தமிழகத்தில் தருமபுரி மாவட்டம், வாச்சாத்தியில் நிகழ்ந்த 18 பெண்கள் கற்பழிக்கப்பட்ட சம்பவம் நடந்து முடிந்து இன்றுடன்(ஜூன் -22) 25 ஆண்டுகள் ஆகின்றன. தீர்ப்புவெளிவந்து ஆறு ஆண்டுகள் ஆகின்றன. ஆனால், பாதிக்கப்பட்டவர்களுக்கு இன்றும் நிதியுதவி வழக்கப் படவில்லை என்பது தான் துயரத்தின் உச்சம்.
தருமபுரி மாவட்டத்தில் உள்ள மலைக்கிராமம் வாச்சாத்தி. இங்கு வசித்து வந்த மலைவாழ் மக்கள் மீது 1992ஆம் ஆண்டு, சந்தன மரங்களை வெட்டிக் கடத்துவதாகக் குற்றம் சாட்டப்பட்டது. இந்தக் குற்றச்சாட்டை ஒரு துருப்புச்சீட்டாகப் பயன்படுத்தி, அந்தாண்டு ஜூன்- 20ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை அரசு வனத்துறையினர், வருவாய்துறையினர் மற்றும் காவல்துறையினர் என மொத்தம் 269 ஊழியர்கள் வாச்சாத்தி மலைக்கிராமத்தில் புகுந்து, பல வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டனர். இதில் அங்கு புகுந்த அரசு ஊழியர்களால் வாச்சாத்தி கிராமத்தைச் சேர்ந்த 18 இளம்பெண்கள் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டனர். மேலும், அங்கு நடந்த வன்முறையில் 34 பேர் உயிரிழந்தனர்.
இந்நிலையில் ‘வாச்சாத்தி வன்முறை வழக்கு’ 19ஆண்டுகளாக, தருமபுரி மாவட்ட நீதிமன்றத்தில் நிகழ்ந்து வந்தது. 18 பெண்கள் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட, இந்த வழக்கின் தீர்ப்பை நாடே எதிர்பார்த்து வந்தது. இறுதியில் 2011ஆம் ஆண்டு, செப்டம்பர் 29ஆம் நாள் தருமபுரி மாவட்ட அமர்வு நீதிமன்றம் வாச்சாத்தி வன்முறை வழக்கில் தீர்ப்பு வழங்கியது. இந்த வழக்கின் விசாரணை நடைபெற்றுக்கொண்டு இருக்கும்போதே இறந்த 54 பேர் உட்பட, 269 பேரும் குற்றவாளிகள் என்றும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கவேண்டும் என்றும் நீதிபதி பரபரப்பு தீர்ப்பு வழங்கினார். வரலாற்றில் துயரத்தை அனுபவித்த மக்களுக்கு கிடைத்த ஆறுதலான தீர்ப்பு என, இத்தீர்ப்பை பலரும் கொண்டாடினர்.
ஆனால், இன்று வரை பல்வேறு காரணங்களைக் கூறி, 25 பேருக்கு வழங்கப்படவேண்டிய இடைக்கால நிவாரணத்தொகை 42 லட்ச ரூபாயை வழங்காமல் நிலுவையில் வைத்திருக்கிறார்கள் சம்பந்தப்பட்ட, தமிழக அதிகாரிகள். பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு வேலை வாய்ப்பும் வழங்கப்படவில்லை என்பது தான் வேதனையின் உச்சம். வன்முறை நடந்து முடிந்து, 25 ஆண்டுகள் ஆகியும் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறிதளவுகூட அரசு உதவி கிடைக்கப்பெறாதது தான், வாச்சாத்தி மலைக்கிராமத்தில் வசிக்கும் மக்களின் இன்றைய நிலையும் கூட.
இதுகுறித்து வாச்சாத்தி கிராமத்தைச் சேர்ந்த செல்வி கூறுகையில், ‘ வாச்சாத்தி கிராமத்தைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட பெண்களுக்குத்தரவேண்டிய நிலுவைப்பணத்தை தரணும். அரசாங்கம் அவர்களுக்கு வாழ்வாதாரத்தை தரும் வேறு ஏதாவது உதவி செய்யணும்’ என்றார்.
இதுதவிர சாலை வசதி, பேருந்துவசதி, குடிநீர் வசதி, மின்சார வசதி ஆகிய பிரச்னைகளும் வாச்சாத்தியில் இன்றும் தீர்க்கப்படவில்லை.
இதுகுறித்து மார்க்சிஸ்ட் மாவட்டச் செயலாளர் குமார் கூறுகையில்,’ வாச்சாத்தியில் இன்றும் உட்கட்டமைப்பு வசதி சரிவர இல்லை. நகரப் பேருந்து வசதி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அது மீண்டும் தொடங்கப்பட வேண்டும்’ என்றார்.
நீதிக்காக 19ஆண்டுகளாக காத்திருந்த வாச்சாத்தி மக்கள், நிதி கிடைக்கவும்,ஊரின் அடிப்படை வசதிகளைப் பெறவும் கடந்த ஆறு ஆண்டுகளாக அலைக்கழிக்கப்படுகிறார்கள்.
இன்னும் எத்தனை காலத்துக்கு அரசு, வாச்சாத்தி மக்களுக்கு சாக்குபோக்கு சொல்ல காத்திருக்கிறதோ..?
– ம.மாரிமுத்து�,