’இந்தியாவில் வாழ விரும்பினால், மோடி, யோகிக்கு வாக்களியுங்கள்’: ஆர்பிஎஃப் வீரரின் வீடியோ வைரல்!

Published On:

| By christopher

rpf jawan chetan singh threatening

ஜெய்ப்பூரில் இருந்து மும்பைக்கு நேற்று (ஜூலை 31) சென்ற ரயிலில் பாதுகாப்பு படை போலீஸ்காரர் (RPF)  ஒருவர் 4 பேரை சுட்டுக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் அவர் ’இந்தியாவில் வாழ விரும்பினால் மோடி,  யோகிக்கு மட்டும் வாக்களியுங்கள்’ என்று பயணிகளை மிரட்டும் வீடியோ வரைலாகி வருகிறது.

ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் இருந்து மகராஷ்டிராவின் மும்பைக்கு தினமும் ஜெய்ப்பூர் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. வழக்கம்போல் ஜுலை 30 மதியம் 2 மணிக்கு அந்த எக்ஸ்பிரஸ் ரயில் ஜெய்ப்பூரில் இருந்து மும்பை நோக்கி புறப்பட்டது.

ரட்லம், வதோதரா, சூரத் வழியாக அந்த ரயில் மும்பையை நெருங்கி கொண்டு இருந்தது. அதிகாலை 5.20 மணிக்கு மும்பையில் இருந்து சுமார் 100 கிலோ மீட்டர் தொலைவில்  உள்ள பல்கர் ரயில் நிலையம் அருகே சென்று கொண்டிருந்த போது,  பி5 ரயில் பெட்டியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ரயில்வே பாதுகாப்புப்படை போலீஸ்காரர் சேத்தன் சிங்கிற்கும்(34), அவரது உயர் அதிகாரியான சப்-இன்ஸ்பெக்டர் டிகா ராம் மீனாவுக்கும் (57) இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த சேத்தன் சிங் கண் இமைக்கும் நேரத்துக்குள் தனது துப்பாக்கியால் டிகா ராம் மீனாவை சரமாரியாக சுட்டார். இதனால் பயங்கர அலறல் சத்தத்துடன் ரத்த வெள்ளத்தில் சரிந்த அவர் சம்பவ இடத்திலேயே  உயிரிழந்தார்.

சத்தம் கேட்டு திடுக்கிட்ட பயணிகள் அங்கிருந்து தப்ப முயற்சித்த சேத்தனை பிடிக்க முயற்சித்தனர். அதனால் பி5 கோச்சில் இருந்த பயணி ஒருவரை தனது துப்பாக்கியால் சுட்டார். தொடர்ந்து பி5 மற்றும்பி6 பெட்டிகளுக்கு இடையில் இருந்த பேண்ட்ரி காரில் இருந்த ஒருவரையும், பி6 பெட்டியில் இருந்த மற்றொரு பயணியையும் அடுத்தடுத்து சுட்டுக் கொன்றார். இதில் மூவருமே ரத்த வெள்ளத்தில் துடிக்க துடிக்க சரிந்து ஓடும் ரயில் உயிரிழந்தனர்.

கண் இமைக்கும் நேரத்துக்குள் 4 பேரை அடுத்தடுத்து அந்த ரயில்வே போலீசாரே சுட்டுக் கொன்றதால் மற்ற பயணிகள் உதவி கேட்டு அலறினார்கள்.

இதற்கிடையே பல்கர் ரயில் நிலையத்தை கடந்து தகிசர் ரயில் நிலையம் அருகில் அந்த ரயில் மெல்ல சென்று கொண்டிருந்தபோது சேத்தன் சிங் ரெயில் பெட்டிக்குள் இருந்த சங்கிலியை பிடித்து இழுத்தார். ரயில் நின்றதும் அவர் துப்பாக்கியுடன் ரயிலில் இருந்து இறங்கி மீரா சாலையில் ஓட்டம் பிடித்தார். ஆனால் அதற்குள் மற்ற ரயில்வே பாதுகாப்புப்படை போலீசார் அவரை சுற்றி வளைத்து பிடித்து கைது செய்து, துப்பாக்கியையும் உடனடியாக பறிமுதல் செய்தனர்.

இதற்கிடையே ஓடும் ரயிலில் நடந்துள்ள இந்த அதிர்ச்சி சம்பவத்தின் போது பயணிகள் எடுத்த  வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ட்விட்டரில் வெளியிடப்பட்ட அந்த வீடியோவில், கைதாகியுள்ள சேத்தன் தனது கையில் துப்பாக்கியை வைத்துக்கொண்டு நிதானமாக பயணிகளை பார்த்து மிரட்டுவது போல் தெரிகிறது. அவர், தான் கொன்றவர்கள் பாகிஸ்தானுடன் தொடர்புடையவர்கள் என்றும், இந்தியாவில் வாழ விரும்புபவர்கள் மோடி மற்றும் யோகிக்கு மட்டுமே வாக்களிக்க வேண்டும் என்றும் அவர் கூறுவது கேட்கிறது.

மேலும் சேத்தன் சிங்கின் கால்களுக்கு அருகில் இரத்த வெள்ளத்தில் சுடப்பட்ட ஒரு பயணி உயிருக்கு போராடுவதையும் வீடியோவில் காண முடிகிறது.

https://twitter.com/asadowaisi/status/1686192470323847168

இறந்த பயணிகளில் மூவருமே இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்தவர்கள். இறந்த பயணிகள் அப்துல் காதர்பாய் முகமது ஹுசைன் பன்புர்வாலா (48), அக்தர் அப்பாஸ் அலி (48) மற்றும் சதர் முகமது உசேன் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து ஆர்.பி.எஃப் காவலரின் இந்த செயலுக்கு பின்னால் பல்வேறு யூகங்கள் எழுந்து வருகின்றன. எனினும் தற்போது கைதாகி போரிவலி காவல் நிலையத்தில் அடைக்கப்பட்டுள்ள சேத்தன் சிங் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில், போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கிறிஸ்டோபர் ஜெமா

மாஸ்கோ மீது தாக்குதல்: போரை நிறுத்தும் முயற்சியில் சவுதி அரேபியா!

அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை!

”நாங்கள் சாத்தானின் பிள்ளைகளா?”: சீமானுக்கு எதிராய் கொதித்த ஜவாஹிருல்லா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share