சினிமாவில் கதாநாயகி கதாபாத்திரத்தில் இருந்து விலகி விட்ட ஜோதிகா சமூக அவலம், கல்வி சார்ந்த துறைகளில் நடைபெறும் அத்துமீறல், ஊழல்களை அம்பலப்படுத்தும் கதைகளின் கதாநாயகியாக திரையுலகில் மறுபிரவேசம் செய்தார்.
தமிழ் சினிமாவில் 30 ஆண்டுகளுக்கு முன்பு தெலுங்கு படங்கள் அதிகளவில் தமிழில் டப்பிங் செய்யப்பட்டு ரிலீஸ் செய்யப்படும். தமிழ் சினிமா நிராகரித்த நடிகை விஜயசாந்தி அநீதிகளை தட்டிக் கேட்கும் கதாபாத்திரங்களில் நடித்த தெலுங்கு டப்பிங் படங்கள் இங்கு வசூலை குவித்தன. தனித்துவமிக்க நாயகியாக தமிழ் சினிமா ரசிகர்களால் ஆராதிக்கப்பட்டார்.
அதேபோன்று தமிழ் சினிமாவில் வெற்றிபெற்ற நாயகிகளால் தங்களை அடையாளப்படுத்தும் படங்களில் நடிக்க இயலவில்லை. அந்த வெற்றிடத்தை நிரப்புகின்ற முயற்சியில் ஜோதிகா முன்நிறுத்தப்பட்டார். அந்த முயற்சியில் முழுமையான வெற்றியை ஜோதிகா இன்றுவரை பெற இயலவில்லை. இவர் நடிப்பில் வெளியான 36 வயதினிலே(2015), மகளிர் மட்டும்(2017), காற்றின் மொழி, ராட்சசி(2018), ஜாக்பாட்(2019) ஆகிய படங்களில் ஜோதிகா தனித்துவம், ஆளுமை மிக்க கதாபாத்திரமாக முன்நிறுத்தப்பட்ட திரைக்கதை கொண்டவை.
இவற்றில் எந்தவொரு படமும் சூப்பர்ஹிட் வெற்றியைப் பெறவில்லை. இருந்தபோதிலும் தன் முயற்சியில் சற்றும் தளராத சூர்யா-ஜோதிகா தம்பதியினர் எடுத்திருக்கும் அடுத்த முயற்சிதான் ‘பொன்மகள் வந்தாள்’. கொரோனா வைரஸ் காரணமாக தேசிய ஊரடங்கு அமுலுக்கு வந்ததால் திட்டமிட்ட காலத்தில் படத்தை வெளியிட முடியாமல் போனது.
சூர்யா-ஜோதிகாவுக்கு சொந்தமான 2D எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பு என்பதால் பொன்மகள் வந்தாள் படத்தின் வியாபாரத்தை தங்கள் விருப்பப்படி செய்ய முடியும் என்பதால் நேரடியாக அமேசான் பிரைம் OTT தளத்தில் ரிலீஸ் செய்ய ஒப்பந்தம் செய்யப்பட்டது. இதற்காக அமேசான் பிரைம் கொடுத்திருக்கும் தொகை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
பொன்மகள் வந்தாள் படத்தின் பட்ஜெட் 5 கோடி என கூறப்படுகிறது. அமேசான் பிரைம் படத்தின் உரிமைக்கு கொடுத்த விலை 9 கோடி என்கின்றனர். படத்தயாரிப்புக்கான முதலீட்டுடன் ஒப்பிடுகிறபோது 80% லாபம் தயாரிப்பாளருக்குக் கிடைத்திருக்கிறது. இந்த அளவு லாபம் திரையரங்குகளில் வெளியிடுவதன் மூலம் கிடைக்கும் என்பதற்கு எந்தவிதமான உத்திரவாதத்தையும் திரையரங்குகளால் வழங்க முடியாது.
படத்தயாரிப்புக்கான முதலீட்டு தொகையில் தொலைக்காட்சி உரிமை, வெளிநாட்டு உரிமை, பிற உரிமைகள் மூலம் பொன்மகள் வந்தாள் படம் 2.5 கோடி ரூபாய் அளவுக்கு வருமானம் ஈட்ட முடியும். எஞ்சிய 2.5 கோடி ரூபாய் திரையரங்கு வெளியீட்டின் மூலம் பெற வேண்டும்.
ஜோதிகா நடித்துள்ள படம் அவுட்ரேட் அடிப்படையில் வியாபாரம் செய்ய முடியாது, விநியோக முறையில் திரையிட வேண்டியிருக்கும். 2.5 கோடி அசலை கைப்பற்ற வெளியீட்டு செலவாக 3 கோடி ரூபாய் அளவுக்கு தயாரிப்பாளர் கெளரவம் கருதி செலவு செய்ய வேண்டும்.
எதிர்பார்த்த வெற்றி கிடைக்காத நிலை ஏற்பட்டால் மொத்த முதலீட்டையும் தயாரிப்பாளர் இழக்க வேண்டியிருக்கும். சினிமாவைப் பொறுத்தவரை படத்தில் நடித்தவர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்கங்கள், விளம்பர நிறுவனங்கள் அனைவரும் தங்களுக்கான ஊதியத்தை, கட்டணத்தை தயாரிப்பாளரிடம் இருந்து பெற்று விடுவார்கள்.
படம் வெற்றிபெறாத நிலையில் முழு நஷ்டத்திற்கும் தயாரிப்பு நிறுவனமே பொறுப்பாகிறது. இந்த யதார்த்த நிலை திரையரங்க உரிமையாளர்களுக்கு தெரிந்திருந்தும் பொன்மகள் வந்தாள் படம் OTT தளத்தில் நேரடியாக வெளியிடப்படுவதற்கு கடும் எதிர்ப்பு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் தரப்பில் கிளம்பியது. ஜோதிகா- சூர்யா தரப்பில் சம்பந்தபட்டவர்கள் பங்களிப்பு உள்ள திரைப்படங்களை திரையரங்குகளில் வெளியிட மாட்டோம் என எச்சரிக்கப்பட்டது. திரையரங்கு – தயாரிப்பாளர்களுக்கு இடையில் இருந்து வரும் வியாபார நட்பு மதிக்கப்படவில்லை என விமர்சனங்கள் எழுந்தன. திரையரங்க உரிமையாளர்கள், விநியோகஸ்தர்களால் ஒட்டுமொத்த சூர்யா குடும்பமும் நாலாந்தர வார்த்தைகளால் விமர்சிக்கப்பட்டனர். இதனை கட்டுப்படுத்த வேண்டிய, ஒழுங்கு படுத்த வேண்டிய திரையரங்க உரிமையாளர் சங்க நிர்வாகிகள் மௌனம் காத்தனர்.
சூர்யாவுக்கு ஆதரவாக பேசுவதாக கூறிக்கொண்டு விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள் மீது தங்களுக்கு இருந்த கோபம், வக்கிரத்தை வாட்ஸ் அப் குழுக்களில் நாலாந்தர வார்த்தைகளால் கொட்டித் தீர்த்தனர் தயாரிப்பாளர்கள். தலைமையில்லாத தயாரிப்பாளர்கள் சிதறு தேங்காயாக சிதறிக்கிடப்பதால் இதனை கட்டுப்படுத்துவது யார், எப்படி என்பது தெரியாமல் பிற தயாரிப்பாளர்கள் தவித்தனர்.
இவை அனைத்தும் எந்தவித விளம்பர செலவும் இன்றி ‘பொன்மகள் வந்தாள்’ திரைப்படம் நேரடியாக OTT தளத்தில் மே 29 அன்று வெளியாகும் செய்தி உலகம் முழுவதும் சென்றடைய செய்திருக்கிறது. வழக்கமாக புதிய படங்களை அமேசான் பிரைம் வெளியிடுவதற்கு முன்பு படம் என்ன விலைக்கு வாங்கப்படுகிறதோ அதில் 50% அளவு விளம்பரத்துக்காக செலவிடப்படும் என கூறப்படுகிறது.
இந்தப் படத்திற்கு அதனை செய்யப் போவதில்லை என அமேசான் நிறுவனம் முடிவெடுத்திருப்பதாகக் கூறப்படுகிறது. ‘தாங்கள் விளம்பரம் செய்திருந்தால் கூட இந்தளவு வெகுஜன மக்களுக்கு ‘பொன்மகள் வந்தாள்’ படம் அமேசான் பிரைமில் வருவது தெரிந்திருக்காது’ என அந்நிறுவனம் கருதுவதாக கூறப்படுகிறது.
ஊர்கூடி தேரை இழுத்து வந்து நிலை நிறுத்துவது போல் ஆதரவாளர், எதிர்ப்பாளர் என இரு தரப்பும் ‘பொன்மகள் வந்தாள்’ படத்தை பொது வெளியில் பிரபலப் படுத்தியிருக்கிறார்கள்.
இது போன்ற சாதக மான சூழல், வியாபாரம் அனைத்து தமிழ் படங்களுக்கும் கிடைத்து விடாது என்பதை தமிழ் பட தயாரிப்பாளர்கள் அறிந்து கொள்ளும் காலம் வெகு தொலைவில் இல்லை. முதலில் வந்தவருக்கு முதல் மரியாதை என்பது ‘பொன்மகள் வந்தாள்’ படத்திற்கு கௌரவமான கரன்சி மழையை அமேசான் பிரைம் பொழிய காரணமானது.
அமேசான் பிரைம் இப்படத்தின் மூலம் தமிழ்பேசும் மக்களிடம் தங்களுக்கான அறிமுக சந்தாதாரர்களை அதிகரிக்கும் முயற்சியை மேற்கொண்டுள்ளது. இதுவரை தமிழ் சினிமாவில் புதிய படங்களின் டிஜிட்டல் உரிமையை வாங்குவதற்கு கடுமையான நெருக்கடிகளை எதிர்கொண்டது. தயாரிப்பு நிறுவனங்களில் அமேசான் பிரைம் நிறுவன அதிகாரிகள் காத்து இருந்தனர்.
தற்போதைய நிலவரப்படி நூற்றுக்கணக்கான தயாரிப்பாளர்கள் அமேசான் நிறுவன அதிகாரிகள் தரிசனத்திற்காக அவர்களது அலுவலகங்களில் காத்திருக்கின்றனர். இந்த பெருமை அனைத்தும் திரையரங்க உரிமையாளர்களையே சேரும்.
**-இராமானுஜம்**�,