பிரியாணி என்றால் அசைவம்தான் நினைவுக்கு வரும் நிலையில், அசத்தலான இந்த வெஜ் பிரியாணியையும் செய்து அசத்தலாம். கோடைக்காலத்தில் அசைவத்தைத் தவிர்க்க நினைப்பவர்களுக்கும் ஏற்ற பிரியாணியாகவும் இது அமையும்.
என்ன தேவை
பாசுமதி அரிசி – 400 கிராம்
கேரட், பட்டாணி, காலிஃப்ளவர், பேபிகார்ன், உருளைக்கிழங்கு, பீன்ஸ் கலவை – 300 கிராம் (தேவையானவற்றை நறுக்கவும்)
பெரிய வெங்காயம் – 4 (நறுக்கவும்)
தக்காளி – 2 (நறுக்கவும்)
பச்சை மிளகாய் – 5 (நறுக்கவும்)
எலுமிச்சை – ஒன்று (சாறு பிழியவும்)
புதினா, கொத்தமல்லி – ஒரு கப்
மல்லித்தூள் (தனியாத்தூள்) – 3 டீஸ்பூன்
இஞ்சி – பூண்டு விழுது – 2 டீஸ்பூன்
சீரகத்தூள் – 2 டீஸ்பூன்
கரம் மசாலாத்தூள் – அரை டீஸ்பூன்
மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்
பெருஞ்சீரகம் – ஒரு டீஸ்பூன்
கிராம்பு – 8
அன்னாசிப்பூ – 3
பிரியாணி இலை – 2
ஏலக்காய் – 12
பட்டை – 5 துண்டுகள்
எண்ணெய், உப்பு – தேவையான அளவு
எப்படி செய்வது
பாசுமதி அரிசியைக் கழுவி தண்ணீரில் 10 முதல் 20 நிமிடங்களுக்கு ஊற வைக்கவும். அடுப்பில் குக்கரை வைத்துச் சூடானதும் எண்ணெய்விட்டு கிராம்பு, ஏலக்காய், பெருஞ்சீரகம், பிரியாணி இலை, அன்னாசிப்பூ, பட்டை ஆகியவற்றை சில விநாடிகளுக்கு வதக்கவும். பிறகு, நறுக்கிய பச்சை மிளகாய், வெங்காயத்தைச் சேர்த்து நன்றாக வதக்கியதும் தக்காளி, இஞ்சி – பூண்டு விழுது சேர்க்கவும். அடுத்து புதினா, கொத்தமல்லி சேர்த்து வதக்கவும். பிறகு, கரம் மசாலாத்தூள், சீரகத்தூள், மல்லித்தூள், மஞ்சள்தூள், உப்பு சேர்க்கவும். அடுத்து நறுக்கப்பட்ட காய்கறி கலவையைச் சேர்த்து நன்றாகக் கலக்கவும். பிறகு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து ஊறவைத்த அரிசி சேர்க்கவும். குக்கரை மூடி, 10 நிமிடங்கள் குறைந்த தீயில் வைத்துச் சமைத்து, எலுமிச்சைச் சாற்றைப் பிழிந்து அடுப்பிலிருந்து இறக்கவும்.
குறிப்பு:
விருப்பப்பட்டால் இறக்கும்போது 10 முந்திரிப்பருப்புகளைச் சேர்த்துக் கொள்ளலாம்.
தேங்காய்ப்பால் சேர்க்க விருப்பப்படுபவர்கள் பாதி தேங்காயை எடுத்து, சிறிய துண்டுகளாக்கவும். சிறிது தண்ணீர் சேர்த்து நன்றாக அரைக்கவும். அதை ஒரு மெல்லிய துணி அல்லது சல்லடை மூலம் வடிகட்டிச் சேர்க்கலாம்.
சோயா சங்ஸ் சேர்க்க விரும்புபவர்கள் 15 சோயா துண்டுகளைத் தண்ணீரில் 5 நிமிடங்கள் ஊறவைத்து எடுத்து நன்றாகப் பிழியவும். மறுபடியும் ஊற வைக்கவும். இதுபோல் மூன்று முறை செய்து எடுத்து வைத்துச் சேர்க்கலாம். இவற்றை மற்ற பொருள்களை வதக்கும்போது சேர்த்துக் கொள்ளலாம்.
அரிசி மற்றும் தண்ணீரை அளக்க ஒரே அளவு கப்பை பயன்படுத்தவும். தண்ணீர், அரிசி விகிதம் 2:1 இருக்க வேண்டும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்..
பூதாகரமாகும் இசையா? மொழியா? : மொரிஷியஸில் ஜில் செய்த இளையராஜா
இட ஒதுக்கீடு… மூங்கில் இல்லை என்றால் புல்லாங்குழல் இசைக்க முடியாது: ராகுல்
டீப் ஃபேக் வீடியோ : தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட மறுப்பு!