தலைமை நீதிபதி முரளிதர் பணியிடமாற்றம் பரிந்துரை நிறுத்திவைப்பு : இது முதல் முறையல்ல!

தமிழகம்

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக, ஒடிசா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி முரளிதரை மாற்றம் செய்வதற்கு மத்திய அரசு இன்னும் அனுமதி வழங்கவில்லை.

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த முனீஸ்வர்நாத் பண்டாரியின் பதவிக்காலம் முடிவடைந்ததை அடுத்து, பொறுப்பு தலைமை நீதிபதியாக துரைசாமி பதவி ஏற்றார்.

அவரது பதவிக் காலமும் கடந்த செப்டம்பர் 21ஆம் தேதியுடன் முடிவடைந்ததை அடுத்து தற்போது பொறுப்பு தலைமை நீதிபதியாக டி.ராஜா உள்ளார்.

இந்நிலையில், கடந்த செப்டம்பர் 28ஆம் தேதி உச்ச நீதிமன்ற கொலீஜியம் ஜம்மூ காஷ்மீர் உயர் நீதிமன்ற நீதிபதி பங்கஜ் மித்தாலை, ராஜஸ்தான் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும்,

ஒடிசா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியான எஸ்.முரளிதரை சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகவும் பரிந்துரைத்தது.

இந்நிலையில் கொலீஜியம் பரிந்துரைத்தபடி மத்திய சட்டத் துறை நேற்று (அக்டோபர் 11) பங்கஜ் மித்தாலை ராஜஸ்தான் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும்,

ஜம்மு காஷ்மீர் உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்த அலி முகமது மேக்ரேவை அதே நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகவும்,

மும்பை உயர் நீதிமன்ற நீதிபதி பிபி வாரலேவை கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும் நியமித்துள்ளது.

ஆனால் ஒடிசா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.முரளிதரை சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக மாற்றுவதற்கான பரிந்துரையை நிறுத்தி வைத்துள்ளது.

யார் இந்த எஸ்.முரளிதர்?

எஸ்.முரளிதர் தனது வழக்கறிஞர் பணியை 1984ஆம் ஆண்டு சென்னையில் தொடங்கினார். 1987ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்திலும், டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றினார்.

போபால் விஷவாயு கசிவால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் நர்மதா அணை கட்டுமானத்தால் சொந்த நிலத்தில் இருந்து வெளியேற்றப்பட்டவர்களுக்காக இலவசமாகவும், குறைந்த தொகையைப் பெற்றுக்கொண்டும் வாதாடியிருக்கிறார்.

Law, Poverty and Legal Aid: Access to Criminal Justice என்ற புத்தகத்தையும் எழுதியுள்ளார்.

2006 இல் டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்ட அவர் ஓரினச்சேர்க்கையை முதன்முதலில் சட்டப்பூர்வமாக்கிய உயர் நீதிமன்ற நீதிபதிகளின் அமர்வில் ஒருவராக இருந்தவர்.

1984 சீக்கியர்களுக்கு எதிரான கலவர வழக்கில் காங்கிரஸ் தலைவர் சஜ்ஜன் குமாரை குற்றவாளி என்று 2017ஆம் ஆண்டு தீர்ப்பளித்த டெல்லி உயர் நீதிமன்ற டிவிஷன் பெஞ்சிலும் இடம் பெற்றிருந்தார்.

2020ல் டெல்லியில் குடியுரிமை திருத்தச் சட்ட மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இந்த வன்முறை வழக்கை விசாரித்த நீதிபதி முரளிதர், பாஜகவை சேர்ந்த கபில் மிஸ்ரா, அனுராக் தாக்கூர், பிரவேஷ் வர்மா ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்டார்.

அதோடு, “1984ஆம் ஆண்டு டெல்லியில் நிகழ்ந்த சம்பவத்தை போன்று மற்றொரு நிகழ்வு மீண்டும் நடைபெற விடமாட்டோம்” என்றும் கூறியிருந்தார்.

இந்த உத்தரவைத் தொடர்ந்து பஞ்சாப் – ஹரியானா உயர் நீதிமன்றத்திற்குப் பணி இடமாற்றம் செய்யப்பட்டார்.

பாஜக தலைவர்களுக்கு எதிராக உத்தரவு பிறப்பித்ததால் தான் அவர் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டார் என அப்போது பரபரப்பாக பேசப்பட்டது.

இதையடுத்து 2021 ஜனவரி மாதம் ஒடிசா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக மாற்றம் செய்யப்பட்டார்.

இந்நிலையில் தான் 2022 செப்டம்பர் 28ஆம் தேதி, சென்னை உயர் நீதிமன்றத்துக்கு அவரை இடம் மாற்றம் செய்ய கொலீஜியம் பரிந்துரைத்து, அதற்கு அனுமதி வழங்காமல் வைத்துள்ளது மத்திய சட்டத்துறை.

இதுமுதன் முறை அல்ல

முன்னதாக 2014ஆம் ஆண்டு, முன்னாள் சொலிசிட்டர் ஜெனரல் மற்றும் மூத்த வழக்கறிஞர் கோபால் சுப்பிரமணியத்தை உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க கொலீஜியம் பரிந்துரை செய்தது. அதனை மத்திய அரசு நிராகரித்தது.

2018ல், உத்தரகாண்ட் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த கே.எம்.ஜோசப்பை உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க வேண்டும் என்ற கொலீஜியத்தின் பரிந்துரையை மறுபரிசீலனை செய்யும்படி திருப்பி அனுப்பியது மத்திய அரசு.

2019ல் குஜராத் உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்த அகில் குரேஷியை மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்க கொலீஜியம் பரிந்துரைத்தது. ஆனால் இதனை ஏற்க மத்திய அரசு மறுத்தது.

இதையடுத்து அவர் திரிபுரா உயர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டு 2019 நவம்பர் முதல் 2021 அக்டோபர் வரை பணியாற்றினார்.

இவ்வாறு உச்ச நீதிமன்ற கொலீஜியத்தின் பரிந்துரையை அரசாங்கம் நிறுத்தி வைப்பதோ, அனுமதி வழங்க மறுப்பதோ முதன்முறை அல்ல.

பிரியா

வேலைவாய்ப்பு : தமிழ்நாடு மருத்துவத் துறையில் பணி!

காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

+1
0
+1
0
+1
2
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *