தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் விசிக புகார் அளித்துள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடிகர் மன்சூர் அலிகான் நடிகை த்ரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார். இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்திருந்தனர். அந்த வகையில் மன்சூர் அலிகானுக்கு கண்டனம் தெரிவிப்பதாக குஷ்பு வெளியிட்ட ஒரு எக்ஸ் பதிவு மேலும் சர்ச்சையை கிளப்பியது.
அந்த பதிவில் ”சேரி மொழி பேசத் தெரியாது” என்று குறிப்பிட்டிருந்ததற்கு கண்டனங்களும் எழுந்தன. தொடர்ந்து சேரி என்றால் பிரஞ்சு மொழியில் அன்பு என்று அர்த்தம் என ஒரு விளக்கத்தையும் அளித்திருந்தார் குஷ்பு.
ஆனால் சேரி என்ற வார்த்தையை பயன்படுத்தியதற்கு குஷ்பு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று காயத்ரி ரகுராம், பா.ரஞ்சித் உள்ளிட்டோர் வலியுறுத்தி வந்தனர்.
இந்நிலையில் குஷ்பு மீது எஸ்.சி/எஸ்.டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று விசிக துறைமுகம் தொகுதி அமைப்பாளர் கார்த்திக் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
அந்த புகார் மனுவில், “தேசிய மகளிர் ஆணைய உறுப்பினரும் நடிகையுமான குஷ்பு சுந்தர் எக்ஸ் தளத்தில் ‘சேரி மொழியில் பேசத் தெரியாது’ என்று சொல்லி பதிவிட்டது, என்னையும் நான் சார்ந்திருக்கின்ற பிற்படுத்தப்பட்ட வகுப்பு மக்களையும், 2000 ஆண்டு காலமாக எமது மக்கள் குடியிருந்து வரும் பகுதியில் பேசுகின்ற மொழியையும் அவமானப்படுத்தியுள்ளது.
இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கும் மனவேதனைக்கும் நான் உள்ளாகியிருக்கிறேன். மேலும் மொழியால் சேரியில் பேசுகின்ற மொழி வன்மம் கொண்ட மொழி என்றும் தீண்டத்தகாத மொழி என்றும் பொதுவெளியில் என்னை இழிவுபடுத்தி எக்ஸ் சமூக வலைதளத்தில் பதிவிட்ட குஷ்பு மீது SC/ST வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மோனிஷா
2027 உலகக்கோப்பை வாங்கி தருவாரா?…வைரலாகும் விராட் ஜாதகம்!
பாலியல் தொல்லை… சீனு ராமசாமி மறுப்பு: மனிஷா யாதவ் பதிலடி!