ரிப்பன் மாளிகை அருகே முதல்வர் செல்லும் பாதையில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சார்பில் கட்டப்பட்டுள்ள கே.பி.பார்க் குடியிருப்பில் வீடு ஒதுக்க வலியுறுத்தி, ராஜா முத்தையா சாலை பகுதியில் ரிப்பன் மாளிகை அருகே பொதுமக்கள் கூடாரம் அமைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறும் நிகழ்ச்சிக்காக முதல்வர் இன்று அந்த வழியாக செல்லவுள்ள நிலையில் மக்களின் போராட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார், போராட்டக்காரர்கள் கூடாரங்களை அகற்ற முயன்றனர். இதனால் போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அங்கிருந்த பெண் ஒருவர் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றித் தீக்குளிக்க முயன்றது பரபரப்பை ஏற்படுத்தியது.
அவரிடமிருந்து மண்ணெண்ணெய் கேனை பிடுங்கிய போலீசார் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் ரிப்பன் மாளிகை வளாகத்துக்குள் போராட்டக்காரர்களை அழைத்து சென்றனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறுகையில், “எந்த கட்சி ஆட்சி வந்தாலும் வீடு தருகிறேன் என்று சொல்லி ஏமாற்றுகிறார்கள். குடும்பத்தோடு ரோட்டில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
கே.பி.பார்க்கில் வீடு தருவதாகக் கூறி ஓட்டு கேட்டார்கள். வீடு தருவதாக நம்பிக்கை கொடுத்துவிட்டு ஏமாற்றுகிறார்கள். முதல்வர் செல்வதற்காக மேயர்கிட்ட பேசலாம் என்று கூறி போராட்டத்தில் ஈடுபட்ட எங்களை உள்ளே அழைத்து வந்து அடைத்து வைத்துள்ளனர்.
உள்ளே எங்களுக்கு எதாவது நடந்தால் போலீசார் தான் காரணம். ரோட்டில் வாழ்கிற எங்களுக்கு எதற்கு ஸ்மார்ட் கார்டு, ஆதார் கார்டு . அவற்றையெல்லாம் திரும்ப ஒப்படைத்துவிடுகிறோம்” என்று ஆவேசமாக பேசினர்.
தற்போது எங்களை உள்ளே அடைத்து வைத்தாலும், நாளை முதல்வர் வீடு முன்பு போராட்டத்தை தொடருவோம் என்றும் கூறினர்.
பிரியா
நாட்டை காட்ட மகத்தான் ஒரு நடைபயணம்