ரஷ்ய தலைநகர் மாஸ்கோ மீது உக்ரைன் ஆளில்லா விமானம் (டிரோன்) மூலம் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து பாதுகாப்பு காரணங்களுக்காக மாஸ்கோ விமான நிலையம் ஒன்று மூடப்பட்டுள்ளது.
இந்தப் போரை நிறுத்த இரு நாடுகளும் பேச்சுவார்த்தையில் ஈடுபடும்படி பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வரும் நிலையில் இதற்கான ஏற்பாடுகளை சவுதி அரேபியா அரசாங்கம் செய்து வருகிறது.
2022 பிப்ரவரி மாதம் ரஷ்யா, தனது அண்டை நாடான உக்ரைனை ஆக்ரமித்தது. இதைத் தீவிரமாக எதிர்த்து, அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் உதவியோடு உக்ரைன் போரிட்டு வருகிறது.
போர் தொடங்கி 18 மாதங்கள் கடந்து சுமார் 525 நாட்கள் ஆன நிலையில் இரு தரப்பும் மாறி மாறி தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் இரு நாடுகளிலும் பலத்த சேதங்களும் உயிர் பலிகளும் தொடர்கின்றன.
இந்த நிலையில் ரஷ்யா மீதான உக்ரைனின் டிரோன் தாக்குதல்கள் சென்ற வாரம் தீவிரமடைந்தது. நேற்று முன்தினம் ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோ மீது டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டது.
இதில் ஒருவர் காயமடைந்தார். மேலும், இரண்டு கட்டடங்கள் சேதமடைந்தன. இதனால் மாஸ்கோவில் செயல்படும் வனுகோவோ விமான நிலையம் மூடப்பட்டது.
இந்தத் தாக்குதல்கள் குறித்து உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி தனது மக்களுக்கு ஆற்றிய உரையில், “ரஷ்யாவின் எல்லைக்குள் போர் நுழைந்து விட்டது. ரஷ்யாவின் அடையாள சின்னங்கள், ராணுவ தளங்கள் இலக்குகளாகும். இது ஒரு தவிர்க்க முடியாத ஆனால், இயற்கையான செயல்முறை. உக்ரைன் வலுப்பெற்று வருகிறது.
இருந்தாலும் ரஷ்ய தீவிரவாதிகள் நமது எரிசக்தி கட்டமைப்பைத் தாக்கக்கூடும். எனவே நாம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்” என்று பேசினார்.
இந்த தாக்குதல்கள் நேட்டோ நாடுகளும், அமெரிக்காவும் உக்ரைனுக்கு உதவியதால் நடந்திருக்கின்றன என ரஷ்யாவின் வெளியுறவுத் துறை தெரிவித்திருக்கிறது. இதற்கிடையே ரஷ்யா கைப்பற்றிய கிரிமியாவின் மீது உக்ரைன் நடத்திய 25 டிரோன் தாக்குதல்களை வெற்றிகரமாக முறியடித்ததாக ரஷ்யா அறிவித்துள்ளது.
தொடர்ந்து நடைபெற்று வரும் இந்தப் போர் காரணமாக ஏற்றுமதி பாதிக்கப்பட்டதால் உணவுப் பொருட்களில் விலை தாறுமாறாக உயர்ந்தது.
இது உலக பொருளாதாரத்திலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. எனவே போரை நிறுத்த இரு நாடுகளும் பேச்சுவார்த்தையில் ஈடுபடும்படி பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதற்காக உச்சி மாநாடு ஒன்றை நடத்த உக்ரைன் முடிவு செய்தது.
இதற்காக கடந்த மே மாதம் நடைபெற்ற அரபு லீக் மாநாட்டில் உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி கலந்து கொண்டார்.
அப்போது “போர் தொடங்கியது முதல் அரபு நாடுகள் நடுநிலை வகித்து வருகின்றன. எனவே, இந்தப் போரை நிறுத்த பேச்சுவார்த்தைக்கு வழிவகை செய்ய உதவ வேண்டும்” என்று அவர் கேட்டுக்கொண்டார்.
அதன்படி இதற்கான ஏற்பாடுகளை சவுதி அரேபியா அரசாங்கம் செய்து வருகிறது. இந்த மாநாடு செங்கடல் அருகே உள்ள துறைமுக நகரமான ஜெட்டாவில் நடைபெற உள்ளது.
இதில் உக்ரைன், பிரேசில், இந்தியா உட்பட சுமார் 30 நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.
மேலும் அமெரிக்கா சார்பில் ஜனாதிபதி ஜோ பைடனின் உயர் மட்ட அதிகாரி ஒருவரும் கலந்து கொள்ள உள்ளார். அதே நேரம் இந்த மாநாட்டில் ரஷ்யா பங்கேற்குமா என்பது உறுதி செய்யப்படவில்லை.
மேலும், இதற்கான தேதி உள்ளிட்ட மற்ற விவரங்கள் எதுவும் குறிப்பிடப்படவில்லை. எனினும் இந்த மாநாடு போரை நிறுத்த உதவுமா என உலக நாடுகள் எதிர்நோக்கி உள்ளன.
நெம்மேலி குடிநீர்: மேலும் 9 லட்சம் பேர் பயனடைவார்கள் – சிவ்தாஸ் மீனா
WI vs IND: நீயா! நானா! ஒரு நாள் கோப்பை யாருக்கு?