ஷாருக்கான் வீட்டில் போதை பொருள் தடுப்பு பிரிவு விசாரணை!

Published On:

| By Balaji

தடை செய்யப்பட்ட போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் கைதாகி உள்ளார். சிறையில் உள்ள அவரை ஷாரூக்கான் சந்தித்துவிட்டு வந்த நிலையில் ஷாரூக்கான் வீடு மற்றும் நடிகை அனன்யா பாண்டே வீட்டில் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் இருந்து கோவாவுக்கு பாலிவுட் நடிகர் ஷாருக் கானின் மகன் ஆர்யன் கான் மற்றும் அவரது நண்பர்கள் கப்பலி்ல் சென்றனர். அப்போது தேசிய போதைப் பொருள் தடுப்பு படையினர் ஆர்யன் கான் உட்பட எட்டு பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவர் தாக்கல் செய்த ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனை எதிர்த்து மும்பை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த மனு வரும் 26ம் தேதி விசாரணைக்கு வருகிறது. மும்பையில் ஆர்தர் சாலையில் உள்ள சிறையில் ஆர்யன் கான் உள்ளார்.

இந்நிலையில் ஆர்யன் கானை இன்று சிறையில் சந்தித்து பேசினார் ஷாருக்கான். ஆர்யன்கான் கைதான பிறகு, தந்தை மகன் இடையே நிகழும் முதலாவது சந்திப்பு இதுவாகும். கைதிகளை சந்திக்க மஹாராஷ்டிரா அரசு அனுமதி வழங்கியதை தொடர்ந்து நடந்த இந்த சந்திப்பு சுமார் 20 நிமிடங்கள் நீடித்தது. முன்னதாக கடந்த வெள்ளிக்கிழமை அன்று தனது தந்தை மற்றும் தாயாருடன் ஆர்யன்கான் வீடியோ கால் மூலம் பேசினார்.இந்த சந்திப்பு முடிந்த சில மணி நேரங்களில் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் நடிகர் ஷாருக்கான் வீட்டிற்கு சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. ஷாரூக்கான் வீட்டிலும் போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தியதாக முதலில் செய்திகள் வெளியாகின. பின்னர் ஆர்யன் வழக்கு தொடர்பாக விசாரணை மேற்கொண்டதாக போதை பொருள் தடுப்பு பிரிவு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதேபோல் நடிகை அனன்யா பாண்டே வீட்டிற்கும் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் சென்றனர். இந்த வழக்கு தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகும் படி அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

**- இராமானுஜம் **

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel