Tamil Nadu's debt in crisis

நெருக்கடி நிலையில் தமிழ்நாட்டின் கடன்! பட்ஜெட்டில் நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன?

அரசியல் சிறப்புக் கட்டுரை

தமிழ்நாடு பட்ஜெட் 2024-25 நேற்று நிதி அமைச்சர் தங்கம் தென்னரசுவால் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. பட்ஜெட் குறித்து தொடங்கும்போது மாநிலத்தின் வரவு, செலவு பற்றிய தரவுகளை பார்க்க வேண்டியிருக்கிறது.

தமிழ்நாட்டின் நிதி வரவைப் பொறுத்தவரை ஒவ்வொரு ஒரு ரூபாயிலும் எத்தனை பைசா எங்கிருந்து வருகிறது என்பதை முதலில் பார்க்கலாம்.

• மாநில அரசின் சொந்த வரி வசூல்: தமிழ்நாட்டின் நிதி வரவில் மிக முக்கியமான பங்கு வகிப்பது மாநில அரசால் வசூலிக்கப்படுகிற சொந்த வரி வருவாய் ஆகும். ஒரு ரூபாயில் 43.4 பைசா மாநிலத்தின் சொந்த வரி வசூலில் இருந்தே கிடைக்கிறது.

• பொதுக் கடன்: ஒரு ரூபாயில் 32.4 பைசா என்பது கடனாக பெறப்படுகிறது.

மத்திய அரசின் வரிப்பங்கீடு: ஒன்றிய அரசு மாநிலங்களுக்கு பிரித்துக் கொடுக்கும் பணத்தில் தமிழ்நாட்டிற்கு கொடுக்கும் பணம். அதன் மூலமாக ஒரு ரூபாயில் 11.1 பைசா கிடைக்கிறது.

மாநிலத்தின் வரி அல்லாத வருவாய்: மாநிலத்திற்கு வரி அல்லாத பிற வழிகளில் கிடைக்கிற வருவாய். பொதுத்துறைகள் நிறுவனங்களின் வழியாக அல்லது பிற மூலதனங்களின் வழியாக கிடைக்கிற வருவாய். இதன் மூலமாக ஒரு ரூபாயில் 6.8 பைசா கிடைக்கிறது.

மத்திய அரசின் உதவி மானியங்கள்: மத்திய அரசின் உதவி மானியங்கள் வழியாக ஒரு ரூபாயில் 5.2 பைசா கிடைக்கிறது.

கடன்களை வசூலித்தல் மற்றும் மூலதன ரசீதுகள்: இவற்றின் மூலம் ஒரு ரூபாயில் 1.1 பைசா கிடைக்கிறது.

மாநிலத்தின் வருவாய் விவரங்கள்

தமிழ்நாடு அரசின் மொத்த வருவாய் என்பது 2,99,010 கோடியாக இருக்கிறது.
• மாநிலத்தின் சொந்த வரி வருவாய் – 1,95,173 கோடி
• மாநில அரசின் வரி அல்லாத வருவாய் – 30,728 கோடி
• மத்திய அரசிடமிருந்து பெறப்படும் உதவி மானியங்கள் – 23,354 கோடி
• மத்திய அரசின் வரிப்பங்கீடு – 49,755 கோடி

மாநிலத்தின் சொந்த வரி வருவாய் விவரங்கள்
• வணிக வரி – 1,43,381 கோடி
• முத்திரைத்தாள் மற்றும் பதிவுக் கட்டணங்கள் – 23,370 கோடி
• மாநில ஆயத்தீர்வைகள் – 12,247 கோடி
• வாகனங்கள் மீதான வரிகள் – 11,560 கோடி

மேலே வருவாய் விடயத்தில் பார்த்ததுபோல் ஒவ்வொரு ரூபாயும் எப்படி செலவு செய்யப்படுகிறது என்பதையும் பார்ப்போம்.

மானியங்கள் மற்றும் உதவித்தொகை: மானியங்கள் மற்றும் உதவித்தொகைகளுக்காக ஒரு ரூபாயில் 32.4 பைசா செலவிடப்படுகிறது

ஊதியங்கள்: பல்வேறு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள், அலுவலர்கள் மற்றும் ஊழியர்களுக்கு ஊதியங்கள் வழங்குவதற்காக ஒரு ரூபாயில் 18.7 பைசா செலவிடப்படுகிறது.

மூலதன செலவினங்கள்: அரசின் மூலதன செலவினங்களாக ஒரு ரூபாயில் 10.5 பைசா செலவிடப்படுகிறது.

வட்டி கட்டுதல்: பொதுக்கடனுக்காக வட்டியைக் கட்டுவதற்காக ஒரு பைசாவில் 14.1 பைசா செலவிடப்படுகிறது.

கடனை திருப்பிக் கட்டுதல்: கடனை திருப்பிக் கட்டுவதற்காக ஒரு ரூபாயில் 9.1 பைசா செலவிடப்படுகிறது.

ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியப் பயன்கள்: ஓய்வூதியங்கள் குறித்த செலவினங்களுக்காக ஒரு ரூபாயில் 8.3 பைசா செலவிடப்படுகிறது.

கடன் வழங்குதல்: கடன் வழங்குதலுக்காக ஒரு ரூபாயில் 3.6 பைசா செலவிடப்படுகிறது.

அரசின் ஊதியம் அல்லாத செயல்பாடு மற்றும் பராமரிப்பு: இத்தகைய பணிகளுக்காக ஒரு ரூபாயில் 3.3 பைசா செலவிடப்படுகிறது.

அதிகரித்த நிதிப் பற்றாக்குறை (Fiscal Deficit):

தமிழ்நாடு அரசின் மொத்த வருவாய் என்பது 2,99,010 கோடியாக இருக்கிறது. அதேசமயம் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள மொத்த செலவு என்பது 4,12,504 கோடியாக இருக்கிறது. எனவே 1,13,495 கோடி ரூபாய் என்பது மொத்த நிதிப் பற்றாக்குறையாக (மொத்த செலவு – மொத்த வருவாய்) இருக்கிறது. கடந்த 2023-24 பட்ஜெட்டில் இந்த நிதிப் பற்றாக்குறை என்பது 92,075 கோடியாக இருந்தது. இந்த முறை 21,420 கோடி ரூபாய் நிதிப்பற்றாக்குறை அதிகரித்திருக்கிறது.

அதிகரித்த வருவாய் பற்றாக்குறை (Revenue Deficit):

அரசாங்கத்தை நடத்துதல், அமைச்சகங்கள் இயங்குதல், மக்களுக்கான சமூக நலத் திட்டங்கள், மானியங்கள் மற்றும் கடன்களை அடைத்தல் போன்ற புதிய சொத்துக்களை உருவாக்காத செலவினங்கள் வருவாய் செலவினங்கள் (Revenue Expenditure) எனப்படும். மொத்த வருவாயைக் காட்டிலும், வருவாய் செலவினங்கள் அதிகமானதாக இருந்தால் அது வருவாய் பற்றாக்குறை என்று சொல்லப்படுகிறது. தமிழ்நாட்டின் இந்த நிதி ஆண்டின் மொத்த வருவாய் செலவினம் என்பது 3,48,289 கோடியாக இருக்கிறது.

வருவாய் பற்றாக்குறை = வருவாய் செலவினம் – மொத்த வருவாய்

தமிழ்நாட்டின் இந்த ஆண்டின் வருவாய் பற்றாக்குறை என்பது (3,48,289 – 2,99,010) 49,279 கோடியாக இருக்கிறது.

பொதுவான வருவாய் செலவினங்கள் பின்வருமாறு:

• ஊதிய செலவினங்கள் – 84,931 கோடி
• ஊதியம் அல்லாத செலவினங்கள் மற்றும் பராமரிப்புகள் – 15,013 கோடி
• ஓய்வூதியம் மற்றும் ஏனைய ஓய்வுக்கால பயன்கள் – 37,663 கோடி
• மானியங்கள் மற்றும் உதவி மானியங்கள் வழங்குவதற்கான தொகை (மகளிர் உரிமைத் தொகை உட்பட) – 1,46,908 கோடி
• பொதுக் கடனுக்கான வட்டித் தொகை – 63,722 கோடி

வருவாய் பற்றாக்குறையைப் பொறுத்தவரை மிக முக்கியமான காரணமாக தமிழ்நாடு அரசால் சுட்டிக் காட்டப்படுவது என்பது மின்சார வாரியத்தின் இழப்புக்கான நிதியை தமிழ்நாடு அரசின் வருவாயிலிருந்து கட்ட வேண்டும் என்று மத்திய அரசு கட்டாயப்படுத்துவதான். தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் தொடர்ந்து கடனிலும் நட்டத்திலும் இயங்கி வருவதால், அது மாநில அரசின் நிறுவனமாக இருப்பதால் அதன் இழப்பை தமிழ்நாடு அரசுதான் ஏற்க வேண்டும் என்று மத்திய அரசு கூறியுள்ளது.

