’ஆகாசவானி செய்திகள் வாசிப்பது சரோஜ் நாராயண சுவாமி….’ இப்படி ஒரு குரலை கேட்காமல் 1980, 90 களில் எந்தத் தமிழர் வீடும் விடிந்திருக்காது. வானொலியே மிக பிரதானமான ஊடகமான அந்த கால கட்டத்தில் காலை 7.15 க்கு ஒலிக்கும் ஆகாசாவானி செய்திகளின் வாசிப்பாளர்களில் ஒருவர்தான் சரோஜ் நாராயண சுவாமி.
டெல்லி அகில இந்திய வானொலியில் தமிழ் செய்தி வாசிப்பாளராய் 30 ஆண்டுகளுக்கும் மேல் பணியாற்றிய சரோஜ் நாராயண சுவாமி, இன்று (ஆகஸ்ட் 13) மும்பையில் காலமானார்.
அழகால் அடையாளம் காட்டப்பட்டவர்களுக்கு மத்தியில் குரலால் அறியப்பட்டவர்கள் பலருண்டு. அதில் ஒருவர் டெல்லி ஆகாச வானொலி நிலையத்தில் செய்தி வாசிப்பாளராகப் பணியாற்றிய சரோஜ் நாராயண சுவாமி.
அவருடைய கம்பீரக் குரலோடு ஒன்றிப் போனவர்கள் பலருண்டு. இன்றைக்கு அறிவியல் உலகம் வளர்ந்திருக்கிறது. கையிலே உலகம் விரிந்திருக்கிறது.
ஆனாலும், 1980 காலக்கட்டத்தில் வானொலியே கதி என நம்பிக் கிடந்தவர்கள்தான் அதிகம். அதிலும் சரோஜ் நாராயண சுவாமி போன்ற கணீர் குரலைக் கேட்பதற்காக தவங்கிடந்தவர்கள் அதிகம். அவர் செய்தி வாசிக்க ஆரம்பித்துவிட்டால், அனைவரும் கேட்பதற்காக ரேடியோவின் சத்தம்கூட அதிகமாக வைக்கப்படும்.
ரேடியோ இல்லாதவர்கள்கூட அவருடைய குரலைக் கேட்பதற்காக அக்கம்பக்கத்து வீட்டுக்கு படையெடுப்பார்கள். அல்லது வீதியில் இருக்கும் டீக்கடைக்குச் செல்வார்கள்.
எப்படி, ஒரு சினிமா நடிகைக்கு, விளையாட்டு வீரருக்கு ரசிகர்கள் அதிகமாக இருக்கிறார்களோ, அதுபோல் சரோஜ் நாரயண சுவாமிக்கு என நேயர்கள் இருந்த காலகட்டம் 1980 ஆகும்.
அதிலும், அவர், ’செய்திகள் வாசிப்பது சரோஜ் நாராயண சுவாமி…’ என்று சொல்லும் அழகே தனி அழகுதான். அவருடைய குரலால் அனைவரையும் இழுத்துக்கொண்ட காந்தசக்தி அவர்.
காவிரி தண்ணீர் காரணம்!
அப்படிப்பட்ட சரோஜ் நாராயண சுவாமியின் முன்னோர்கள் நஞ்சையும் புஞ்சையும் கலந்த தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். ஆனால், சரோஜோ, மும்பையில் பிறந்து வளர்ந்தவர்.
ஆங்கில இலக்கியத்தில் பி.ஏ முடித்தவர். என்றாலும், தமிழ் என்பது அவருக்கு தேன்சுவையாக இருந்தது. அதற்கு, தன் தாயார் குடித்த காவிரி தண்ணீரும், தமிழ் சினிமாவும், பாரதியாரின் கவிதைகளுமே காரணம் என ஒரு பேட்டியில் சொல்லியிருக்கிறார், சரோஜ்.
அதனால்தான் சரோஜியின் வானொலி பயணத்தில் அதுவே வழிகாட்டியாகவும் அமைந்திருக்கிறது. வாழவைத்தும் அழகு பார்த்திருக்கிறது. ஆரம்பத்தில் வங்கி ஒன்றில் வேலை பார்த்த அவர், பின்னாளில் டெல்லி அகில இந்திய வானொலிக்குள் நுழைந்திருக்கிறார்.
அதில் படிப்படியாக உயர்ந்த பதவிகளை அடைந்த அவர், செய்தி வாசிப்பை ஆத்மா போன்று நேசித்தார். தவிர, அவருக்குக் கீழிருக்கும் பணியாளர்கள் செய்தி வாசிப்பதில் தவறு செய்தாலும் அதைத் திருத்திக்கொள்ளச் சொல்வார்.
“செய்தி வாசிப்பாளருக்கு ஒரு மொழியியல் அறிஞரைப்போல மொழியைப் பற்றித் தெரிந்துகொள்ளும் ஆர்வம் இருக்க வேண்டும்” என்று சொன்ன அவர், “செய்தி வாசிப்பில் பிறநாட்டு வார்த்தைகள் வந்தால், அதற்கு நன்கு அர்த்தம் தெரிந்தபின்னரே பயன்படுத்த வேண்டும்” என்றார்.
இந்திராகாந்தியே சிறந்த பெண்மணி!
அத்துடன், ”இன்று செய்தி வாசிக்கும் சில பேர் உச்சரிப்பில் தவறு செய்கிறார்கள்” என்று சொன்ன அவர், “அதிலும் ழ, ல, ள, எழுத்துகளின் வித்தியாசம் பலருக்கும் தெரியாமல் இருப்பது வருத்தத்தை அளிக்கிறது” என்றார்.
ஆங்கிலம், ஹிந்தியிலிருந்து பிராந்திய மொழியில் மொழிபெயர்க்க வேண்டும் என்பதற்காக அதிகாலை 3.30 மணிக்கே அலுவலகத்துக்கு வந்துவிடக்கூடிய நபராக அவர் இருந்திருக்கிறார்.
டெல்லியில் கடும் குளிர் நிலவினாலும், அவரது காந்தக் குரல் எந்தவிதத்திலும் பாதிக்கப்பட்டதில்லை. ”இது தன்னுடைய அதிர்ஷ்டம்” என்கிறார், சரோஜ்.
ஒருமுறை மறைந்த திரைப்பட இயக்குநர் கே.பாலசந்தர், சரோஜ்ஜிடம் “திருமணத்துக்கு முன்பும் நீங்கள் இப்படித்தான் கர்வமா இருப்பீர்களா?” எனக் கேட்டுள்ளார். அதற்கு சரோஜ், ”கல்யாணத்துக்கு முன்பு கர்ப்பமாவதுதான் தப்பு. கர்வமா இருப்பதில் தவறில்லை” என்று சொன்னதைக் கேட்டு கே.பாலசந்தரே திகைத்து நின்றாராம்.
அப்படியான சரோஜ், முன்னாள் பிரதமர்களான மொரார்ஜி தேசாய், இந்திரா காந்தி, பி.வி.நரசிம்மராவ் உள்ளிட்ட பலரை பேட்டியெடுத்திருக்கிறார். இந்திராகாந்தியால் கவர்ந்திழுக்கப்பட்ட சரோஜ், அவரே தன்னைக் கவர்ந்த சிறந்த பெண்மணி என தெரிவித்துள்ளார்.
30 ஆண்டுகளுக்கும் மேலாக அகில இந்திய வானொலியில் பணியாற்றி ஓய்வுபெற்ற, சரோஜ் இன்று (ஆகஸ்ட் 13) முழுமையாக பூமியைவிட்டே விண்ணுலகத்துக்குச் சென்றுவிட்டார்.
அறிவியல் மாற்றத்தால் ஆயிரம் பொருள்கள் விற்பனைக்கு வந்து பழைமையை அழித்தாலும், சரோஜ்ஜின் குரல் என்றும் காற்றில் ஒலித்துக்கொண்டுதான் இருக்கும். அந்தக் குரலில் நிகழ்கால செய்தி வாசிப்பாளர்களுக்கான பாடம் ஆயிரக்கணக்கில் பொதிந்திருக்கும்!
ஜெ.பிரகாஷ்
ஆகஸ்ட் 15: ஐந்து அடுக்கு பாதுகாப்பு வளையத்தில் சென்னை