சென்னை மற்றும் மைசூரு இடையே இயக்கப்பட இருக்கும் வந்தே பாரத் ரயிலில் முக்கியமான 10 சிறப்பம்சங்கள் அடங்கியுள்ளன.
நாடு முழுவதும் முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
2019ஆம் ஆண்டு இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட ‘வந்தே பாரத்‘ எக்ஸ்பிரஸ் ரயிலின் முதல் சேவை டெல்லி – வாரணாசி வழித்தடத்திலும், 2வது சேவை டெல்லி – காஷ்மீரின் வைஷ்ணவி தேவி கோயில் வழித்தடத்திலும், 3வது சேவை மும்பை – காந்தி நகர் வழித்தடத்திலும், 4வது சேவை இமாச்சலப் பிரதேசம் உனாவின் அம்ப் அண்டவ்ரா – புதுடெல்லி வழித்தடத்திலும் இயக்கப்பட்டு வருகிறது. இதன் 5வது சேவை, சென்னை மற்றும் மைசூரு இடையே இயக்கப்பட இருக்கிறது.
இந்த ரயிலை பிரதமர் மோடி வரும் நவம்பர் 11 ஆம் தேதி தொடங்கி வைக்க இருக்கிறார். இந்த நிலையில் சென்னை – மைசூரு இடையிலான புதிய வந்தே பாரத் ரயிலின் சோதனை ஓட்டம், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நேற்று (நவம்பர் 7) காலை 5.50 மணிக்குத் தொடங்கிவைக்கப்பட்டது.
பின்னர், அந்த ரயிலின் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. இந்த வந்தே பாரத் ரயிலில் முக்கியமான 10 சிறப்பம்சங்கள் அடங்கியுள்ளன. அவை குறித்து இங்கு பார்ப்போம்.

6 நாட்கள் இயக்கம்:
சென்னை – மைசூரு இடையே இயக்கப்படும் 5வது வந்தே பாரத் ரயில், வாரத்தில் ஆறு நாட்கள் இயக்கப்பட உள்ளது. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து காலை 5.50 மணிக்குப் புறப்பட்டு பெங்களூரு சிட்டி சந்திப்பை காலை 10:25 மணிக்கு சென்றடையும்.
பெங்களூருவில் இருந்து காலை 10:30 மணிக்கு புறப்பட்டு, மதியம் 12:30 மணிக்கு இறுதி இலக்கான மைசூருவை அடையும். இந்த ரயில் சுமார் 497 கிமீ தூரத்தை 6 மணி 40 நிமிடங்களில் கடக்கும்.
16 பெட்டிகள்:
இந்த ரயிலில் பல்வேறு தொழில்நுட்ப அம்சங்கள் உள்ளன. இதன் எடை 38 டன்களாகக் குறைக்கப்பட்டுள்ளது. ரயிலில் 16 பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன.
இழுவை மோட்டார்கள்:
இந்த ரயிலில் இன்ஜின் தனியாக இல்லாமல் ரயிலுடன் இணைக்கப்பட்டுள்ளது. அதிவேகமாய் செல்வதற்காக இழுவை மோட்டார் வசதியும், பாதுகாப்பான பயணத்திற்காக சஸ்பென்ஷன் வசதியும் இந்த ரயிலில் கொடுக்கப்பட்டுள்ளது.

மின்சாரம் சேமிப்பு:
வந்தே பாரத் ரயில்கள் 30 சதவீத மின்சாரத்தை சேமிக்கக்கூடியவையாக உள்ளன. மேலும், அவசர கால சூழலில் லோகோ பைலட்டும் டிரெயின் கார்டும் பயணிகளை எளிதில் தொடர்புகொள்ளும் வகையில் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
38 டன் எடை:
வந்தே பாரத் ரயிலின் எடை 38 டன்கள் குறைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் அதிவேகமாக செல்லும்போதுகூட பயணிகள் சுகமான பயணத்தை உணரலாம். தண்டவாளங்களில் இரண்டு அடிக்கு நீர் சூழ்ந்திருந்தால்கூட இந்த ரயில்கள் தொடர்ந்து பயணிக்கக்கூடியவை.
சுழலும் இருக்கைகள்:
இந்த ரயில்களின் இருக்கைகள் சாய்வு வசதிகளுடன் கூடிய குஷன் சீட்டுகளைக் கொண்டவை. நிர்வாக பெட்டிகளில் உள்ள இருக்கைகள் சுழலும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன.
கண்காணிப்பு கேமராக்கள்:
இந்த ரயிலில் பெட்டிக்கு வெளியே பிளாட்ஃபார்மை நோக்கி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இவற்றில் ரியர்வியூஸ் கேமராக்களும் அடங்கும். இதன்மூலம் பின்பக்கம் நடப்பதையும் காண முடியும். மேலும், அனைத்து பெட்டிகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

தானியங்கி கதவுகள்:
இந்த ரயிலில் உள்ள கதவுகள் அனைத்தும் தானியங்கி மூலம் செயல்படக்கூடியவை. ரயிலுக்குள் ஒரு பெட்டியிலிருந்து மற்றொரு பெட்டிக்குச் செல்லவும் தானியங்கி கதவுகளே பொருத்தப்பட்டுள்ளன. மேலும், இதில் உள்ள படிக்கட்டுகளும் உள்ளிழுக்கும் வசதியைக் கொண்டவை. இந்த படிக்கட்டுக்கள் மாற்றுத்திறனாளிகளும் சுலபமாகச் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
நவீன வசதிகள்:
மொத்த ரயில் பெட்டிகளிலும் குளிர் சாதன வசதி, வைஃபை, ஜி.பி.எஸ். எல்.சி.டி. திரை உள்ளிட்ட நவீன வசதிகள் பொருத்தப்பட்டுள்ளன. எல்.சி.டி திரை மூலம் ரயில் வழித்தடம் குறித்த விவரங்களும் பொழுதுபோக்கு அம்சங்களும் காட்சிப்படுத்தப்படும். இதுதவிர, விமானங்களில் இருக்கும் பிரத்யேக வசதிகளுள் ஒன்றான தனி நபர் விளக்குகளும் இடம்பெற்றுள்ளன.
மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு:
இந்த ரயிலில் பொதுமக்கள் மட்டுமின்றி மாற்றுத்திறனாளிகளும் பயன்படுத்தும் வகையில் நவீன கழிப்பிட வசதி உள்ளது. பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளும் அறிந்துகொள்ளும் வகையில் பிரெய்லி எழுத்து முறையிலும் இருக்கை எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
ஜெ.பிரகாஷ்