இதன்காரணமாக 14,442 கோடியை வரும் நிதி ஆண்டில் தமிழ்நாடு அரசு கூடுதலாக கட்ட வேண்டியுள்ளது. இதனை மின்சார வாரியமே கட்டும் என்ற வாதத்தினை மத்திய அரசு ஏற்கவில்லை என்றும், ஒருவேளை தமிழ்நாடு பட்ஜெட்டில் இதற்கான நிதியை ஒதுக்காவிட்டால், தமிழ்நாடு கடன்பெறும் வரம்பிலிருந்து மேற்சொன்ன 14,442 கோடி ரூபாய் கழிக்கப்பட்டுவிடும் என்பதாலும் தமிழ்நாடு அரசு வருவாய் பற்றாக்குறை அதிகமிருந்தாலும் இந்த நிதியை ஒதுக்க வேண்டியுள்ளது என்பதை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு சுட்டிக்காட்டி பேசினார்.

மொத்த வருவாய் பற்றாக்குறையான 49,279 கோடியிலிருந்து இந்த 14,442 கோடியை கழித்து விட்டால் வரும் 34,837 கோடி தான் தமிழ்நாட்டின் உண்மையான வருவாய் பற்றாக்குறை என்கிறார் தங்கம் தென்னரசு.

வருவாய் பற்றாக்குறை என்பது தமிழ்நாட்டின் மொத்த உற்பத்தி மதிப்பில் (ஜி.டி.பி) 3.5% சதவீதத்திற்கு மேல் இருக்கக் கூடாது. ஆனால் இந்த முறை வருவாய் பற்றாக்குறையின் சதவீதமானது ஜி.டி.பி-ல் 3.44% சதவீதம் என்பதாகத்தான் இருக்கிறது. நாம் பாதுகாப்பான இடத்தில்தான் இருக்கிறோம் என்கிறார் நிதி அமைச்சர்.

Tamil Nadu's debt in crisis

தமிழ்நாட்டின் கடன்

• நிதிப் பற்றாக்குறையை சமாளிப்பதற்காக இந்த ஆண்டு புதிதாக 1,55,584 கோடி ரூபாய் கடன் பெறுவதற்கு தமிழ்நாடு அரசால் திட்டமிடப்பட்டுள்ளது.

• அதேபோல் ஏற்கனவே உள்ள கடன்களில் 49,638 கோடியை திருப்பிக் கட்டுவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.

• புதிதாக வாங்கப்பட உள்ள கடன்களையும் சேர்த்து 2025 மார்ச் மாதத்தில் தமிழ்நாட்டின் மொத்த கடன் 8,33,361 கோடி ஆக இருக்குமென்று மதிப்பிடப்பட்டுள்ளது.

ஒரு மாநிலத்தின் மொத்த கடன் அளவானது அம்மாநிலத்தின் ஜி.டி.பி-ல் 25% சதவீதத்தை தாண்டாமல் இருப்பதே பாதுகாப்பானது என்று பரிந்துரைக்கிறது நிதி ஆணையம். ஆனால் தமிழ்நாட்டின் கடன் மதிப்பானது ஜி.டி.பி-ல் 26.4% சதவீதமாக இருக்கிறது. ஆகவே தமிழ்நாட்டின் மொத்த கடன் அளவு என்பது பாதுகாப்பற்ற ஒன்றாக பார்க்கப்படுகிறது. ஆனால் நிதி அமைச்சர் 2026-27ம் நிதி ஆண்டின் மதிப்பீட்டின் படி ஜி.டி.பி-ல் 25% என்ற அளவில் தான் நமது கடன் அளவு இருக்கும் என்கிறார்.

தமிழ்நாடு அரசின் பட்ஜெட் குறித்து மாநில பொருளாதார ஆலோசனைக் குழு உறுப்பினர் எஸ்.நாராயண்:

டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழில் பட்ஜெட் குறித்து கருத்து தெரிவித்துள்ள எஸ்.நாராயண் தமிழ்நாட்டின் நிதி நிலைமை நிலையற்ற தன்மையானதாக இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

நகர்ப்புற வீடற்றவர்களுக்கு 1 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டித் தரும் திட்டம் பாராட்டுக்குரியது. மேலும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு காலை உணவுத் திட்டத்தின் விரிவாக்கம், திருநங்கையர்களுக்கான தனி விடுதி மற்றும் அவர்களுக்கான கல்வி உதவி, கல்லூரி செல்லும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான உதவித் தொகை, மதுரை மற்றும் கோவையில் ஒலிம்பிக் அகாடமிகளை உருவாக்குவது, 3000 புதிய பேருந்துகளை வாங்குவது போன்ற திட்டங்கள் வரவேற்கக் கூடியவை என்று தெரிவித்துள்ளார்.

கீழ்கண்ட நான்கு விடயங்கள் பட்ஜெட்டில் முக்கியமானவை என்று குறிப்பிடுகிறார்.

• சமூகநலத் திட்டங்கள் மற்றும் சமூக நீதிக்கான திட்டங்களை தொடர்வது,
• கட்டுமானத் திட்டங்கள், ஊரக சாலைகள், மேம்பட்ட விவசாயம், குடிநீர் வழங்குதல், குப்பை மேலாண்மை போன்றவற்றில் கவனம் செலுத்துவது.
• தமிழ் மற்றும் தமிழ்ப் பண்பாட்டு விவகாரங்களில் கவனம் செலுத்துவது.
• மிகவும் நகரமயமாக்கப்பட்ட மாநிலத்தின் தன்மையைப் புரிந்துகொண்டு டைடல் பார்க் மற்றும் தொழிற் பூங்காக்கள் அமைப்பதில் தென் மாவட்டங்களை கவனத்தில் கொள்வது.

இத்தனை விவகாரங்கள் குறிப்பிடத்தக்கதாக இருந்தாலும் மாநிலத்தின் நிதி நிலைமை என்பது நல்ல நிலையில் இல்லை. வருவாய் பற்றாக்குறை என்பது 37,540 கோடியிலிருந்து வரும் நிதி ஆண்டில் 44,907 கோடியாக அதிகரிக்கிறது. நிதிப் பற்றாக்குறையின் அளவானது மாநிலத்தின் ஜி.டி.பி-யில் 3.45% சதவீதமாக இருக்கிறது. நிதிப் பற்றாக்குறையின் அதிகபட்ச அளவென்பது ஜி.டி.பி-யில் 3.5% சதவீதத்திற்கு உள்ளாக இருக்க வேண்டும். அந்த வரம்பினைத் தாண்டுவதற்கு மிகவும் நெருக்கமான அளவிலேயே தமிழ்நாட்டின் பற்றாக்குறை அளவு இருக்கிறது.

அதேபோல் மாநிலத்தின் சொந்த வரி வருவாய் 20% மேல் அதிகரிக்கும் என்று கடந்த ஆண்டு எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 13.26% மட்டுமே அதிகரித்தது. இந்த விவரங்களை வைத்துப் பார்க்கும்போது மாநிலத்தின் நிதி நிலைமை கடுமையான நெருக்கடியில் உள்ளது. அதுவும் பதிவுக் கட்டணம், சொத்து வரி, மின் கட்டணம் மற்றும் மதுபானப் பொருட்களின் விலை இவற்றை உயர்த்திய பின்பும் வருவாயை அதிகப்படுத்த முடியவில்லை.

மாநிலத்தின் நிதி நிலைமை நிலையற்ற இடத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. மத்திய அரசிடமிருந்து அதிகமான வரிப் பங்கினைக் கோருவதைத் தவிர, இப்பிரச்சினையை சரிசெய்வதற்கான விடயங்கள் எதுவும் பெரிதாக இந்த பட்ஜெட்டில் இடம்பெறவில்லை என்று தெரிவித்துள்ளார்.

ஆனந்த் சீனிவாசன் கருத்து

Tamil Nadu's debt in crisis

தமிழ்நாட்டின் பட்ஜெட் குறித்து பிபிசி தமிழ் இணையதளத்திற்கு கருத்து தெரிவித்துள்ள பொருளாதார நிபுணர் ஆனந்த் சீனிவாசன், பல முக்கியமான அம்சங்களை சுட்டிக்காட்டிய பிறகு சில பலவீனமான அம்சங்களையும் குறிப்பிடுகிறார். கடன்தொகையைப் பொறுத்தவரை, மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 25 சதவீதத்திற்குள் இருப்பது நல்லது என்ற நிலையில், அந்தக் கடன் தற்போது 26 சதவீதத்தை நெருங்கியிருப்பதை பலவீனமான ஒன்று என்று குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்நாடு அரசின் இந்த பட்ஜெட்டில் உள்ள திட்டங்கள் குறித்து பல கோணங்களில் உரையாடல்கள் நடைபெற்று வரும் சூழலில், தமிழ்நாட்டின் கடன் அளவு குறித்த உரையாடலும் அதன் மீதான நடவடிக்கையும் முக்கியம் என்பதையும் பொருளாதார நிபுணர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.

விவேகானந்தன்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ரசிகர்கள் ‘கொண்டாடிய’ நடிகைகளின்… உண்மையான ‘பெயர்’ இதுதான்!

சண்டிகர் மேயர் தேர்தல் – பாஜக வெற்றி செல்லாது : உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

வருஷம் 16 : தோனிக்காக ‘சண்டை’ செய்த மும்பை… வீடியோ உள்ளே!

ஐந்து மாநிலங்களில் போட்டி: டெல்லியில் திருமாவளவன் பேட்டி!

+1
0
+1
0
+1
0
+1
4
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *