அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்த அமலாக்கத்துறையின் நடவடிக்கை சட்டப்படி செல்லாது என அறிவிக்கக்கோரி ஆம் ஆத்மி கட்சி சார்பில் தாக்கல் செய்துள்ள மனு இன்று (மார்ச் 22) உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மக்களவைத் தேர்தல் நெருங்கியுள்ள நிலையில் நாட்டின் தலைநகர் டெல்லியில் நடந்து வரும் அடுத்தடுத்த நடவடிக்கைகள் அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் புதிய மதுபான கொள்கை வழக்கில் பிஆர்எஸ் தலைவர் கே.கவிதா அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக ஆஜராகும்படி டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை தொடர்ந்து சம்மன் அனுப்பி வந்தது. ஆனால் எதற்கும் அவர் பதில் அளிக்காத நிலையில், நேற்று மாலை அமலாக்கத்துறை வாரண்டுடன் அவரது இல்லத்துக்கு சென்றது.
கெஜ்ரிவாலிடம் அங்கு விசாரணை நடத்திய அதிகாரிகள், இரவு 9 மணியளவில் அவரை கைது செய்து, டெல்லியில் உள்ள ED தலைமை அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றனர். அத்துடன் கெஜ்ரிவால் மற்றும் அவரது மனைவியின் தொலைபேசிகளும், அவரது வீட்டில் இரண்டு டேப்லெட்டுகள் மற்றும் மடிக்கணினியும் பறிமுதல் செய்யப்பட்டன.
டெல்லியில் RML மருத்துவமனையில் இருந்து மருத்துவப் பரிசோதனைக்குப் பிறகு அவரை ED லாக்-அப்பில் இரவு முழுவதும் வைத்ததாக அமலாக்கத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ளதற்கு ராகுல்காந்தி, முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட இந்தியா கூட்டணி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இதற்கிடையே அரவிந்த் கெஜ்ரிவால் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட உள்ள நிலையில், அமலாக்கத்துறையின் கைதை கண்டித்து நாடு முழுவதும் பாஜக அலுவலகங்களுக்கு வெளியே போராட்டம் நடத்த ஆம் ஆத்மி கட்சி அழைப்பு விடுத்துள்ளது.
மேலும் அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கை சட்டப்படி செல்லாது என அறிவிக்கக்கோரி ஆம் ஆத்மி கட்சி சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வர உள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
100 சார்ஜிங் மையங்கள்: அதானி உடன் கைகோக்கும் ஆனந்த் மஹிந்திரா!
அரசு பேருந்துகளில் பொருட்கள் கொண்டு செல்ல கட்டுப்பாடு!