விக்ரம் வசூல் எவ்வளவு: உதயநிதி

entertainment

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில் நடிப்பில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது `விக்ரம்’ திரைப்படம்.

படத்தின் வெற்றியை அதற்குக் காரணமானவர்களுடன் கொண்டாடும் வகையில் சென்னையில் உள்ள மெட்ராஸ் கிளப்பில் நிகழ்ச்சி ஒன்று நேற்று (ஜூன் 17) இரவு 7 மணிக்கு நடைபெற்றது.

இதில் நடிகர் கமல்ஹாசன், இயக்குநர் லோகேஷ் கனகராஜ், உதயநிதி ஸ்டாலின், இசையமைப்பாளர் அனிருத் மற்றும் படத்தை உலகம் முழுவதும் வெளியிட்ட வினியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் விக்ரம் திரைப்படத்தின் தமிழ்நாடு வினியோகஸ்தர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், “கமல் சார் இப்படத்தை எனக்குத்தான் முதலில் போட்டுக் காண்பித்தார். அப்போதே தெரியும் படம் வெற்றிபெறும் என்று, ஆனால் இப்படி மாபெரும் வெற்றிபெறும் என்று நினைத்துப்பார்க்கவில்லை.

இன்னும் ஆறு வாரங்கள் வரை ஓடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வாரங்களில்கூட தியேட்டர்களில் மக்கள் டிக்கெட் கிடைக்காமல் உள்ளார்கள். நான் தினமும் என் வேலையை முடித்து வந்தவுடன் இப்படத்தைப் பார்ப்பேன். இப்போது ‘கைதி’ பார்த்துக்கொண்டிருக்கிறேன். கமல் சாருடன் படம் எடுக்க வாய்ப்பு கிடைத்துவிட்டது என்று ஏதோவொரு படம் எடுக்கலாம் என்று எடுக்காமல், பொறுமையாகக் கமல் சாரின் உண்மையான ரசிகனாக இருந்து நல்ல படம் கொடுத்ததற்காக லோகேஷ் கனகராஜுக்கு நன்றி. அடுத்தப்படமும் வெற்றிப்படமாக அமைய வாழ்த்துகள்” என்றார்.

மேலும் படத்தின் ஆடியோ வெளியீட்டில் ‘விக்ரம்’ என்னும் ரயிலில் கடைசியாக ஏறியவன் நான் என்று கூறினேன். என்னை மன்னித்துவிடுங்கள். ‘விக்ரம்’ படம் ரயில் அல்ல ராக்கெட்” என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

தமிழ் சினிமாவில் “சக்ஸஸ் மீட்” நடத்திய எந்த திரைப்பட தயாரிப்பாளரும் வசூல் விபரங்களை அறிவித்தது இல்லை. பத்திரிகையாளர்கள் கேள்வியாகக் கேட்டாலும் தவிர்த்துவிடுவார்கள். தமிழ்நாட்டில் தொடர்ந்து முன்னணி நடிகர்கள் நடித்த படங்களை வெளியிட்டு வரும் ரெட் ஜெயண்ட் நிறுவனம் வெற்றிபெற்ற படங்களின் வசூல் விபரங்களைப் பொதுவெளியில் அறிவித்தது இல்லை. ஆனால் நேற்றைய விக்ரம் படத்தின் வெற்றி விழா நிகழ்ச்சியில் தமிழ்நாட்டில் விக்ரம் படத்தின் இரண்டு வார வினியோகஸ்தருக்கான வருவாய் 75 கோடி ரூபாய் என உதயநிதி ஸ்டாலின் அறிவித்தார்.

**-இராமானுஜம்**

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *