தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ் பேரணி: உச்சநீதிமன்றத்தில் நடந்தது என்ன?

அரசியல்

தமிழ்நாட்டில் ஆர்எஸ்எஸ் பேரணிக்கு இன்று (ஏப்ரல் 11) அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ள உச்சநீதிமன்றம், தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சுதந்திரத்தின் 75வது ஆண்டு, பி.ஆர்.அம்பேத்கரின் பிறந்தநாள் நூற்றாண்டு மற்றும் விஜயதசமியை கொண்டாடும் வகையில், தமிழ்நாட்டின் 51 இடங்களில் கடந்த ஆண்டு அக்டோபர் 2 ஆம் தேதி அணிவகுப்பு ஊர்வலம் நடத்த ஆர்.எஸ்.எஸ். திட்டமிட்டது.

இதற்காக தமிழ்நாடு காவல்துறையிடம் சென்னை உள்பட அனைத்து இடங்களிலும் உரிய அனுமதி கோரப்பட்டது. ஆனால் காவல்துறை அனுமதி வழங்கவில்லை.

3 இடங்களில் மட்டுமே அனுமதி

இதனை அடுத்து, ஆர்.எஸ்.எஸ். உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அதனை விசாரித்த நீதிமன்றம் தமிழ்நாடு முழுவதும் அணிவகுப்பு ஊர்வலம் நடத்த ஆர்.எஸ்.எஸ்-க்கு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்ககோரி டிஜிபி-க்கு உத்தரவிட்டது.

அப்போது, பிஎஃப்ஐ எனப்படும் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு மத்திய அரசு விதித்த தடை மற்றும் மாநிலம் முழுவதும் நிலவிய சூழலை கருத்தில் கொண்டு 3 இடங்களில் மட்டுமே ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு போலீசார் அனுமதி அளித்தனர்.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு

இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆர்எஸ்எஸ் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஒன்றை தொடர்ந்தது.

அந்த வழக்கை 2022 நவம்பர் 4ம் தேதி சென்னை உயர்நீதிமன்ற தனிநீதிபதி ஜி.கே. இளந்திரையன் விசாரித்தார். அப்போது கன்னியாகுமரி, கோவை உள்ளிட்ட சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் வாய்ப்புகள் உள்ள 6 இடங்களை தவிர்த்து 44 இடங்களில் நவம்பர் 6 ஆம் தேதி அணிவகுப்பு ஊர்வலம் நடத்த அனுமதியளித்தார்.

அதேவேளையில், “ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பை பொது இடங்களில் நடத்தக்கூடாது. லத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் எதையும் எடுத்துச் செல்லக்கூடாது. விளையாட்டு மைதானங்கள் மற்றும் கூட்ட அரங்குகளில் மட்டுமே அணிவகுப்பை நடத்த வேண்டும்.

மத்திய அரசால் தடை செய்யப்பட்ட அமைப்புக்கு எதிராக பேசக்கூடாது. இந்திய இறையாண்மைக்கு தேச ஒற்றுமைக்கு எதிராக செயல்படக்கூடாது என்பது உள்பட 11 நிபந்தனைகளையும் விதித்தார்.

தனி நீதிபதியின் இந்த நிபந்தனைகளை ஏற்க மறுத்து, 44 இடங்களில் அனுமதிக்கப்பட்டிருந்த ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பை ரத்து செய்வதாக 2022 நவம்பர் 5ம் தேதி அந்த அமைப்பின் தென் மண்டல தலைவர் வன்னியராஜன் தெரிவித்தார்.

மேலும் தனிநீதிபதியின் உத்தரவை எதிர்த்து ஆர்.எஸ்.எஸ். சார்பில் 45 மேல்முறையீட்டு மனுக்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மனுக்கள் மீது தொடர்ந்து விசாரணை நடைபெற்று வந்த நிலையில், கடந்த பிப்ரவரி 10 ஆம் தேதி உயர்நீதிமன்ற நீதிபதிகள் மகாதேவன் மற்றும் முகமது சபீக் அமர்வு ஆர்எஸ்எஸ் பேரணிக்கு தனி நீதிபதி விதித்த நிபந்தனைகளை ரத்து செய்தது.

மேலும் கடுமையான ஒழுங்குடன் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு பேரணிகளை நடத்த காவல்துறை அனுமதிக்க வேண்டும் என்றும், யார் மனதையும் புண்படுத்தும் வகையில் முழக்கமிடாமல் பேரணி நடத்த வேண்டும் எனவும் ஆர்எஸ்எஸ் அமைப்பினருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

உச்சநீதிமன்றம் உத்தரவு

இந்த உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்த மனுவை விசாரிக்க டெல்லி உச்ச நீதிமன்றம் மார்ச் 1ஆம் தேதி ஒப்புக்கொண்டது. அதன்படி மார்ச் 3, 17 மற்றும் 27 ஆகிய தேதிகளில் விசாரணை நடத்தப்பட்டு தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்து வந்த நீதிபதிகள் வி.ராமசுப்ரமணியன் மற்றும் பங்கஜ் மித்தல் அடங்கிய அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியது.

அப்போது நடைபெற்ற இறுதி விசாரணையில், ஆர்.எஸ்.எஸ். தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் மகேஷ் ஜெத்மலானி, ”தடை செய்யப்பட்ட அமைப்பு தொடர்பாக அச்சத்தை எழுப்பி, அமைதியான முறையில் ஊர்வலம் நடத்துவதை மாநில அரசால் தடுக்க முடியாது. தங்களது அணிவகுப்பை, தமிழகத்தில் பயங்கரவாத அமைப்பு தாக்கினால், அதை மாநில அரசு பாதுகாக்க வேண்டும்.” என்று வாதிட்டது.

தமிழ்நாடு அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி, “மாநிலம் முழுவதும் அணிவகுப்பு ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டங்களை நடத்துவதை நாங்கள் முற்றிலும் எதிர்க்கவில்லை. ஆனால் ஒவ்வொரு தெருவிலும், போலீசார் பாதுகாப்பு வழங்க முடியாது. சட்டம்-ஒழுங்கு பிரச்னையில் மாநில அரசு கண்களை மூடிக்கொண்டு இருக்க முடியாது.” என்று உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

ஜெத்மலானி மேலும் வாதத்தில், ”தமிழ்நாட்டில் ஒரு பயங்கரவாத அமைப்பைக் கட்டுப்படுத்த முடியவில்லை, அதனால்தான் அவர்கள் அணிவகுப்பைத் தடை செய்ய விரும்புகிறார்கள். மேலும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தடைக்குப் பிறகு அங்கு எந்த அசாம்பாவித சம்பவமும் நடைபெறவில்லை. விடுதலை சிறுத்தைகள் மற்றும் ஆளும் கட்சியான திமுக ஆகியவை அணிவகுப்புகள் நடத்தும்போது ஆர்எஸ்எஸ் அணிவகுப்பை அரசாங்கம் தடை செய்ய முடியாது.” என்று வலியுறுத்தினார்.

அதற்கு முகுல் ரோத்தகி, ” அணிவகுப்புக்கு முழு தடை விதிக்கவில்லை. நினைத்த இடத்தில் நினைத்த நேரத்தில் பேரணி நடத்த சட்டத்தில் இடமில்லை. ஒரே நாளில் 50 இடங்களில் ஆர்.எஸ்.எஸ் பேரணி நடத்த அனுமதி தர முடியாது. பாதுகாப்பு காரணங்களுக்காக 5 இடங்களில் பேரணி நடத்துவதற்கு அனுமதி வழங்கமுடியும்.” என்று வாதிட்டார்.

இருதரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதிகள் அமர்வு, ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி அளிக்கப்படுவதாக கூறி தமிழ்நாடு அரசின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்த உத்தரவிட்டது.

கிறிஸ்டோபர் ஜெமா

தோழமைக் கட்சிகளுடன் உறவு: சோனியா  அறிவிப்பு!

தமிழர்களே இல்லாத சிஎஸ்கே! தடை கேட்கும் பாமக!

+1
0
+1
1
+1
0
+1
1
+1
3
+1
1
+1
1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *