வைஃபை ஆன் செய்ததும் புழல் சிறையில் இருக்கும் செந்தில்பாலாஜிக்கு சட்டத்தை மீறி சலுகைகள் காட்டப்படுவதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி வீடியோ இன்பாக்சில் வந்து விழுந்தது.
அதைப் பார்த்துவிட்டு வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்யத் தொடங்கியது.
“கடந்த ஜூன் 13 ஆம் தேதி அமலாக்கத்துறை சோதனைக்குப் பிறகு ஜூன் 14 ஆம் தேதி கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில்பாலாஜி இதய பிரச்சினை காரணமாக ஓமந்தூரார் மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்டார். பின் உயர் நீதிமன்ற உத்தரவுப்படி காவேரி மருத்துவமனையில் அட்மிட் ஆனார்.
அங்கே இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டு ஓய்வில் இருந்த செந்தில்பாலாஜி முழுதாக ஒரு மாதம் கடந்த நிலையில்… கடந்த ஜூலை 17 ஆம் தேதி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதையடுத்து உடனடியாக புழல் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
புழல் சிறையில் செந்தில்பாலாஜிக்கு ஏசி உள்ளிட்ட வசதிகள் செய்துகொடுக்கப்படுவதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பத்திரிகை செய்திகளின் அடிப்படையில் புகார்களை அடுக்கினார்.
திமுக ஆட்சி அமைந்த புதிதில், தான் கைது செய்யப்பட்டபோது தனக்கு உரிய வசதிகள் கூட செய்துகொடுக்கப்படவில்லை என்பதைக் குறிப்பிட்ட ஜெயக்குமார், இப்போது செந்தில்பாலாஜி சிறையில் சொகுசாக இருக்கிறார் என்றும், இதை அமலாக்கத்துறை கண்காணிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார். புழல் சிறையில் செந்தில்பாலாஜியின் ஸ்டேட்டஸ்தான் என்ன?
புழல் சிறையில் மூன்று பகுதிகள் உள்ளன. தண்டனை கைதிகள் உள்ள பகுதி, விசாரணை கைதிகள் உள்ள பகுதி, பெண் கைதிகள் உள்ள பகுதி ஆகியவைதான் அவை. மேலும் சிறைக்குள் இரண்டு மருத்துவமனைகள் உள்ளன.
உயர் பாதுகாப்பு பிரிவில் உள்ளவர்களுக்கு தனி மருத்துவமனை. தண்டனை கைதிகள் மற்றும் விசாரணை கைதிகளுக்கு ஒரு மருத்துவமனை என உள்ளது. அமைச்சர் செந்தில்பாலாஜி ஹை செக்யூரிட்டி கைதிகள் மருத்துவமனையில்தான் இருந்து வருகிறார்.
இந்த மருத்துவமனையில் நான்கு அறைகள் மட்டுமே உள்ளது. வெஸ்டன் டாய்லெட் வசதி இருக்கிறது. மரம் செடி கொடிகள் அமைந்துள்ள இயற்கையான பகுதியில்தான் இந்த அறை அமைந்துள்ளது. செந்தில்பாலாஜி இதய அறுவை சிகிச்சை செய்துகொண்டவர் என்பதால் அவர் என்னென்ன உணவுகள் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் சில அறிவுறுத்தல்களை செய்துள்ளனர்.
அதன்படி வெஜ் சூப், மட்டன் சூப், கீரை, சுண்டல், சாதம், சப்பாத்தி போன்றவற்றை செந்தில்பாலாஜிக்கு சமைத்துக் கொடுக்க சிறைக் கைதி ஒருவரை நியமித்துள்ளார்கள். அவர்தான் செந்தில்பாலாஜிக்கு சமைத்துக் கொடுக்கிறார். காலை மாலை இருவேளையும் வாக்கிங் செய்து வருகிறார்’ என்கின்றன புழல் சிறை வட்டாரங்கள்.
அதேநேரம் சிறையில் செந்தில்பாலாஜிக்கு விதிகளை மீறி சொகுசு வசதிகளை செய்து தந்திட வேண்டாம் என்று வாய்மொழியாக ஆட்சி மேலிடத்தில் இருந்து அறிவுறுத்தல்கள் சென்றுள்ளன. சிறையில் விதிகளை மீறி செந்தில்பாலாஜிக்கு சொகுசு வசதிகள் செய்யப்படுகிறதா என்று மத்திய உளவு அமைப்புகளும் கண்காணித்துக் கொண்டிருக்கின்றன.
இதுகுறித்த அப்டேட்டுகள் அமலாக்கத்துறைக்கும் பாஸ் செய்யப்படுகின்றன. ஒருவேளை செந்தில்பாலாஜிக்கு சிறைக்குள் சொகுசு வசதிகள் செய்து தரப்பட்டால்… அந்த காரணம் உள்ளிட்ட காரணங்களின் அடிப்படையில் செந்தில்பாலாஜி வழக்கை தமிழ்நாட்டில் இருந்து வேறு மாநிலத்துக்கு குறிப்பாக டெல்லிக்கு மாற்றிடுமாறு நீதிமன்றத்தில் கோரிக்கை வைக்க திட்டம் தீட்டியுள்ளது அமலாக்கத்துறை. அதற்கு வாய்ப்பு கொடுக்காமல் சிறையில் சற்று அடக்கி வாசிக்குமாறு சிறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்கிறார்கள் புழல் வட்டாரங்களில்” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.
பிரதமர் மோடி ஏன் மணிப்பூர் செல்லவில்லை? : ஜோதிமணி ஆவேசம்!
பாளையங்கால்வாய் பாதுகாக்க… நெல்லையப்பரிடம் மனு!