சுருளி நல்லவனா கெட்டவனா? ஜெகமே தந்திரம் விமர்சனம் !

entertainment

மதுரையில் அட்டகாசம் செய்து கொண்டிருக்கும் லோக்கல் தாதா லண்டனுக்குச் சென்று செய்யும் வில்லத்தனங்களே ஜெகமே தந்திரம். கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தனுஷ், ஜேம்ஸ் காஸ்மோ , ஜோஜூ ஜார்ஜ் நடிப்பில் சந்தோஷ் நாராயணன் இசையில் நெட்ஃப்ளிக்ஸில் படம் வெளியாகியிருக்கிறது.

கர்ணன் படத்தின் மூலம் பெரிய ஹிட் கொடுத்த தனுஷூக்கு, இந்த வருடத்தின் இரண்டாவது ரிலீஸ். இந்தப் படத்திலும் வெற்றியைக் கொடுத்திருக்கிறாரா ? ‘ஜெகமே தந்திரம்’ படம் எப்படி இருக்கிறது?

மதுரையில் பார்ட் டைமாக புரோட்டா கடை நடத்திக் கொண்டு, முழுநேர தாதாவாக வலம்வருகிறார் நாயகன் சுருளி (தனுஷ்). வெளிநாட்டில் தாதாவாக வேலைசெய்ய வாய்ப்பு வர, லண்டன் பறக்கிறார். லண்டனில் இரண்டு டான் கும்பல் இருக்கிறது. ஒன்று, நல்ல டான். அகதியாக லண்டன் வருபவர்களுக்கு உதவி செய்யும் போராளி டான் சிவதாஸ் (ஜோஜு ஜார்ஜ்) . மற்றொருவர் மோசமான டான். அகதிகளை நாடுவிட்டு விரட்ட நினைக்கும் இனவெறிபிடித்த டான் பீட்டர் (ஜேம்ஸ் காஸ்மோ). இவர்களில் பீட்டருடன் சேர்ந்து சிவதாஸைப் போட்டுத் தள்ள திட்டம் தீட்டுகிறார் சுருளி. அதன்பிறகென்ன ஆனது, சுருளி யார் பக்கம், வீழ்ந்தது யார் ? இதற்குள் அகதிகள் பிரச்னை, தமிழ் ஈழம் என செல்கிறது திரைக்கதை.

ஒரே கதைக்குள் மூன்று கேங்ஸ்டர்கள். மூன்று பேருமே ஒவ்வொரு ரகம். சேட்டைப் பிடித்த குறும்புக்கார டான் சுருளி, எப்போதுமே சீரியஸ் டானாக ஜேம்ஸ் காஸ்மோ, முரட்டு டானான ஜோஜூ ஜார்ஜ் என தேர்ந்தெடுத்த விதம், கதைக்குள் எடுத்துச் சென்ற விதம் சூப்பர். மதுரையில் துவங்கி, லண்டனில் கேரக்டர்கள் அறிமுகம் வரைக்கும் படம் விறுவிறுவென நகர்கிறது.

மதுரை புரோட்டா மாஸ்டராக இருக்கும் சுருளியின் திருமணம், ரயிலை மறித்து செய்யும் அட்ராசிட்டி, வெடிகுண்டு வைத்து விளையாடுவது என்பதில் துவங்கி லண்டனில் கேங்ஸ்டராகும் வரைக்குமான தனுஷின் சேஞ்ச் ஓவர் என நடிப்பில் வெரைட்டிக் காட்டுகிறார் தனுஷ். மலையாள நடிகர் ஜோஜூ ஜார்ஜ் இலங்கைத் தமிழராக நடித்திருக்கிறார். ஆரம்பத்தில் வில்லனாகக் காட்டப்பட்டு, பின்கதையின் நாயகனாக மாறுகிறார். நாடுநாடாக அகதிகளாகத் திரியும் மக்களுக்கு காட்ஃபாதர் மாதிரியாக வருகிறார். இறுதியாக, டானுக்கெல்லாம் டான் போல ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ. இனவெறி கொண்ட வெள்ளையனாக வில்லத்தனத்தில் அசத்துகிறார். இப்படி, அனுபவமிக்க நடிகர்களின் நடிப்பு படத்துக்கு பலம் சேர்த்திருக்கிறது.

ஒன்றிரண்டு இடங்களில் வடிவுக்கரசி, ஐஸ்வர்யா லட்சுமி, கலையரசன், செளந்தர் ராஜா வந்துபோகிறார்கள். தனுஷூடன் படம் முழுவதும் டிராவல் பண்ணும் வாய்ப்பினால் தனித்துத் தெரிகிறார் சரத் ரவி.

