சூரரைப் போற்று பாடல் மீது சட்ட நடவடிக்கை: சூர்யாவுக்கு புது சிக்கல்?

Published On:

| By Balaji

சூரரைப் போற்று படத்தில் வரும் மண்ணுருண்ட பாடல் வரிகள் மீதான புகாருக்கு உரிய நடவடிக்கை எடுக்கச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இறுதிச் சுற்று படத்தை இயக்கிய சுதா கொங்கரா, சூர்யா நடித்துள்ள சூரரைப் போற்று படத்தை இயக்கியுள்ளார். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம், சிக்யா என்டர்டெயின்மென்ட் நிறுவனத்துடன் இணைந்து இப்படத்தைத் தயாரித்துள்ளது. படத்தின் பாடல்கள், டீசர் வெளியாகி வரவேற்பைப் பெற்றன. அக்டோபர் 30ஆம் தேதி அமேசான் ப்ரைமில் படம் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சூரரைப் போற்று படத்தில், ஜி.வி.பிரகாஷ் இசையில், கே.ஏகாதேசி எழுத்தில், செந்தில் கணேஷ் குரலில்,

*மண்ணு உருண்ட மேல*

*மண்ணுருண்ட மேல*

*மனுச பைய ஆட்டம் பாரு*

*ஆ ஆ ஆட்டம் பாரு* என்ற பாடல் வெளியாகி வரவேற்பைப் பெற்றது. வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ், ரிங் டோன் என பலரது மொபைலில் இப்பாடல் ஒலித்துக்கொண்டிருக்கிறது.

இந்நிலையில் இந்த பாடலில் சர்ச்சைக்குரிய வரிகள் இடம் பெற்றதால், சூரரைப் போற்று படத்தை வெளியிட 2022 வரை தடை விதிக்க வேண்டும் என்று தருமபுரியைச் சேர்ந்த கார்த்திக் என்பவர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் கொடுத்துள்ளார்.

பாடலில் இடம் பெற்ற ‘கீழ்சாதி உடம்புக்குள்ள ஓடுறது சாக்கடையா, அந்த மேல் சாதிகாரனுக்கு ரெண்டு கொம்பு இருந்தா காட்டுங்கையா’ என்ற வரிகளைச் சுட்டிக்காட்டி, அனைத்து சாதியினரும் அமைதியாக வாழும் தமிழகத்தில் இதுபோன்ற பாடல் பிரச்சினை ஏற்படுத்தும் என்பதால், தடை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார்.

இந்த புகார் மீது நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி இளந்திரையன், முன்பு விசாரணைக்கு வந்த போது, மனுதாரரின் புகார் காவல்துறையினருக்கு வந்து சேரவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.

இதை விசாரித்த நீதிபதி, மீண்டும் காவல்துறையில் புகார் அளிக்க மனுதாரருக்கு அறிவுறுத்தி, அந்த புகாரை சட்டப்படி பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார். ஏற்கனவே சூரரைப் போற்று படம் ஓடிடியில் வெளியிடப்படும் என்று சூரியா அறிவித்ததற்குத் திரையரங்கு உரிமையாளர்கள் அதிருப்தியில் இருக்கின்றனர்.

இதைத்தொடர்ந்து நீட் தேர்வுக்கு எதிர்ப்புத் தெரிவித்து நீதிமன்ற நடவடிக்கைகளைக் குறிப்பிட்டு அறிக்கை வெளியிட்ட சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கத் தலைமை நீதிபதிக்கு, நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் கடிதம் எழுதினார். அதேசமயத்தில், உயர் நீதிமன்ற 6 முன்னாள் நீதிபதிகள் மற்றும் 25 வழக்கறிஞர்கள் சேர்ந்து, நடிகர் சூர்யா மீதான நடவடிக்கை என்பது கருத்துச் சுதந்திரத்துக்கு எதிரானது எனக் குறிப்பிட்டு அவருக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தனர்.

இந்த சூழலில் சூர்யாவுக்கு மற்றொரு சிக்கலாகச் சூரரைப் போற்று படத்துக்குத் தடை மீதான புகாருக்கு உரிய நடவடிக்கை எடுக்கச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

**-கவிபிரியா**�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel