ஹிஜாப் வழக்கு: இருவேறு தீர்ப்பு!- அடுத்து என்ன?

இந்தியா

ஹிஜாப் அணிந்து வருவதற்கு தடை விதித்தது செல்லும் என்று ஒரு நீதிபதியும், செல்லாது என்று மற்றொரு நீதிபதியும் தீர்ப்பளித்துள்ளனர்.

கல்வி நிறுவனங்களில் மாணவிகள் தங்கள் விருப்பத்தின்படி ஹிஜாப் அணிந்து வருவதற்கு கர்நாடக மாநில அரசு தடை விதித்தது.

இதனை எதிர்த்து இஸ்லாமிய மாணவிகள் தொடர்ந்த வழக்கில் மாநில அரசின் தடை செல்லும் என்று கர்நாடக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இரு நீதிபதிகள் விசாரணை!

இதை எதிர்த்து 6 முஸ்லீம் மாணவிகள் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.

இந்த வழக்கினை ஹேமந்த் குப்தா, சுஷாந்த் துலியா ஆகிய இரு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்தது.

தொடர்ந்து 10 நாட்கள் விசாரணை நடந்த நிலையில், கடந்த மாதம் 22ஆம் தேதி இருதரப்பு வாதங்கள் முடிந்த நிலையில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.

அதன்படி வழக்கின் தீர்ப்பு நேற்று வாசிக்கப்பட்டது. அப்போது இரண்டு நீதிபதிகளும் தனித்தனியே தீர்ப்புகளை வழங்கினர்.

ஹிஜாப்க்கு எதிரான தடை செல்லும்!

நீதிபதி ஹேமந்த் குப்தா தனது தீர்ப்பில், “விசாரணையின் போது 11 கேள்விகளின் வழியே ஹிஜாப் வழக்கை அணுகியிருந்தேன்.

ஹிஜாப் அணிவது கட்டாய மத நடவடிக்கையா? வகுப்பறையில் அவற்றை அணிவதை உரிமையாக கேட்க முடியுமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

கேள்விக்கான பதில்கள் அரசு சார்பில் முறையாக அளிக்கப்பட்டுவிட்டன. இதனால் மனுதாரரின் மேல்முறையீடு மனு நிராகரிக்கப்படுகிறது.

ஹிஜாப் உடுத்திச் செல்வதற்கு மாநில அரசு மற்றும் கர்நாடக உயர்நீதிமன்றம் விதித்துள்ள தடை செல்லும்” என்று தெரிவித்தார்.

கர்நாடக மாநில அரசின் உத்தரவு ரத்து!

மற்றொரு நீதிபதி சுஷாந்த் துலியா தனது தீர்ப்பில், “ஹிஜாப் அணிவது இஸ்லாமிய மதவழக்கத்திற்கு உட்பட்டதா? இல்லையா? என்ற கேள்வி தேவையற்றது.

கர்நாடகா உயர்நீதிமன்றம் தவறான பாதையைத் தேர்ந்தெடுத்து விட்டது. மத சம்பிரதாயத்தை கடைப்பிடிப்பது என்பது அவரவர் விருப்பம்.

ஹிஜாப் அணிவதற்கு தடை விதிப்பது இந்திய அரசியலமைப்பு சாசனம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளுக்கு முரணானது.

அனைத்துக்கும் மேலாக, பெண் குழந்தைகள் கல்வி கற்பதற்கான உகந்த சூழலை நாம் உருவாக்குகிறோமா? என்ற கேள்வி முக்கியத்துவம் பெறுகிறது.

நம் நாட்டில் ஏற்கனவே கிராமங்கள் மற்றும் சிறு நகரங்களில் மாணவியர் படிப்பதற்கு பல பிரச்னைகளை சந்திக்க வேண்டியுள்ளது. இந்நிலையில், நாம் அவர்களுக்கு நல்லது செய்கிறோமா என்பதே எனக்கு எழுந்த கேள்வி.

இதனால் ஹிஜாப் அணிவதற்கு தடை விதித்த கர்நாடக மாநில அரசின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. கட்டுப்பாடுகள் நீக்கப்படுகின்றன” என்று தெரிவித்தார்.

இரு நீதிபதிகளும் வெவ்வேறு தீர்ப்பை வழங்கியுள்ளதால், கூடுதல் நீதிபதிகள் உள்ள அமர்வு இவ்வழக்கினை விசாரிக்க தலைமை நீதிபதிக்கு பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.

இருவேறு தீர்ப்புகளுக்கு பின் நடப்பது என்ன?

ஒரு வழக்கில் ஒருமனதாக அல்லது பெரும்பான்மைத் தீர்ப்பின் மூலம் அமர்வு முடிவுக்கு வராதபோது இருவேறு தீர்ப்புகள் வழங்கப்படுகின்றன.

அமர்வில் சம எண்ணிக்கையிலான நீதிபதிகள் இருக்கும்போது மட்டுமே இருவேறு தீர்ப்புகள் வழங்கப்படும்.

இதனால்தான் பொதுவாக முக்கிய வழக்குகளுக்கு ஒற்றைப்படை எண்கள் (மூன்று, ஐந்து, ஏழு, முதலியன) வரிசையில் நீதிபதிகள் அமர்வு அமைக்கபடும்.

இருப்பினும் டிவிஷன் பெஞ்ச்கள் என்று அழைக்கப்படும் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வில் வெவ்வேறு தீர்ப்புகள் வழங்கப்பட்டால், வழக்கை அதிக நீதிபதிகள் கொண்ட பெரிய அமர்வு விசாரிக்கும். அதனை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமைப்பார்.

இருவேறு தீர்ப்புடன் முந்தைய வழக்குகள்!

1.கடந்த மே மாதம், டெல்லி உயர் நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு இந்திய தண்டனைச் சட்டத்தில் திருமண பலாத்காரத்திற்கு வழங்கப்பட்ட விதிவிலக்கை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்களில் இருவேறு தீர்ப்பை வழங்கியது.

ஐபிசியின் 375வது பிரிவின் (பாலியல் வன்கொடுமை தொடர்பானது) விதிவிலக்கு அரசியலமைப்பிற்கு முரணானது என்று நீதிபதி ராஜீவ் ஷக்தேர் கூறினார், அதே நேரத்தில் நீதிபதி சி ஹரி சங்கர் அந்த விதி செல்லுபடியாகும் என்று கூறினார்.

2. கடந்த 2018ம் ஆண்டு டிடிவி தினகரனின் ஆதரவாளர்கள் 18 எம்எல்ஏக்களையும் தகுதி நீக்கம் செய்தது தொடர்பான வழக்கில் சென்னை உயர் நீதிமன்ற அப்போதைய தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி மற்றும் நீதிபதி சுந்தர் ஆகியோர் மாறுபட்ட தீர்ப்பை அளித்தனர்.

இதையடுத்து இந்த வழக்கை விசாரிக்க நியமிக்கப்பட்ட மூன்றாவது நீதிபதி சத்திய நாராயணன், 18 எம்எல்ஏக்களை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்தது செல்லும் என தீர்ப்பளித்தார்.

தலைமை நீதிபதி ஓய்வு!

இதற்கிடையே தற்போதைய தலைமை நீதிபதி யு.யு.லலித், அடுத்தமாதம் 9ம் தேதி ஓய்வு பெறுகிறார். அதற்கு முன், புதிய அமர்வு அமைக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

அவ்வாறு அமைக்கப்படும் புதிய அமர்வின் மூலமே ஹிஜாப் வழக்கிற்கு முடிவான தீர்ப்பு கிடைக்கும்.

கிறிஸ்டோபர் ஜெமா

கல்லூரி மாணவி கொலை: தந்தை மரணத்தில் திருப்பம்!

மூடுவிழா கண்ட கார்ட்டூன் நெட்வொர்க்: ஆழந்த வருத்தத்தில் 90s கிட்ஸ்!

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *