சர்ச்சையில் சிக்கிய சூரியமூர்த்திக்கு பதிலாக மாதேஷ்வரன் நாமக்கல் தொகுதி கொமதேக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
இதுதொடர்பாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் இன்று (மார்ச் 22) வெளியிட்டுள்ள அறிக்கையில், “திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியில் நாமக்கல் பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் மாற்றப்பட்டுள்ளார்.
புதிய வேட்பாளராக கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் நாமக்கல் தெற்கு மாவட்ட செயலாளர் வி.எஸ்.மாதேஷ்வரன் அறிவிக்கப்படுகிறார்” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காரணம் என்ன?
நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி நாமக்கல் தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறது. இதனையடுத்து அக்கட்சி சார்பில் மாநில இளைஞரணி செயலாளராக இருக்கும் எஸ்.சூரியமூர்த்தி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
இதற்கிடையே சாதி வெறியுடன் சூரிய மூர்த்தி பேசும் பழைய வீடியோ ஒன்று வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனையடுத்து வேட்பாளராக அறிவிக்கப்பட்ட சூரியமூர்த்திக்கு எதிராக பலரும் கருத்து தெரிவித்து வந்தனர்.
குறிப்பாக திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பிலும் நாமக்கல் வேட்பாளரை மாற்றும்படி கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரனுக்கு வலியுறுத்தப்பட்டது. அதன்படி தற்போது கொமதேக வேட்பாளர் அதிகாரப்பூர்வமாக இன்று மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
பியூட்டி டிப்ஸ்: புருவங்கள் அடர்த்தியாக வளர… ஈஸி வழிகள் இதோ!
ஹெல்த் டிப்ஸ்: கோடையிலும் ஜலதோஷம்… தீர்வு என்ன?