ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை ஒட்டி அதிமுகவில் நிலவிய குழப்பங்கள் உச்ச நீதிமன்றம் மற்றும் தேர்தல் ஆணையத்தால் ஒரு வழியாக முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு எடப்பாடி பழனிச்சாமியின் வேட்பாளர் தென்னரசுக்கு இரட்டை இலை சின்னம் கிடைத்துள்ளது.
அதே நேரம் கடந்த இரண்டு வார காலமாக நடந்த இந்த திருவிளையாடல்களில் தற்போது கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறார் பன்னீர்செல்வம்.
பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர்களில் சிலரோடும் தமிழ்நாட்டில் இருக்கும் ஆடிட்டர் குருமூர்த்தி உள்ளிட்ட புள்ளிகளோடும் நெருக்கமான தொடர்பிலிருந்த பன்னீர்செல்வம்… தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் அதிரடியான செயல்பாடுகளால் தான் ஓரங்கட்டப்பட்டு விட்டதாகத் தனது ஆதரவாளர்கள் இடையே புலம்பி இருக்கிறார்.
மேலும் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து பாஜகவை எதிர்த்து வந்த நிலையில், தானே பாஜகவை வெளிப்படையாக ஆதரித்ததாகவும்… ஆனால் தற்போது தமிழக பாஜக தனது விசுவாசத்தை மதிக்காமல் எடப்பாடி பழனிசாமியோடு கைகோர்த்து இருப்பதாகவும் வேதனையோடு குறிப்பிட்டுள்ளார்.
இந்த வேதனை அடிப்படையில் தான் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் போட்டியிலிருந்து விலகிக் கொள்கிறோம் என்ற அறிவிப்பைக் கூடத் தான் நேரடியாகப் பத்திரிகையாளர் சந்திப்பு வைத்து வெளியிடாமல் தனது ஆதரவாளர்களான வைத்தியலிங்கம், பண்ருட்டி ராமச்சந்திரன் ஆகியோர் மூலம் வெளியிட வைத்தார் பன்னீர்.
சரி… இப்போது இரட்டை இலை சின்னம் அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன் மூலமாக எடப்பாடி கைகளுக்குச் சென்று சேர்ந்து விட்டது. ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் அதிமுகவின் நட்சத்திரப் பேச்சாளர்கள் பட்டியலில் கூட எடப்பாடி அணியினர் பெயர்களை மட்டுமே தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது.
அடுத்த கட்டமாகப் பன்னீரின் திட்டம் என்ன!
அவரது ஆதரவாளர்களிடம் விசாரித்தோம்.
“தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை டெல்லி சென்று பாஜக தேசிய தலைவர் நட்டாவை சந்தித்த பிறகுதான் இந்த விவகாரங்களில் தொடர் மாற்றங்கள் நடந்தன. ஒன்றிணைந்த அதிமுகவை பாஜக விரும்புவதாகவே அதன் தேசிய தலைவர்கள் ஓ.பன்னீர்செல்வத்திடம் தெரிவித்து வந்தனர்.
2024 மக்களவைத் தேர்தலில் தென்னிந்தியாவிலிருந்து பாஜகவுக்குக் கணிசமான எம்.பி.க்கள் தேவை. தற்போது ஆட்சியில் இருக்கும் திமுக, தனது முக்கியமான தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாததால் மக்கள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. இந்த அதிருப்தியை எடப்பாடி, பன்னீர்செல்வம், தினகரன், சசிகலா என்று ஒருங்கிணைந்த அதிமுகவோடு கூட்டுச் சேர்ந்து தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு சாதகமாக மாற்றுவது தான் பாஜக தேசிய தலைவர்களின் திட்டம்.
ஆனால் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இதில் ஒரு மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி விட்டார். அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி மட்டுமே செல்வாக்கு பெற்ற தலைவர் என்பதை அவர் டெல்லியிடம் சொல்லி பல்வேறு காய் நகர்த்தல்கள் மூலம் இரட்டை இலை சின்னத்தை எடப்பாடி பழனிசாமிக்கு பெற்றுத் தந்திருக்கிறார்.
