விருத்தாசலம் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில், திமுக நிர்வாகி மீது 13 மணி நேரம் எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்படாமல் காப்பாற்ற முயற்சி நடந்ததாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் துறை வாரியான மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இன்றைய தினம் (ஏப்ரல் 12), கடலூர் மாவட்டம் விருத்தாசலம் 30ஆவது வார்டு திமுக நகரமன்ற உறுப்பினர் பக்கிரிசாமி பாலியல் புகாரில் சிக்கியது குறித்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்தார்.
இதற்கு பதிலளித்து பேசிய முதல்வர் ஸ்டாலின், “இவ்விவகாரத்தில் விசாரணை மேற்கொண்டு பாராபட்சமின்றி கடுமையான நடவடிக்கை எடுத்திட உத்தரவிட்டுள்ளேன்” என்று தெரிவித்தார்.
இந்நிலையில் சிறுமி பாலியல் வன்கொடுமை விவகாரம் குறித்து எடப்பாடி பழனிசாமி பேசியபோது, சட்டப்பேரவையின் நேரடி ஒளிபரப்பு நிறுத்தப்பட்டதாக அதிமுக குற்றம்சாட்டி வெளிநடப்பு செய்தது.
இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, “கடலூர் மாவட்டம் விருத்தாசலம் நகரத்தில் தனியார் நர்சரி பிரைமரி பள்ளியில் படித்து வந்த 5 வயது பெண் குழந்தைக்கு வயிற்று வலி ஏற்பட்டுள்ளது.
இதனால் குழந்தையின் பெற்றோர்கள் அங்குள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அப்போது மருத்துவர்கள் குழந்தை பாலியல் கொடுமைக்கு ஆளாகியிருப்பதாக தெரிவித்துள்ளனர். தொடர்ந்து குழந்தை அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளது. அங்கிருந்து காவல்துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து குழந்தையிடம் சில புகைப்படங்களை காட்டி போலீசார் விசாரித்திருக்கின்றனர். அப்போது பள்ளியின் உரிமையாளரான விருத்தாசலம் நகராட்சி 30ஆவது வார்டு திமுக நகரமன்ற உறுப்பினரின் புகைப்படைத்தை குழந்தை கைகாட்டியுள்ளது.
இவரை காவல்துறையினர் நேற்று இரவு விசாரணைக்கு அழைத்து சென்றுள்ளனர். குழந்தையின் பெற்றோரும் புகார் தெரிவித்துள்ளனர்.
இந்த புகார் மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்படவில்லை. ஆனால் முதல்வர் என்ன சொல்கிறார் என்றால், இந்த தகவல் கிடைத்ததும் பள்ளியின் உரிமையாளரை கட்சியில் இருந்து நீக்கியிருப்பதாகவும், அவர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் கூறினார்.
ஆனால், நேற்று இரவு பெற்றோர் புகார் அளித்தும் இன்று காலை 9 மணி வரை எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்படவில்லை. இந்த ஆட்சி வந்தது முதல் பாலியல் குற்றங்கள் அதிகரித்துள்ளது. இந்த பிஞ்சு குழந்தை பலமுறை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. ஆனால் அவர் மீது நேற்று இரவு முதல் 13 மணி நேரம் எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்படவில்லை, அவர் கைது செய்யப்படவில்லை. காரணம் அவர் ஆளுங்கட்சி நிர்வாகி.
இவ்வளவு பெரிய கொடுங்குற்றத்தை செய்தவர் குறித்து அரசுக்கு தகவல் கிடைக்கவில்லை என்றால், இந்த அரசாங்கம் எப்படி செயல்படுகிறது என எண்ணி பார்க்க வேண்டும். இந்த விவகாரம் குறித்து சட்டப்பேரவையில் பேச நான் எழுந்தவுடன் அதை ஒளிப்பரப்புவதை நிறுத்திவிட்டனர். அதற்கு முன்னதாக நடந்த நிகழ்வும், பின்னர் நடந்த நிகழ்வும் ஒளிபரப்பப்பட்டது.
பொள்ளாச்சி விவகாரத்தை அரசியல் ஆக்கினார்கள். அதிமுக மீது புகார் கொடுத்தார்கள். ஆனால் இவர்கள் நேற்று இரவு முதல் என்ன செய்தார்கள்.
கடலூர் மாவட்டத்தில் கொந்தளிப்பு நிலை ஏற்பட்டுள்ளது. ஆளும் கட்சியை சேர்ந்தவரை காப்பாற்ற 13 மணி நேரம் முயன்றார்கள். ஆனால் அவர்களால் முடியவில்லை.
இந்த விவகாரத்தை நாங்கள் சட்டப்பேரவையில் எழுப்புவோம் என்று தெரிந்த பிறகுதான் வழக்குப்பதிவு செய்திருக்கிறார்கள்” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “சட்டப்பேரவையில் ஆளும் கட்சியினரின் சிக்னலுக்கு பிறகுதான் சபாநாயகர் பேசுவார். இது வருத்தமளிக்கிறது. சட்டப்பேரவை ஜனநாயக முறைப்படி நடக்கவில்லை. சபை நடுநிலையாக செயல்படவில்லை.
எதிர்க்கட்சித் துணை தலைவர் இருக்கையை பொறுத்தவரை நாங்கள் தேர்ந்தெடுத்த உதயக்குமாரை இதுவரை அங்கீகரிக்கவில்லை. நீதிமன்றத்திலும் வழக்கு முடிந்துவிட்டது. தெளிவான தீர்ப்பு வந்துவிட்டது. ஆனால் இன்னும் இருக்கை ஒதுக்கித் தரவில்லை.
காங்கிரஸில் மட்டும் துணைதலைவர் இருக்கிறார். அதிமுகவுக்கு மட்டும் இல்லை என்று எப்படி சொல்லமுடியும். தொடர்ந்து யார் ஆட்சி மாறினாலும், எதிர்க்கட்சி துணை தலைவர் இருக்கை கொடுப்பது மரபு.
இன்றைய அரசு சர்வாதிகார அரசாக செயல்பட்டு கொண்டிருக்கிறது” என்று கண்டனம் தெரிவித்தார்.
பிரியா
“இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது” : ஓபிஎஸ் வழக்கில் நீதிமன்றம்!
அதிமுக பொதுச்செயலாளர் – 10 நாட்களில் முடிவு : தேர்தல் ஆணையம்!
