பொருளாதாரத்தில் நலிவடைந்த முற்பட்ட வகுப்பினருக்கு 10 சதவிகித இடஒதுக்கீடு செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கும் நிலையில், அது நாடு முழுவதும் விவாதத்தை ஏற்படுத்தி வருகிறது. இதற்கு திமுக எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், இந்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்படுவதற்கு முன்பே கடும் எதிர்ப்பு தெரிவித்தவர் திமுக எம்.பி. கனிமொழி.
பொருளாதாரத்தில் நலிவடைந்த முற்பட்ட வகுப்பினருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு செய்யும் அரசியல் சட்டத் திருத்தத்தை உச்ச நீதிமன்றம் கடந்த நவம்பர் 7ஆம் தேதி அங்கீகரித்து தீர்ப்பளித்தது.
இதற்கு ஆதரவும் எதிர்ப்பும் கிளம்பியுள்ளது. இந்த நிலையில், இதுதொடர்பான மசோதா, கடந்த 2019ஆம் ஆண்டு ஜனவரி மாதம், நாடாளுமன்ற இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட தருணங்கள் குறித்து இங்கு பார்ப்போம்.
அரசு வேலைவாய்ப்பு மற்றும் உயர் கல்வி நிறுவன சேர்க்கையில் உயர் சாதி ஏழைகளுக்கு (பொதுப் பிரிவினர்) 10 சதவீத இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் கோரிக்கைக்கு மத்திய அமைச்சரவை கடந்த 2019ம் ஆண்டு ஜனவரி 7ஆம் தேதி ஒப்புதல் வழங்கியது.
இதையடுத்து இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதற்காக, அரசியல் சாசன சட்டத்தின் 15 மற்றும் 16வது பிரிவில் திருத்தம் செய்து இரு அவைகளிலும் 2019ஆம் ஆண்டு மக்களவையில் ஜனவரி 8ஆம் தேதியும், மாநிலங்களவையில் 9ஆம் தேதியும் தாக்கல் செய்யப்பட்டது.
இதில் மக்களவையில் 8ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட மசோதா மீது கடுமையான விவாதம் நடைபெற்றது. மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, அதிமுக எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்தனர். பின்னர், இந்த மசோதா 323 உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது.
இதையடுத்து, இந்த மசோதாவை நிறைவேற்றுவதற்காக மாநிலங்களவை கூட்டம் ஒரு நாள் நீட்டிக்கப்பட்டது. அதன்படி, இந்த மசோதா மீது ஜனவரி 9ஆம் தேதி விவாதம் நடத்தப்பட்டது. மக்களவையைப்போலவே மாநிலங்களவையிலும் கடும் விவாதம் நடைபெற்றது.
மாநிலங்களவையிலும், இந்த மசோதாவுக்கு அதிமுகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், திமுக, ராஷ்ட்ரிய ஜனதா தளம், பிஜூ ஜனதா தளம் ஆகிய கட்சிகளும் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தன.
மசோதா மீதான விவாதத்தில் பல்வேறு கேள்விகளையும், சந்தேகங்களையும் எதிர்க்கட்சிகள் முன்வைத்தன. குறிப்பாக, தேர்தல் நெருங்குவதால் மத்திய அரசு அவசர கதியில் இடஒதுக்கீட்டு மசோதாவை கொண்டு வந்திருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.
எதிர்க்கட்சிகளின் சந்தேகங்களுக்கு பதில் அளித்துப் பேசிய மத்திய சமூக நலத்துறை அமைச்சர் தாவர்சந்த் கெலாட், ”இந்த சட்டத் திருத்தத்தால் ஏற்கெனவே வழங்கப்பட்டு வரும் 50 சதவீத இடஒதுக்கீட்டில் பாதிப்பு ஏற்படாது” என்று உறுதியளித்தார்.
தமிழகத்தில் 69 சதவிகித இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருவதை சுட்டிக்காட்டிய அதிமுக எம்.பி. நவநீதகிருஷ்ணன், இந்த மசோதாவால் தமிழகத்துக்கு பாதிப்பு என்று தெரிவித்தார்.
இந்த விவாதத்தின்போது பேசிய திமுக எம்.பி. கனிமொழி, ”10 சதவிகித இடஒதுக்கீட்டை அளிக்க மத்திய அரசு எதனால் முடிவெடுத்தது? மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் 100 நாட்கள் மட்டுமே இருக்கிறது என்பது மட்டும் புரிகிறது.
அரசியல் சட்டத் திருத்த மசோதாவான இட ஒதுக்கீடு மசோதாவை, தேர்வுக்குழுவுக்கோ, நிலைக்குழுவுக்கோ அனுப்பப்படாமல் நிறைவேற்ற முயல்கின்றனர்.
நான் இந்த மசோதாவை எதிர்க்கிறேன். நான் பெரியார் மண்ணில் இருந்து வந்திருக்கிறேன்.
எங்கள் மண்ணுக்கு 100 ஆண்டுகளுக்கும் மேலாக சமூக நீதியை அளித்த வரலாறு உண்டு. பெண்களுக்கு வாக்குரிமை அளித்த முதல் மாநிலம் தமிழ்நாடுதான். பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு அளிப்பது கருணை அடிப்படையில் அல்ல.
அது அவர்களின் உரிமை. பொருளாதார ரீதியில் நிகழும் புறக்கணிப்பு என்பதைவிட, சாதியரீதியிலான புறக்கணிப்புகள் அதிகமாக இருக்கின்றன. அவர்கள் மீதான அடக்குமுறைகள் வலுவாக உள்ளன. உங்களால் மதம் மாற முடியும், பொருளாதாரத்தையும் மாற்ற முடியும். ஆனால் சாதியை மாற்றிக் கொள்ள முடியாது” என்றார்.
அப்போது குறுக்கிட்ட மாநிலங்களவை துணை சபாநாயகர், ”உங்கள் நேரம் முடிந்துவிட்டது; உரையை முடியுங்கள்’ என இந்தியில் சொல்ல, அதற்கு கனிமொழி, “எனக்கு புரியும் மொழியில் பேச முடியுமா” எனச் சொல்ல, அதற்கு சபாநாயகர் ஆங்கிலத்தில் பதிலளித்தார்.
பின்னர் கனிமொழி, “தேர்தலுக்காக அவசரம் அவசரமாக இந்தச் சட்டத்தை மோடி அரசு கொண்டுவருகிறது. மசோதாவுக்கு எதிராக இங்கு வெகுசிலரே குரல் எழுப்பியுள்ளனர்.
அதனையும் பேசவிடாமல் தடுத்தால் எப்படி” எனக் கேட்டு தனது உரையைத் தொடர்ந்தார். அன்று திமுக எம்.பி. கனிமொழி மாநிலங்களவையில் ஆற்றிய உரை, சமூக வலைதளங்களில் வைரலானது என்பது குறிப்பிடத்தக்கது.
அவரை தொடர்ந்து பேசிய திமுக கூட்டணியின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்பி டி.கே.ரங்கராஜன், உயர்சாதி ஏழைகளுக்கான 10 சதவிகித இடஒதுக்கீட்டை ஆதரித்துப் பேசினார். அவருக்கு அருகே அமர்ந்திருந்த கனிமொழி, டி.கே.ரங்கராஜன் பேசுவதை கேட்டு ஆத்திரமடைந்தார்.
உடனே அவர் எழுந்து சென்று, “இது நியாயமா? என்ன அநியாயம் இது? நீங்கள் எப்படி இதை ஆதரிக்கலாம்” என்று ஆதங்கத்துடன் கேட்டார். ஆனால், கனிமொழி சொல்வதை ரங்கராஜன் காதில் வாங்காமல் பேசினார்.
இதைத் தொடர்ந்து, மசோதாவை நாடாளுமன்றத் தேர்வுக் குழுவுக்கு அனுப்ப வேண்டும் என்று திமுக எம்.பி. கனிமொழி வலியுறுத்தினார். இடதுசாரிக் கட்சிகளும் அந்தக் கோரிக்கையை ஆதரித்தன.
இதுதொடர்பாக திமுக கொண்டுவந்த தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடைபெற்றபோது, 18 உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்தும், 155 உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தும் வாக்களித்தனர்.
இதனால் அத்தீர்மானம் தோல்வியடைந்தது. அதேபோன்று, பிற எதிர்க்கட்சிகள் சார்பில் மசோதா மீது கொண்டுவரப்பட்ட 5 திருத்தங்களும் நிராகரிக்கப்பட்டன. இதைத்தொடர்ந்து, மசோதா மீது வாக்கெடுப்பு நடைபெற்றது.
இந்த வாக்கெடுப்பில்,165 உறுப்பினர்கள் மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்தனர். 7 உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதன்மூலம், அந்த மசோதா ஜனவரி 10, 2019ஆம் ஆண்டு மாநிலங்களவையில் நிறைவேறியது.
ஜெ.பிரகாஷ்
இலங்கை அகதி கப்பல்: சிங்கப்பூர் கடற்படையினர் மீட்பு!
இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட்: விண்ணில் எப்போது பாயும்?