இதில் அண்ணாமலைக்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் இடையேயான சமுதாய உறவும் முக்கியமான காரணியாகப் பார்க்கப்படுகிறது. அதிமுகவிலிருந்து முக்குலத்துச் சமுதாயத்தைச் சேர்ந்த சசிகலா, தினகரன், ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கடந்த ஐந்து வருடங்களில் அடுத்தடுத்து ஓரம் கட்டப்பட்டு இருக்கிறார்கள்.
ஒரு காலத்தில் அதிமுகவின் முதுகெலும்பாக இருந்த முக்குலத்தோர் சமுதாயத்தை தற்போது அதிமுகவிலிருந்து அப்புறப்படுத்தி அதன் முக்கியமான தலைவர்களை பாஜகவில் இணைக்கவும் ஒரு திட்டம் அண்ணாமலையிடம் இருக்கிறது. இதற்காகவே எடப்பாடி பழனிசாமி உடன் சேர்ந்து இந்த ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் களத்தில் பன்னீர்செல்வத்தை அப்புறப்படுத்தியிருக்கிறார்.
அண்ணாமலையின் எடப்பாடி பாசத்துக்கு வெளிப்படையான உதாரணமாக அவரது எழுத்துக்களே சாட்சியாக இருக்கின்றன. இரட்டை இலை சின்னம் தொடர்பான சமீபத்திய உச்சநீதிமன்ற ஆணையில் எடப்பாடி பழனிசாமியை இடைக்கால பொதுச் செயலாளர் என்று உச்சநீதிமன்றம் ஒப்புக்கொள்ளவில்லை.
தேர்தல் ஆணையமும் எடப்பாடி பழனிசாமியை இடைக்கால பொதுச் செயலாளர் என்ற தீர்மானத்தை இன்னும் ஏற்கவில்லை என்று உச்ச நீதிமன்றத்திலேயே தெரிவித்துள்ளது.
அதேநேரம் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டவர் என்று எடப்பாடி தரப்பினரால் சொல்லப்படும் பன்னீர் செல்வத்தையும் அவரது ஆதரவாளர்களையும் வைத்து, பொதுக்குழுவைக் கூட்டி வேட்பாளர் யார் என்பது பற்றிக் கலந்து முடிவெடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்தது.
அதாவது உச்ச நீதிமன்றம், தேர்தல் ஆணையம் ஆகிய இரண்டு முக்கியமான அமைப்புகளின் கூற்றுப்படி அதிமுகவில் பன்னீர்செல்வம் ஒருங்கிணைப்பாளராக இருக்கிறார். ஆனால் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச் செயலாளராக இல்லை.
இந்த நிலையில் பிப்ரவரி 7ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் அவரது எடப்பாடி பாசமும் பன்னீர் செல்வத்தின் மீதான பாராமுகமும் வெளிப்படுகின்றன.
அதாவது உச்சநீதிமன்றமும் தேர்தல் ஆணையம் அங்கீகரிக்காத நிலையில் இடைக்கால பொதுச் செயலாளர் அண்ணன் எடப்பாடி பழனிசாமி என்று குறிப்பிட்டுள்ள அண்ணாமலை… பன்னீர்செல்வத்தைக் கட்சிப் பொறுப்புகள் எதுவும் குறிப்பிடாமல் அண்ணன் பன்னீர்செல்வம் என்று மட்டுமே குறிப்பிட்டிருக்கிறார்.
இதிலிருந்தே அண்ணாமலைக்கும் எடப்பாடிக்குமான உறவு தெரிகிறது.
பாஜகவை அளவுக்கு மீறி ஆதரித்தும் தன்னை கை கழுவி விட்டதே என்ற வேதனை பன்னீர்செல்வத்திடம் இருக்கிறது. எனக்கு ஏற்பட்ட அவமானத்தைப் பற்றி நான் மிகத் தீவிரமாக பரிசீலிப்பேன் என்று எங்களிடம் கூறியுள்ளார் பன்னீர்செல்வம்.
’இனியும் இந்த அமைதியான அரசியல் பாணியை விட்டுவிட்டு அதிரடியான அரசியலை கையில் எடுக்க வேண்டும், எந்த சாதியை வைத்து நம்மைப் புறக்கணிக்கிறார்களோ அந்த சாதியை அந்த சமுதாயத்தை வைத்து நாம் அடுத்த கட்ட அரசியலைச் செய்ய வேண்டும்’ என்று பன்னீர் செல்வத்திடம் அவரை சுற்றியுள்ளவர்கள் வற்புறுத்தி உள்ளார்கள்.
இதற்குப் பதில் சொல்லும் போது தான், ’எனக்கு ஏற்பட்ட அவமானத்தை தீவிரமாகப் பரிசீலிப்பேன்’ என்று பன்னீர் கூறியுள்ளார்” என்கிறார்கள்.
இதற்கிடையில் பன்னீர்செல்வத்தின் தீவிர ஆதரவாளரும் நமது எம்ஜிஆர், நமது அம்மா ஆகிய அதிமுக நாளிதழ்களின் முன்னாள் ஆசிரியருமான மருது அழகுராஜ், (பிப்ரவரி 9) சிவகங்கையில் ஒரு ஆலோசனைக் கூட்டத்தைக் கூட்டி உள்ளார்.
அதிமுகவில் முக்குலத்தோர் சமுதாயத்தினர் பாஜகவின் திட்டப்படி எடப்பாடியால் புறக்கணிக்கப்பட்டு வருகிறார்கள் என்றும் அதற்கு எதிராக எவ்வாறு செயல்படுவது என்றும் அந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட இருப்பதாக நம்மிடம் பேசிய மருது அழகுராஜ் தெரிவித்துள்ளார்.
“காங்கிரஸ் கட்சி முக்குலத்தோர் சமுதாயத்தைப் புறக்கணித்தது. அதற்குப் பிறகு அந்த கட்சியால் தமிழ்நாட்டில் இன்று வரை ஆட்சியைப் பிடிக்க முடியவில்லை. அதுபோல் இப்போது எடப்பாடி- அண்ணாமலை கூட்டணியால் அதிமுகவிலும் முக்குலத்து சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் புறக்கணிப்புக்கும் அவமானத்துக்கும் ஆளாக்கப்படுகிறார்கள்.
இதற்கு எங்கள் தலைவர் பன்னீர்செல்வத்தின் பரதன் பாணி அரசியல் ஒத்து வராது. பரதன் பாணி அரசியலை ஓரங்கட்டி விட்டு சிங்கப் பாதையில் தீவிரமான ஆர்ப்பாட்ட அரசியலை முன்னெடுக்கப் போகிறோம். அது குறித்துத் தான் நாளை சிவகங்கையில் கூடிப் பேச இருக்கிறோம்.
விரைவில் களத்தில் எங்களது செயல்பாடுகள் பற்றி உங்களுக்குத் தெரியும். பழைய பன்னீர்செல்வம் இல்லை, புதிய பன்னீர்செல்வத்தை நீங்கள் பார்ப்பீர்கள்” என்று கூறுகிறார் மருது அழகுராஜ்.
அதிமுக என்ற கட்சியில் சாதி யுத்தம் தொடங்கி விட்டதை ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வெளிச்சம் போட்டு காட்டி விட்டது.
வேந்தன்
அதானி குழுமம் மீதான குற்றச்சாட்டுகள்: ரிசர்வ் வங்கி, செபி என்ன செய்ய முடியும்?
தமிழ்நாட்டு வேலை தமிழருக்கே: அஞ்சல் துறைக்கு எச்சரிக்கை விடுத்த வேல்முருகன்