ஐபிஎல் இன்று: தகுதி சுற்றில் மோதும் டெல்லி – சென்னை அணிகள்!

entertainment

துபாயில் இன்று (அக்டோபர் 10) இரவு 7.30 மணிக்கு நடக்கும் இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்றில் புள்ளிப் பட்டியலில் முதல் இரண்டு இடங்களைப் பிடித்த டெல்லி கேப்பிடல்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.

14ஆவது ஐபிஎல் கிரிக்கெட் திருவிழாவில் நேற்று முன்தினம் (அக்டோபர் 8) லீக் சுற்றுகள் நிறைவடைந்தன. லீக் முடிவில் முதல் நான்கு இடங்களை பிடித்த டெல்லி கேப்பிடல்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு முன்னேறியது. மும்பை, பஞ்சாப், ராஜஸ்தான், ஹைதராபாத் அணிகள் வெளியேறின.

போட்டியில் நேற்று (அக்டோபர் 9) ஓய்வு நாளாகும். இன்று (அக்டோபர் 10) துபாயில் இரவு 7.30 மணிக்கு நடக்கும் இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்றில் புள்ளி பட்டியலில் முதல் இரண்டு இடங்களை பிடித்த டெல்லி கேப்பிடல்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் கோதாவில் குதிக்கின்றன. இதில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்குள் நுழையும். தோல்வி அடையும் அணிக்கு இன்னொரு வாய்ப்பு வழங்கப்படும்.

டோனி தலைமையிலான சென்னை அணி லீக் சுற்றில் 14 ஆட்டங்களில் விளையாடி 9இல் வெற்றியும், 5இல் தோல்வியும் சந்தித்தது. இதில் கடைசி 3 ஆட்டங்களில் (ராஜஸ்தான், டெல்லி, பஞ்சாப்புக்கு எதிராக) தொடர்ச்சியாக தோல்வியைத் தழுவியது சென்னை அணியின் உத்வேகத்தை சற்று பாதித்துள்ளது. இதே மைதானத்தில் பஞ்சாப்புக்கு எதிரான முந்தைய ஆட்டத்தில் சென்னை அணி 134 ரன்னில் அடங்கியதும், இந்த இலக்கை அவர்கள் 13 ஓவர்களிலேயே எட்டிப்பிடித்ததும் கவனிக்கத்தக்கது.

இந்த சீசனில் இரண்டு லீக்கிலும் 7 விக்கெட், 3 விக்கெட் வித்தியாசங்களில் டெல்லி அணி, சென்னையைப் புரட்டியெடுத்தது. அது மட்டுமின்றி கடந்த ஆண்டும் இரண்டு லீக்கிலும் இவர்களிடம் சென்னை அணி தோல்வியைத் தழுவியது. இதனால் டெல்லி வீரர்களின் நம்பிக்கை நிச்சயம் அதிகரித்து இருக்கும். அவர்களது பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங்கின் திட்டமிட்ட வழி நடத்துதலும் டெல்லி அணியின் வீறுநடைக்கு பக்கபலமாக இருக்கிறது.

கடந்த ஆண்டு முதன்முறையாக இறுதி ஆட்டத்துக்கு வந்து தோல்வி அடைந்த டெல்லி அணி, இந்த சீசனில் முதன்முறையாகக் கோப்பையை உச்சிமுகர்ந்து விட வேண்டும் என்பதில் கங்கணம் கட்டி நிற்கிறது. அதற்குரிய முதற்படிக்கட்டாக இன்றைய ஆட்டம் அமைந்துள்ளது.

மொத்தத்தில் நிறைய இளம் வீரர்களை உள்ளடக்கிய டெல்லியின் கம்பீரம் தொடருமா அல்லது அனுபவத்தின் உருவமாகத் தென்படும் மூன்று முறை சாம்பியனான சென்னை அணியின் கை ஓங்குமா என்பதை இன்றைய ஆட்டத்தில் பார்க்கலாம்.

நாளை (அக்டோபர் 11) சார்ஜாவில் நடக்கும் வெளியேற்றுதல் சுற்றில் புள்ளிப் பட்டியலில் மூன்றாவது, நான்காவது இடங்களைப் பெற்ற பெங்களூரு-கொல்கத்தா அணிகள் சந்திக்கின்றன. இதில் தோற்கும் அணி வெளியேறும். வெற்றி பெறும் அணி, இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்றில் தோல்வி அடையும் அணியுடன் இரண்டாவது தகுதி சுற்றில் 13ஆம்தேதி மோதும். ஐபிஎல் மகுடத்துக்கான இறுதிப்போட்டி வருகிற 15ஆம்தேதி துபாயில் அரங்கேறுகிறது.

**-ராஜ்**

.

.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *