விசாரணைக்குச் சென்ற போலீஸுக்கு அரிவாள் வெட்டு!

politics

விருதுநகரில் விசாரணைக்குச் சென்ற போலீசை வெட்டிய நபர் கைது செய்யப்பட்டார்.

விருதுநகர் மாவட்டம், வச்சக்காரப்பட்டி காவல்நிலைய காவலராக முருகன் என்பவர் பணியாற்றி வருகிறார். இவரது பேட்ச் எண் 1947. இவர் நேற்று இரவு பணியிலிருந்த போது காவல்நிலையத்துக்கு வந்த மன்னார்க்கோட்டை கிராமத்தை சேர்ந்த பால் பாண்டி புகார் ஒன்று கொடுத்தார்.

அதில், தனது அண்ணன் மகன் குமார் குடித்துவிட்டு தகராறு செய்கிறார். அவரது தொந்தரவு தாங்கமுடியவில்லை. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். அந்த புகாரின் அடிப்படையில், ஏட்டு முருகன் இரவு 10.30 மணிக்கு மன்னார்க்கோட்டை கிராமத்துக்குச் சென்றபோது, பால்பாண்டி குடும்பத்தினருக்கும், குமார் குடும்பத்தினருக்கும் இடையே சண்டை நடந்துள்ளது.

அப்போது குடிபோதையிலிருந்த குமாரை அழைத்து ‘அமைதியா போங்கள்’ என்று சொன்ன ஏட்டு முருகன், பால் பாண்டியிடம், ‘இரவு நேரமாக உள்ளது. வீட்டுக்குள் போங்கள். காலையிலேயே ஸ்டேஷனுக்கு வந்துவிடுங்கள். குமாரையும் வரச் சொல்கிறேன். ஸ்டேஷனில் பேசி முடிவெடுக்கலாம்” என்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.

அப்போது, சித்தப்பாவுக்கு ஆதரவாகப் பேசுகிறாயா என ஆத்திரமடைந்த குமார், வீட்டிலிருந்த அரிவாளை எடுத்து வந்து காவலரை தாக்கியதில், முருகனின் இடது கையில் கடுமையான வெட்டுக்காயம் ஏற்பட்டுள்ளது. மணிக்கட்டு அருகே இரண்டாக உடைந்து தொங்குமளவிற்குப் பிளந்துள்ளது. இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற போலீசார் முருகனை மீட்டு, மதுரையில் உள்ள வேலம்மாள் மருத்துவமனையில் அனுமதித்தனர். அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இதுகுறித்து சம்பவம் குறித்து வச்சக்காரப்பட்டி எஸ்.ஐ.கணேஷ்குமாரிடம் நாம் கேட்டபோது, நேற்று இரவு வந்த புகாரின் அடிப்படையில் ஏட்டு விசாரிக்கச் சென்றார். இரவு நேரமாக இருப்பதால் இருதரப்பையும் சமாதானப்படுத்த முயன்றபோது, குமார் காவலரின் கையை வெட்டிவிட்டார். உடனடியாக குமாரைக் கைது செய்துவிட்டோம். ரிமாண்ட் செய்யப் போகிறோம். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் காவலருக்குப் பாதுகாப்புடன் சிகிச்சை அளிக்கப்படுகிறது என்றார்.

மேலும் இதுதொடர்பாக நாம் காவல்துறை வட்டாரத்தில் விசாரித்த போது, “இந்த சம்பவத்தில் காவலரை வெட்டிய குமாரும், வெட்டுவாங்கிய போலீசாரும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள். அதனால் எவ்வித பிரச்சினையும் ஏற்பட வில்லை. அதுவே இருவரில் ஒருவர் வேறு சமூகத்தைச் சேர்ந்தவராக இருந்திருந்தால் கூட வன்முறையே ஏற்பட்டிருக்கும்.

அதுமட்டுமல்ல, இந்நேரம் பொதுமக்களுக்கு யாருக்காவது இப்படி நடந்திருந்தால் மனித உரிமை ஆணையம் தொடங்கி பல்வேறு தரப்பினரும் கேள்வி கேட்டிருப்பார்கள். ஆனால், போலீஸ் அதிகாரிக்கு நடந்ததால் யாரும் ஏதும் கேட்கமாட்டார்கள்” என்று வேதனை தெரிவித்தனர்.

**-பிரியா, வணங்காமுடி**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *