மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வெள்ளி, 14 ஆக 2020

குடிபோதையில் கார் விபத்து: ஆட்டோ ஓட்டுநர் பலி!

குடிபோதையில் கார் விபத்து: ஆட்டோ ஓட்டுநர் பலி!

குடிபோதையில் காரை ஒட்டி விபத்தை ஏற்படுத்தியதில் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதில் மதுபோதையில் காரை இயக்கியவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். சென்னையில் லட்சுமண் (45) என்ற ஆட்டோ ஓட்டுநர், பெண் பயணி ஒருவரை ஏற்றிக்கொண்டு நேற்று இரவு தரமணியில் இருந்து ராஜீவ் காந்தி சாலை வழியாக மத்திய கைலாஷ் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக கார் ஒன்று பயங்கர வேகத்தில் வந்துள்ளது. இந்நிலையில் நிலைதடுமாறி சென்ற கார், ஆட்டோ மீது மோதியது. இதில் ஆட்டோ தலைகீழாக கவிழ்ந்ததில், ஓட்டுநர் லட்சுமண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து காரில் பயணம் செய்த மூன்று பேர் தப்பிச் ஓடிவிட்டனர். போதையில் இருந்த ஓட்டுநரை பிடித்து அருகிலிருந்த பொது மக்கள் காவல்துறையிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதில் மதுபோதையில் காரை இயக்கியவரின் பெயர் இளையராஜா என்று தெரிய வந்துள்ளது. நண்பர்களுடன் மது விருந்தில் கலந்துகொண்டு திரும்ப வீடு சென்றபோது இந்த விபத்து ஏற்பட்டது என்று தெரிவித்துள்ளார்.

மேலும் தப்பிச் சென்ற மூவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். சென்னையில் குடி போதையில் காரை ஒட்டி விபத்தை ஏற்படுத்துவது தொடர்கதையாகி வருகிறது. கடந்த ஜூலை மாதம் ஆடி கார் ஐஸ்வர்யா, மதுபோதையில் சொகுசுக் காரை இயக்கி முனுசாமி என்ற தொழிலாளி மீது மோதியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். கடந்த ஆகஸ்ட் மாதம் நடிகர் அருண் விஜய், நிகழ்ச்சி ஒன்றில் கலந்துவிட்டு பின் வீடு திரும்பும்போது காவல்துறை வாகனம் மீது மோதி விபத்தை ஏற்படுத்தினார். கடந்த மாதம் ராதாகிருஷ்ணன் சாலையில் சட்டக்கல்லூரி மாணவர் சொகுசுக் காரை இயக்கி விபத்தை ஏற்படுத்தியதில் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் உயிரிழந்தார். இதுபோன்று சென்னையில் குடிபோதையில் காரை இயக்கி விபத்தை ஏற்படுத்துவது அடிக்கடி நிகழ்ந்து வருகிறது. இதில் பாதிக்கப்படுவது அப்பாவி மக்கள் மட்டும்தான்.

நம் நாட்டில் குடிபோதையில் காரை ஒட்டி விபத்தை ஏற்படுத்தியவர்களுக்கு ஓட்டுநர் உரிமம் ரத்து, செய்யப்படும் அல்லது ஆயுள் தண்டனை விதிக்கப்படும் என்று பல சட்டங்கள் இருந்தாலும் இதுபோன்ற விபத்துகள் அடிக்கடி நிகழ்வது குறிப்பிடத்தக்கது.

செவ்வாய், 25 அக் 2016

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon