sஐபிஎல்: நூறு-ஆயிரம்-பத்தாயிரம் எது பெரியது?

entertainment

இந்தியாவில் நடைபெறவிருக்கும் ஐபிஎல் 2020 சீசன் பல்வேறு சர்ச்சைகளை சந்தித்து வருகிறது. ஒவ்வொரு நாளும் ஐபிஎல் நடக்குமா, இல்லையா என்ற பதட்டத்திலேயே அதன் ரசிகர்களும், ஆர்கனைசர்களும் உறங்கச் செல்லவேண்டிய நிலைக்கு ஆளாகியிருக்கின்றனர். ஆனால், இது அவர்கள் மட்டும் கவலைப்படாமல் மொத்த இந்திய கிரிக்கெட் ரசிகர்களும் கவலைப்படவேண்டிய ஒன்று.

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் உலக கிரிக்கெட் வரலாற்றிலேயே அதிக பணம் தொடர்புடைய போட்டிகளாக மாறியிருக்கின்றன. ஒவ்வொரு வீரரையும் ஏலம் எடுக்கும் பணம், அவர் மூலம் கிடைக்கக்கூடிய ஸ்பான்சர்ஷிப் வருவாய் மற்றும் அவருக்கு செலவு செய்யவேண்டிய பணம் என பல கோடி ரூபாய்களை ஐபிஎல்-இல் ஈடுபடும் நிறுவனங்கள் செலவழிக்கின்றன. மேலும், ஐபிஎல் போட்டிகளுக்கு வாங்கப்படும் ஸ்பான்சர், மைதானத்தில் செய்யப்படும் ஏற்பாடுகள், தொலைக்காட்சி உரிமை, டிஜிட்டல் ஸ்ட்ரீமிங் உரிமை என்று பத்தாயிரம் கோடி ரூபாய்க்கும் மேலாக இந்த ஒரு சீசனில் முதலீடு செய்யப்பட்டிருக்கிறது. இவ்வளவுக்கும் தேவையான ஏற்பாடுகளை செய்தது பிசிசிஐ. ஒருவேளை ஐபிஎல் போட்டிகள் நடைபெறாமல் போனால், இந்த நஷ்டத்தை பிசிசிஐ நேரடியாக ஏற்கவேண்டியதிருக்கும். பிசிசிஐ ஒரு தனியார் அமைப்பு. இவ்வளவு குறைந்த காலத்துக்குள் ஏற்படக்கூடிய இந்த பாதிப்பு மொத்தமாக அந்த அமைப்பையே நஷ்டத்தில் தள்ளி, இந்திய கிரிக்கெட் அணி, A அணி, பெண்கள் கிரிக்கெட் அணி என அனைத்து கிரிக்கெட் பிரிவுகளின் மீதும் பாதிப்பை ஏற்படுத்துவதற்கான வாய்ப்பைக் கொடுக்கும். ஆனால், பிசிசிஐ அமைப்பினை இந்திய அரசாங்கம் அவ்வளவு எளிதாகக் கைவிடுவதாக இல்லை. எனவே, மைதானத்துக்கு ரசிகர்கள் வராமல் தொலைக்காட்சி மற்றும் ஸ்ட்ரீமிங் பிளாட்ஃபாரங்களில் மட்டும் ஒளிபரப்பிக்கொள்ள சொல்லி இந்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தியிருக்கிறது.

இதுகுறித்து சுகாதாரத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் “கொரோனா வைரஸின் பரவலைத் தடுப்பதற்காகவும், மக்களை பாதுகாப்பாக வைப்பதற்காகவும் மக்கள் அதிகளவில் கூடும் விளையாட்டுப் போட்டிகளை நடத்தவேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது. ஒருவேளை அந்த விளையாட்டுப் போட்டி தவிர்க்கமுடியாததாக இருந்தால் பார்வையாளர்கள் இல்லாமல் நடத்திக்கொள்ளுங்கள்” என்றும் கூறியிருக்கிறது. அதனடிப்படையிலேயே இந்தியா-தென்னாப்பிரிக்கா இடையிலான முதல் ஒருநாள் போட்டி பார்வையாளர்கள் அனுமதிக்கப்படாமல் நடத்தப்பட தயாரானது. ஆனால், மழை பெய்து அந்த ஆட்டத்தைக் கெடுத்துவிட்டது. அடுத்தடுத்த ஆட்டங்களில் மக்களை அனுமதிக்காமல் போட்டியை நடத்தி எப்படி இருக்கிறது என பிசிசிஐ சோதிக்கத் தயாராக இருக்கிறது. ஆனால், இவர்களுக்கு இதில் இருக்கும் மிகப்பெரிய பிரச்சினை, அப்போதும் கூட 500க்கும் மேற்பட்ட பணியாளர்கள் போட்டி நடைபெறும் மைதானத்தில் அவசர பணிகளில் ஈடுபடவேண்டியதிருக்கிறது. ஒருவேளை அவர்கள் யாருக்காவது கொரோனா நோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் ஐபிஎல் போட்டிகளை நிறுத்துவதைத் தவிர வேறு வழியே இருக்காது.

கொரோனா வைரஸால் மேலும் மக்கள் பாதிக்காமல் இருக்க ஐபிஎல் போட்டியை தடை செய்யவேண்டும் என்று சென்னையைச் சேர்ந்த அலெக்ஸ் பென்சைகர் என்ற வக்கீல் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார். இந்த வழக்கை நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று(12.03.2020) விசாரித்தது. அப்போது முப்பதாயிரத்துக்கும் மேலான மக்கள் கூடும் நிகழ்வாக ஐபிஎல் இருக்கிறது. எனவே, கொரோனா பாதிப்பிலிருந்து மக்களைக் காப்பாற்ற ஐபிஎல் போட்டியை இந்த வருடம் நடத்துவதற்கு தடைவிதிக்கவேண்டும் என்று வழக்கின் மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது குறித்து விசாரித்தனர். ஐபிஎல் போட்டியின்போது கொரோனா பாதிக்காமல் தடுக்க, என்ன மாதிரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கப்பட்டிருக்கிறது என்பதைத் தெரிவிக்க மத்திய அரசு மற்றும் பிசிசிஐ ஆகியோர் தரப்பில் சமர்ப்பிக்கக்கோரி உத்தரவிட்டு அடுத்த விசாரணை மார்ச் 23ஆம் தேதி நடைபெறும் என்று தெரிவித்தனர்.

ஐபிஎல் போட்டிகளில் பணியாற்றும், விளையாடும் நபர்களில் கிட்டத்தட்ட 35% பேர் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள். அவர்களில் பலரும் இனி தான் இந்தியாவுக்குள் வரவேண்டியதிருக்கிறது. ஒருவேளை அவர்களுக்கு விசா கிடைத்து வந்தாலும், இங்கு நிலவும் கொரோனா சூழலால் அவர்கள் பாதிக்கப்பட்டால், அவர்களது நாட்டிலும் மிகப்பெரிய பிரச்சினையாகும். நூற்றுக்கணக்கான கிரிக்கெட் வீரர்கள், பல மைதானங்களிலும் இருக்கப்போகும் ஆயிரக்கணக்கான பணியாளர்கள் ஆகியோரது உயிருக்கு முன்பு இதற்காக முதலீடு செய்யப்பட்டிருக்கும் பத்தாயிரம் கோடி பெரியதா? என்ற கேள்வியுடன் ஐபிஎல்-க்கு இந்தியா மற்றும் இதர நாடுகள் காத்திருக்கின்றன.

**-சிவா**�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *