வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். Chennai flood relief fund
மிக்ஜாம் புயலால் பெய்த கனமழையால் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் வெள்ளம் ஏற்பட்டது. இதனால் மக்களிடன் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
தற்போது வெள்ளம் வடிந்து இயல்பு வாழ்க்கைக்கு திரும்பும் மக்கள் மழைநீரில் தங்கள் உடைமைகளை இழந்ததோடு, ஒரு வாரமாக வேலை இல்லாமல் வருமானத்தையும் இழந்துள்ளனர்.
இதனிடையே வெள்ள நிவாரண நிதியாக தமிழகத்திற்கு ரூ.5,060 கோடி வழங்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு கடிதம் எழுதியிருந்தார் முதல்வர் ஸ்டாலின். ஆனால் மத்திய அரசு ரூ.450 கோடி நிவாரண நிதியாக வழங்கப்படும் என்று அறிவித்தது.
இதனையடுத்து முதல்வர் ஸ்டாலின் தனது ஒரு மாத ஊதியத்தை முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு கொடுத்ததோடு, நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும் ஒரு மாத சம்பளத்தை நிதியாக வழங்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இந்நிலையில் மழையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.6,000 வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. இதற்கு முன்னதாக மழையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மழையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.12,000 நிவாரண தொகையாக வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து எடப்பாடி பழனிசாமி இன்று (டிசம்பர் 10) வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“மிக்ஜாம் புயல் மழையால் சென்னை மாநகரம், புறநகர்ப் பகுதி, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் பொதுமக்கள், வணிகர்கள், சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் என்று அனைத்துத் தரப்பு மக்களும் மிகப் பெரிய பாதிப்புக்கு உள்ளானார்கள்.
திமுக அரசு முன்திட்டமிடாமல், முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல், ஆட்சிப் பொறுப்பேற்ற 31 மாதங்களில், முறையாக மழை நீர் வடிகால் பணிகளை செய்யாததன் காரணமாக, கடந்த வாரம் பெய்த மழையால் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.
பொதுமக்கள் கடந்த ஒருவார காலமாக, தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து, உடைமைகளை இழந்து, வாகனங்களை இழந்து, தொழிலை இழந்து, இந்த அவல ஆட்சியாளர்கள் மீது தங்களது எதிர்ப்பைத் தெரிவித்து வந்த நிலையில், நிவாரணத் தொகை என்று ஒரு சொற்ப தொகையை அறிவித்திருப்பது, பாதிக்கப்பட்ட மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 6,000/- ரூபாய் நிவாரணமாக வழங்கப்படும் என்று திமுக அரசு அறிவித்துள்ளது. மழை வெள்ளம் சாக்கடையுடன் கலந்து, பொதுமக்கள் அவர்களுடைய வீடுகளை விட்டும், குடியிருப்பு பகுதிகளை விட்டும் வெளியேற முடியாத நிலையில், கடந்த ஒருவார காலமாக வேலைக்குச் செல்ல முடியவில்லை. இன்னும் சகஜ நிலைக்கு திரும்ப ஒருவார காலம் ஆகும்.
ஏழை, எளிய, தினசரி வேலைக்குச் செல்லக்கூடியவர்கள், நடுத்தர மக்கள் இரண்டு வார காலம் வீட்டிலேயே முடங்கி இருக்கும் நிலையில், வேலை செய்ய முடியாமல் தங்களது 15 நாள் வருமானத்தை இழந்துள்ளதுடன், தங்களது உடைமைகள் அனைத்தையும் இழந்துள்ளனர்.
எனவே, தற்போது அறிவிக்கப்பட்டுள்ள நிவாரணத் தொகையான 6,000/- ரூபாயை உயர்த்தி 12,000/- ரூபாயாக வழங்குவதுடன், எந்த நிபந்தனையும் விதிக்காமல், பாதிக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும் வழங்க வேண்டும் என்று அரசை வலியுறுத்துகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மோனிஷா
சென்னை திரும்பிய ஆர்.கே.சுரேஷ்… விமான நிலையத்திலேயே சுற்றி வளைத்த அதிகாரிகள்!
’தளபதி 68’: 10 நிமிட காட்சிக்கு இத்தனை கோடி ரூபாய் செலவா?
Chennai flood relief fund