மேக்கப் போடாமல் நடிப்பது போலவே, சினிமாவில் நடிக்கும் போது கவர்ச்சியான உடைகளை தேர்ந்தெடுக்காதது ஏன் என்பது குறித்து நடிகை சாய்பல்லவி பேசியுள்ளார்.
மலையாளத்தில் வெளியான ‘பிரேமம்’ படம் மூலமாக பரவலாக அறியப்பட்டவர் நடிகை சாய்பல்லவி. இவர் மருத்துவம் படித்திருந்தாலும் நடிப்பு மற்றும் நடனம் மீது கொண்ட ஆர்வம் காரணமாக சினிமாவிற்குள் நுழைந்தார். தன் தங்கையை விட தான் நிறத்தில் சற்று கூடுதலாக இருப்பதால், அவளுக்குள் எப்போதுமே தாழ்வு மனப்பான்மை இருக்கும் எனவும் அதனாலேயே சினிமா மற்றும் பொது வெளியில் மேக்கப் போடுவதை தவிர்ப்பதாகவும் முன்பு ஒரு பேட்டியில் சொல்லி இருந்தார் சாய் பல்லவி.
அது போல, இப்போது ஊடகம் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில் தான் சினிமாவில் ஏன் கவர்ச்சியாக நடிப்பதில்லை, அது போன்ற உடைகளை ஏன் தேர்ந்தெடுப்பது இல்லை என்பது பற்றி சாய் பல்லவி மனம் திறந்து இருக்கிறார். அவர் கூறியிருப்பதாவது, ‘எங்களது குடும்பம் பாரம்பரியமானது. நானும் என் தங்கையும் பேட்மிட்டன் விளையாடும் போது எங்களுக்கு விருப்பமான உடைகளையே தேர்ந்தெடுப்போம். ஆனால், அப்படியான உடைகள் சினிமாவில் போட வேண்டாம் என நான் முடிவெடுக்க ஒரு சம்பவம் காரணமாக அமைந்தது. என் படிப்பிற்காக ஜார்ஜியா போன போது அங்கு டேங்கோ நடனம் கற்றேன். அதற்கு அணிய வேண்டிய ஸ்கின்னி உடையை என் பெற்றோர் அனுமதியோடு அணிந்தேன். ஆனால், நான் சினிமாவிற்குள் வந்ததும் அந்த வீடியோ வைரல் ஆகி மிக மோசமான கமெண்ட்டுகளை நான் சந்தித்தேன். அதனால், இனி அந்த உடை அணிய கூடாது என்று முடிவெடுத்தேன்” என்று கூறியுள்ளார் சாய் பல்லவி.
**ஆதிரா**