சீரழிக்கும் கொடுஞ்செயலாகும்.

ஆகவே வேளாண் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள மறுதேர்வு முடிவுகளில் ஏற்பட்டுள்ள குழப்பங்களுக்கு தமிழ்நாடு அரசு உடனடியாக தீர்வு கண்டு மாணவர் நலன் காக்க வேண்டும் என தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

**-வினிதா**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *