75ஆவது சுதந்திர தினத்தையொட்டி நாட்டின் பல்வேறு இடங்களிலும் தேசியக்கொடி ஏற்றுவது மற்றும் பிரம்மாண்ட தேசியக்கொடி அணிவகுப்பு தொடங்கி இருக்கிறது.
ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ் அதாவது சுதந்திர தின அமுதப் பெருவிழாவாக கொண்டாட மத்திய அரசு முடிவு செய்து அதன்படி வீடுகளில் 3 நாள் தொடர்ந்து கொடியேற்றுபடி கேட்டுக்கொண்டது. அந்த வகையில் பாஜக தலைவர்கள் பலரும் தங்கள் வீடுகளில் தேசியக்கொடி ஏற்றியுள்ளனர்.
தமிழகத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள தனது வீட்டில் தேசியக்கொடி ஏற்றினார்.
தமிழ் திரையுலக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேற்றே கொடி ஏற்றிய நிலையில் கேரள சூப்பர் ஸ்டார் மோகன்லால் இன்று தனது வீட்டில் கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார்.
இதேபோன்று இளைய தளபதி விஜய்யின் மக்கள் இயக்கம் அலுவலகத்திலும் தேசியக்கொடி ஏற்றப்பட்டு இருக்கிறது.
மங்களூருவில் சாலை ஒன்றில் தேசியக்கொடி பேரணி நடந்தபோது, முதியவர் ஒருவர் செருப்பை கழட்டி வைத்துவிட்டு பேரணி முடியும் வரை மரியாதை செலுத்தியபடி நின்றிருக்கும் வீடியோ அனைவரின் கவனத்தையும் ஈர்த்து இருக்கிறது.
சுதந்திர தின விழாவின் ஒரு பகுதியாக தமிழ்நாட்டின் கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் பாறையில் இந்திய ராணுவம் சார்பில் 75 அடி நீள தேசியக் கொடி வரையப்பட்டு இருக்கிறது.
இந்திய விமானப்படையோ தேசியக் கொடியை விண்ணில் பறக்க வைத்து மரியாதை செய்து இருக்கிறது.
ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் ஒரு கிலோ மீட்டர் நீளமுடைய தேசியக்கொடியை வடிவமைத்த பாஜக நிர்வாகிகள் அதனை பேரணியாக எடுத்துச் சென்று மக்களின் கவனத்தை ஈர்த்தனர்.
ஆந்திராவில் பல்வேறு இடங்களில் ஏபிவிபி கட்சியினர் நீளமான தேசியக்கொடியை பிடித்தபடி பேரணி நடத்தினர்.
இரண்டு கால்களும் இல்லாத இளைஞர் ஒருவர் கம்பு ஒன்றின் மீது ஏறி தேசியக்கொடி போன்று பறந்து காட்சியளித்த வீடியோ காண்போரை மெய்சிலிர்க்க வைக்கிறது.
மத்தியப்பிரதேசத்தில் குறுகிய சாலை ஒன்றில் நூற்றுக்கணக்கான இஸ்லாமியர்கள் தேசியக்கொடியுடன் திரண்டு மரியாதை செலுத்தினர்.
விவசாயிகள் தங்களது தேசப்பற்றைக் காட்டும்படி தாங்கள் வளர்க்கும் மாடுகளின் கொம்புகளில் மூவர்ணக் கொடியை தீட்டி பெருமைப்படுத்தி இருக்கின்றனர்.
இதேபோன்று நாடு முழுவதும் பலரும் பல்வேறு வடிவங்களில் சுதந்திர தின அமுதப் பெருவிழாவினைக் கொண்டாடத் தொடங்கியிருக்கின்றனர்.
கலை.ரா
கடன் வசூலிக்க கட்டுப்பாடு விதித்த ரிசர்வ் வங்கி!