கேங்க்ஸ்டர் படமென்பதால் படத்துக்கான இசையில் அசத்தியிருக்கிறார் சந்தோஷ் நாராயணன். பின்னணி இசை படத்துக்கு பெரிய பலம். மொத்தமாக 2.40 நிமிட நீளமான படமென்பதால் சில காட்சிகளில் அலுப்புத் தட்டும். அவற்றையெல்லாம் சந்தோஷின் இசை சரிசெய்கிறது. அலுப்புத் தட்டுகிறதா? நிறைய இடங்களில் தட்டுகிறது. கத்திரிக்க வேண்டிய காட்சிகள் எக்கச்சக்கம். படத்துக்கு மொத்தமாக எட்டுப் பாடல்கள் திட்டமிட்டு, இறுதியாக மூன்று பாடல்கள் மட்டுமே இடம்பெற்றிருந்தது. குறிப்பாக, புஜ்ஜி, நேத்து பாடல்கள் படத்தில் இல்லை.

கேங்ஸ்டர்களுக்கு இடையிலான மீட்டிங் சீன் வரை படம் விறுவிறுப்பாக செல்லும். அதன்பிறகு, படம் அப்படியே ஊட்டியிலிருந்து உருட்டிவிட்டது போல சரியத் துவங்கிவிடுகிறது. ஜோஜூ ஜார்ஜ் செய்யும் கடத்தல்கள் பற்றியும், நாயகியின் மகன் பெயர் வரைக்கும் தெரிந்துவைத்திருக்கும் தனுஷூக்கு யார் நல்லவன், யார் கெட்டவன் என்பது தெரியாதாம். கேங்ஸ்டர்களின் பீடி, சுருட்டு, சிகரெட் மேனரிஸங்கள், அருவா, மிஷின் கன், நாட்டுவெடி வித்தைகள் படத்தில் விஸூவல் ட்ரீட்டாக இருக்கும். ஆனால், கதையாக படம் பெரிதாக ஒட்டவில்லை.

சுருளி நல்லவனா, கெட்டவனா என்பதும் தெரியவில்லை. கொலை செய்வதைப் பொழுதுபோக்காக செய்யும் சுருளி, யாருக்காக க்ளைமேக்ஸில் சண்டைப் போடுகிறார்? ஈழத்தமிழர்களுக்காகவா, இல்லை சுயநலத்துக்காகவா என்பதும் சரியாகச் சொல்லப்படவில்லை.

ஈழத் தமிழனுக்கு தமிழன் துரோகம் செய்வது போலவும், அதே தமிழனுக்காக உதவி செய்ய முன்வருவதுமாக கதை பின்னப்பட்டிருக்கிறது. இதற்குள் இலங்கையில் நடந்த போர், அகதிகளுக்கு நடக்கும் பிரச்னைகளையும் கதைக்குள் கொண்டுவந்திருக்கிறார்கள்.

வளர்ந்த முதலாளித்துவ நாடுகளுக்குள் பல்வேறு நாடுகளிலிருந்து அகதிகளாக வரும் மக்கள், சிறப்பு அந்தஸ்துக்காகப் போராடுகிறார்கள். அவற்றை முதலாளித்துவ இனவெறியர்கள் எதிர்ப்பதும் உலகமெங்கும் நடந்துவரும் பிரச்னை. இந்த சிக்கலை படம் கையில் எடுத்து, கமர்ஷியலாக மாற்றியிருக்கிறது. அதனால், படத்தில் பேசப்பட்ட எந்த விஷயமும் உணர்வுப்பூர்வமாக இல்லை.

காட்சியமைப்புகள், நடிகர்களின் நடிப்பு, பின்னணி இசை என அனைத்தும் சரியாக அமைந்தும் கதையில் கோட்டைவிட்டுவிட்டார் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ். கதையில் அடுத்தடுத்தக் காட்சியை எளிதாக ஊகித்துவிடலாம். மேலும், அழுத்தமான கதை படத்தில் இருந்திருக்க வேண்டும் அல்லது சுவாரஸ்யமான ட்விஸ்டுகளுடனான ஸ்க்ரீன் ப்ளே இருந்திருக்க வேண்டும் . இந்த இரண்டுமே ஜெகமே தந்திரத்தில் மிஸ்ஸிங்.

இரண்டே முக்கால் மணிநேரத்தை எதற்கு செலவழித்தோம் என்பது, படம் பார்த்து முடிக்கும் போது தெரியவில்லை என்பது போன்ற உணர்வு தோன்றலாம். தனுஷ், கார்த்திக் சுப்பராஜ், ஹாலிவுட் நடிகரென படத்தில் இடம்பெற்றிருப்பதால் ரசிகர்களின் எதிர்பார்ப்பும் அதிகமாக இருக்கும். அதை பூர்த்தி செய்ய வேண்டியது இயக்குநரின் கடமை. இந்தப் படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை.

“என்ன தோக்கடிக்க ஒருத்தன் மட்டும் வருவானே… மன்னிக்கனும் மாம்சே… அட அவனும் இங்க நான் தானே!!” அப்போ புரியவில்லை. படம் வெளியானதும் தான் புரிகிறது.

**- தீரன் **

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *