ஜனவரி 22 ஆசிரியர்களுக்கு விடுமுறை!

Published On:

| By Balaji

தமிழ்நாட்டில் வரும் சனிக்கிழமை (ஜனவரி 22) ஆசிரியர்களுக்கு விடுமுறை வழங்குவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

இது தொடர்பாக,பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், “கொரோனா பெருந்தொற்று காரணமாக மாணவர்களின் நலன் கருதி 1 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு மட்டும் ஜனவரி 31ஆம் தேதிவரை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.மேலும்,பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்ட நாட்களில் ஆசிரியர்களுக்கு பயிற்சி வகுப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில்,மாணவர்கள் இன்றி பள்ளிகள் செயல்படுவதால் ஜனவரி 22 அன்று சனிக்கிழமை பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்படுகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் பள்ளிக் கல்வித் துறை ஆணையருக்கு எழுதிய கடிதத்தில்,”கொரோனா காரணமாக மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில், ஆசிரியர்களும் தினமும் பள்ளிக்கு வர வேண்டும் என்று பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. பள்ளிகளில் மாணவர்கள் இல்லையெனில் ஆசிரியர்களுக்கும் வேலை இல்லை. மாணவர்களே இல்லாத சூழ்நிலையில் ஆசிரியர்கள் யாருக்கு கற்பிக்கப் போகிறார்கள். வேறு சில நிர்வாக பணிகளில் ஆசிரியர்களை பயன்படுத்தவேண்டும் என்று விரும்பினால் கூட அதற்காக ஒட்டு மொத்த ஆசிரியர்களையும் தினமும் வரவழைப்பது அவசியம் இல்லை. சுழற்சி முறையில் ஆசிரியர்களை பள்ளிக்கு வரவழைக்க வேண்டும். சனிக்கிழமைகளில் அனைத்து ஆசிரியர்களுக்கும் விடுமுறை அறிவிக்கவேண்டும். ஆசிரியர்களுக்கு தற்போது வழங்கப்படும் அனைத்து பயிற்சிகளையும் தற்காலிகமாக ஒத்திவைக்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

**-வினிதா**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share