தமிழகத்தில் கடந்த சில தினங்களாகப் பெய்த கனமழையின் காரணமாக பெரும்பாலான பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன.
இந்நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, கன்னியாகுமரி மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஆய்வு மேற்கொண்ட முதல்வர் ஸ்டாலின் இன்று (டிசம்பர் 2) தூத்துக்குடி சென்று பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்தார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழையால் பிரையன்ட் நகர், அம்பேத்கர் நகர், ரஹ்மத் நகர், எட்டயபுரம் மதுரை சாலை ஆகிய பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளன.
இதனால் அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஒரு வாரமாக மழை நீருக்கு நடுவே தீவுகளில் வசிப்பது போல் மக்கள் வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்கின்றனர்.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்வதற்காக முதல்வர் ஸ்டாலின் பிற்பகல் 12.20 மணிக்கு சென்னையிலிருந்து விமானம் மூலம் தூத்துக்குடி புறப்பட்டார்.
1.45 மணிக்குத் தூத்துக்குடி விமான நிலையம் வந்த அவர் அங்கு மதிய உணவை முடித்துவிட்டு, 2.50 மணி அளவில் பிரையன்ட் நகர் பகுதியில் ஆய்வை மேற்கொண்டார்.
அப்போது முதல்வரிடம் நேரடியாகக் கோரிக்கை மனுக்களைக் கொடுத்த அப்பகுதி மக்கள், மழைநீர் தேங்காத வகையில் நிரந்தரமான தீர்வு வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தனர். அடுத்த ஆண்டு மழை பெய்யும் போது இதுபோன்று மழைநீர் தேங்காத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர். அப்போது உரிய நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்துவிட்டு காரில் ஏறிபுறப்படும்போது, ஒரு பெண், ஐயா எல்லோரும் மனு கொடுத்திருக்கிறோம். மனுவைப் பாருங்கள் ” என்றார்.
இதையடுத்து, அம்பேத்கர் நகர் மற்றும் ரஹ்மத் நகர் ஆகிய பகுதிகளில் கன மழையால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை ஆய்வு மேற்கொண்டார் முதல்வர் ஸ்டாலின். மேலும் அப்பகுதி மக்களிடம் தேவைகள் குறித்துக் கேட்டறிந்தார்.
இதையடுத்து எட்டயபுரம் மதுரை சாலையில் உள்ள ஏவிஎம் மஹாலில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுத் தங்கவைக்கப்பட்டுள்ள சுமார் 3000 பேருக்கு 42.60 லட்சம் ரூபாய் மதிப்பிலான அரிசி, மளிகை பொருட்கள், போர்வை, பாய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கினார்.
இந்த ஆய்வைத் தொடர்ந்து மாநகராட்சி அலுவலகத்தில் மழை வெள்ள நிவாரண பணிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது, மழைக் காலங்களில் ஏற்படும் நோய்களைக் கட்டுப்படுத்த சிறப்பு மருத்துவ முகாம்களை நடத்த வேண்டும். தேங்கியுள்ள மழை நீரை அகற்ற ஒருங்கிணைந்த திட்டத்தைத் தயாரிக்க வேண்டும். நீர்வழி பாதைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். பழுதடைந்த மின்கம்பங்களைச் சீர் செய்து மக்களுக்குத் தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும். தரைப் பாலங்களை மறு சீரமைத்து மேம்பாலங்கள் அமைத்திடவும் நிவாரண முகாம்களில் தங்கியுள்ள மக்களுக்குத் தேவையான உணவு, குழந்தைகளுக்குத் தேவையான பால் மற்றும் இதர அத்தியாவசிய பொருட்களைத் தடையில்லாமல் வழங்கிடவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று உத்தரவிட்டார்.
இந்த ஆய்வு மற்றும் ஆலோசனையைத் தொடர்ந்து மாலை 5 மணியளவில் மதுரை புறப்பட்டுச் சென்றார்.
**-பிரியா**
�,”